படுகொலைகளுக்கு ஆளாகும் தகவல் ஆர்வலர்கள் ( RTI )

RTI

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி காலத்தில் அரசு நிர்வாகங்களின் செயல்பாடுகள் தொடர்பான உண்மைகளை வெளிக் கொண்டு வரவும், உண்மை தன்மைகளை மக்கள் அறிந்து கொள்வதற்கும் 2005 ஆம் ஆண்டு தகவல் அறியும் உரிமை சட்டம் இயற்றப்பட்டது. இந்த சட்டம் வந்தது முதல் இன்று வரையிலும் கோடிக் கணக்கான தகவல்கள் கேட்டுப் பெறப்பட்டிருக்கின்றன. இந்த சட்டம் தகவல் அறியும் ஆர்வலர்கள் என்றொரு சமுதாயத்தையே உருவாக்கி இருக்கிறது. மறைந்த டிராபிக் ராமசாமி அவர்கள் தமிழகத்தில் தகவல் உரிமை கேட்பது, அதன்படி பொதுநல வழக்குப் போடுவதில் பிரபலமானவர். வட இந்திய மாநிலங்கள் குறிப்பாக, மகாராட்டிரத்தில் ஏராளமான நிர்வாக முறைகேடுகளை தகவல் ஆர்வலர்கள் இந்த சட்டத்தை பயன்படுத்தி பல உண்மைகளை வெளியில் கொண்டு வந்துள்ளனர். அதேநேரம், அரசு நிர்வாகத்தில் கோடிக் கணக்கில் ஊழலும் முறைகேடுகளும் நடப்பதை வெளிச்சத்துக்கு கொண்டு வந்த பலர் எதிரிகளால் கொலை செய்யப்பட்டுள்ளார்கள்.

மகாராஷ்ட்ராவில் ஆண்டுதோறும் 7 முதல் 8 லட்சம் தகவல் உரிமை மனுக்கள் தாக்கல் செய்யப்படுகின்றன. அரசு அலுவலகங்களில் தகவல்கள் கேட்கும் ஆர்வலர்கள் அதிக எண்ணிக்கையில் தாக்கப்படுவதிலும் மகாராஷ்ட்ரா தான் முதல் இடத்தில் இருக்கிறது. இந்த சட்டம் அமலுக்கு வந்த 2005 முதல் தாக்குதல், மிரட்டல் சம்பந்தமாக 75 சம்பவங்கள் இங்கு நடந்துள்ளன. இதுவரையில், 16 ஆர்வலர்கள் கொலை செய்யப்பட்டு இருக்கிறார்கள். தகவல் உரிமை சட்டத்தின் கீழ் தகவல்கள் கேட்பதற்கு இந்திய ருபாய் மதிப்பில் 10 ருபாய்க்கு முத்திரைக் கட்டணம் செலுத்த வேண்டும். படநகல் ஒன்றுக்கு இந்திய ருபாய் மதிப்பில் 2 ருபாய் கட்டணம் செலுத்த வேண்டும். ஆனால், இந்த ஆர்வலர்கள் தகவல்கள் பெறுவதற்கு தங்கள் உயிரையே கொடுத்திருக்கிறார்கள். இந்த கொலைகளுக்கு மகாராஷ்ட்ர நீதித்துறை எப்படி நீதி வழங்கப்போகிறது? குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்களா? பாதிக்கப்பட்ட குடும்பங்கள் நீதி பெறுவது மிகவும் கடினமாக உள்ளது.

மகாராஷ்ட்ராவில் கொல்லப்பட்ட 13 ஆர்வலர்களின் வாழ்வு மற்றும் போராட்டம் குறித்து அவர்கள் கொல்லப்பட்ட பிறகு இரண்டு பத்திரிகையாளர்கள் ஆய்வு செய்துள்ளனர். சிறந்த நிர்வாகம் நடத்தும் இரண்டாவது இந்திய மாநிலம் என்று 2019ல் மத்திய அரசு மதிப்பிட்ட பட்டியலில் மகாராஷ்ட்ரம் உள்ளது. ஆனால், இரு பத்திரிகையாளர்கள் தொகுத்துள்ள அறிக்கை மாநில அரசின் நிர்வாகம் படுமோசமாக இருப்பதை காட்டுகிறது. தகவல் உரிமை ஆர்வலர்கள் தாக்கப்படுவதை தடுப்பதற்கும் குற்றவாளிகளை தண்டிப்பதற்கும் கடுமையான சட்டங்களும் நீதி அமைப்பும் உடனடியாக தேவைப்படுகிறது. கொல்லப்பட்டவர்கள் அனைவரும் அரசு நிர்வாகத்தின் ஊழல்களை வெளியில் கொண்டு வந்தவர்கள்.

தகவல் ஆர்வலர்கள் மீது நடக்கும் தாக்குதல்களை தடுப்பதற்கு தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் பிரிவு 4ஐ அரசு அதிகாரிகள் திண்ணமாக அமல்படுத்த வேண்டும். அரசின் செயல்பாடுகள் மற்றும் அரசு அதிகாரிகள் உத்தேசித்துள்ள முடிவுகள் குறித்த அனைத்து தகவல்களையும் மக்களுக்கு வழங்குவது அதிகாரிகளின் பொறுப்பு என்கிறது சட்டத்தின் பிரிவு 4. இதன் மூலம் எந்தவொரு எளிய மனிதரும் அதிகாரப்பூர்வ தகவல் தொகுப்புகளில் உள்ள தகவல்களை சரிபார்த்துக் கொள்ள இயலும். அரசு அதிகாரிகள் தங்கள் இணைய பக்கங்களில் உள்ள தகவல்களை தொடர்நது புதுப்பித்து வரவேண்டும். மக்கள் கவனத்தில் இருந்து எந்தவொரு தகவலையும் மறைக்கவில்லை என்பதையும் அதிகாரிகள் உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். மக்கள் அதிகாரப்பூர்வ இணையப் பக்கங்களில் இருந்து தகவல்களை சரிபார்த்துக் கொள்ளும் போது ஊழலையும் அதிகாரிகளின் தவறான பலப்பிரயோகங்களையும் கட்டுப்படுத்த உதவலாம்.

குடிமக்களின் தகவல் பெறும் உரிமைக்கு அரசு அதிகாரிகள் மதிப்பளிப்பது அரசியல் சாசன கடமையாகிறது. இந்திய அரசமைப்புச் சட்டம், பிரிவு 19(1)(ணீ)ன் கீழ் உத்தரவாதம் வழங்கியுள்ள பேச்சு சுதந்திரம் மற்றும் கருத்துச் சுதந்திரத்துக்கான அடிப்படை உரிமைகளில் இருந்து இந்த “அரசின் தகவல்களை அறியும் உரிமை சட்டம்-2005” உருவாகி இருக்கிறது. தகவல் ஆர்வலர்கள் மீது தொடர்ந்து நடக்கும் தாக்குதல்கள் தகவல் தேடுவோர்கள் மிரட்டப்படுவார்கள், கொல்லப்படுவார்கள் என்ற செய்தியை சொல்லுகிறது. தகவல் ஆர்வலர்கள் தாக்கப்படுவது நமது அடிப்படை உரிமைகள் மற்றும் குடிமக்களின் சுதந்திரத்தின் மீது நடத்தப்படும் தாக்குதல்கள் ஆகும். ஜனநாயக மதிப்பீடுகள் மீதுள்ள அரசமைப்புச் சட்டத்தின் கடமையை முடக்கும் செயலும் ஆகும்.

தகவல் உரிமை ஆர்வலர்களுக்கு தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை அமல்படுத்தி வாழ்வு, விடுதலை மற்றும் அடிப்படை சுதந்திரங்களுக்கு அரசமைப்பு சாசனம் வழங்கி இருக்கும் உத்தரவாதங்களை மெய்ப்படுத்த அரசுக்கு இதுவே உகந்த நேரம். தகவல் உரிமை ஆர்வலர்கள் மீது நடத்தப்பட்டுள்ள தாக்குதல்கள் குறித்து அர்த்தமுள்ள விசாரணைகள் நடத்துவதை அரசியல் சாசனக் கடமையாக கருதி அரசு முன்வர வேண்டும். தாக்கியவர்கள் மற்றும் கொலையாளிகளை நீதியின் முன் நிறுத்த வேண்டும். அனைத்துக்கும் மேலே தகவல்களை மறைப்பதும் தகவல்கள் கேட்பவர்களை நசுக்குவதும் ஜனநாயக விரோத செயலாகும். அரசமைப்பு உருவாக்கும் உரிமைகளை பெறவும் அனுபவிக்கவும் நாட்டின் ஒவ்வொரு குடிமகனுக்கும் உரிமை உள்ளது. அதனை தடுக்கவோ, அச்சுறுத்தவோ எவருக்கும் உரிமை இல்லை. தகவல் கேட்டுப் பெறுபவர்களின் பாதுகாப்புக்கு அரசு தான் பொறுப்பேற்க முடியும்.

ஜி.அத்தேஷ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *