வக்ஃப் சொத்துக்களை அபகரித்து விற்று நெருப்பைத் தின்னாதீர்! M.அப்துல் ரஹ்மான் M.A., Ex MP., எச்சரிக்கை

பொறுப்புகள் வரும் போகும். அதை நான் பதவி என்ற வார்த்தையில் பயன்படுத்துவது இல்லை. பொறுப்பை அல்லது பதவியை தேடிச்செல்வது பெருமானார் முஹம்மது நபி (ஸல்) காட்டிய வழியும் அல்ல. அல்லாஹ் நாடினால் அந்த பொறுப்பு நம்மிடம் சாட்டப்படும். வழங்கப்படும் அல்ல. அந்த பொறுப்புக்கு உரியவராக இருந்து பணி செய்வது நம்முடைய கடமை.

கண்ணியமான மரியாதைக்குரியவர்கள் யார்? பெரிய பட்டம், பதவி, செல்வம், செழிப்பு, பணக்காரர்கள், எம்எல்ஏ, எம்பி, அமைச்சர்கள், பிரதமர், ஜனாதிபதி இவை அனைத்தும் நம் கண்களுக்கு தெரியக்கூடிய அலங்காரங்கள். ஆனால் குர்ஆன் இப்படி பேசுகிறது. நீங்கள் இவைகள் தாம் மரியாதைக்குரியதாக எண்ணிக்கொண்டிருக்கிறீர்கள்; அது தவறு. மரியாதை தரப்பட வேண்டும், அது வேறு விஷயம். ஆனால் எல்லா மரியாதைக்கும் உயர்ந்த மரியாதை ஒன்று உள்ளது.

‘‘ إِنَّ أَكْرَمَكُمْ عِندَ اللَّهِ أَتْقَاكُمْ ’’ அரபி தெரிந்தவர்களுக்கு தெரியும். அக்ரம் என்றால் கண்ணியத்தின் சூப்பர்லேடிவ் டிகிரி. கரீம் என்பது அந்த வார்த்தை. கபீர் என்ற வார்த்தை பெரியது. அக்பர் என்றால் மிகப்பெரியது. அல்லாஹ்வை நாம் கபீர் என்று சொல்வதில்லை. அல்லாஹூ அக்பர் என்றால் சூப்பர்லேட்டிவ் டிகிரி. அது போல கரீம் என்ற வார்த்தையின் சூப்பர்லேட்டிவ் டிகிரி அக்ரம். ‘இன்ன அக்ரமுக்கும்’ உங்களிடத்திலே யார் மிகமிக கண்ணியத்திற்குரியவர்கள் மரியாதைக்குரியவர்கள், ‘இந்தல்லாஹி அத்காக்கும்’ எல்லா நிலையிலும் அல்லாஹ்வின் மீது அச்சம் கொண்டு வாழவேண்டும். அவ்வளவு தான். அரைவரியில் அல்லாஹ் டிக்லர் செய்கிறான் கண்ணியத்திற்குரியவர்கள், மரியாதைக்குரியவர்கள் யார் என்று!

எனவே நமக்கு கிடைத்திருக்கக்கூடிய பொறுப்பு என்பது அல்லாஹ்வின் மீது அச்சம் கொண்டு செயல்படுத்தக்கூடிய பொறுப்பு. கிடைக்கக்கூடிய பதவிகளை வைத்துக்கொண்டு உலக ஆசாபாசத்திற்கு இணங்கி எத்தனை லட்சங்கள் எத்தனை கோடிகள் என்று இறங்குவோமேயானால் பார்ப்பதற்கு வேண்டுமானால் கோடிகள் இருக்கலாம்; ஆனால் பார்ப்பதும் உண்பதும் உறங்குவதும் ஹராமான வாழ்க்கையாகவே தொடரும் என்ற அச்சம் இருக்க வேண்டும். அப்படி ஹராமாக ஈட்டப்படக்கூடிய பணங்கள் செல்வங்கள் கூட உங்களோடு போகவில்லை, இஹ்லாசாக வாழக்கூடிய உங்கள் பெற்றோர்களுக்கும் ஊட்டப்படுகிறது என்றால் உங்களோடு இருப்பவர்களுக்கு நஞ்சை ஊட்டினால் எவ்வளவு பெரிய கொடூரமோ அதற்கு சமமானது. ஹராமாக அல்லாஹ்விற்கு பொருத்தமில்லாத செல்வத்தை பெற்றோர்களுக்கும் மனைவிகளுக்கும் பிள்ளைகளக்கும் கொடுப்பது நஞ்சூட்டப்படும் உவமைகளுக்கு சமம். இதை ஒரு மனிதன் உணர்ந்துவிட்டால் எதை செய்தாலும் ஹலாலாஹ செய்யவேண்டும் என்ற அச்சப்பாடு இருக்கும்.
வக்பு வாரிய தலைவர் பதவியைக்கொண்டு ஆற்ற வேண்டிய பணிகள் ஏராளம் இருக்கின்றன. நம்முடைய சமுதாயத்தில் வக்பு வாரியத்தை பற்றி தவறான கண்ணோட்டம் நிறைய இருக்கின்றன. ஆனால் எல்லாவற்றையும் தவறு என்று சொல்லி விடவும் முடியாது. குற்றச்சாட்டுகள் ஏராளம் இருக்கின்றன. அவைகளை எல்லாம் உள் வாங்கி சரி செய்ய வேண்டிய பொறுப்பு நமக்கு இருக்கிறது. நேர்மையாக நீதமாக செல்வது இந்த காலகட்டத்தில் கடினமானது தான். ஆனாலும் வக்பு வாரிய நிகழ்வுகள் எதுவாக இருந்தாலும் வெளிப்படை தன்மையோடு இருக்கும்.

வக்பு வாரியம் என்பது இடத்தினுடைய சொந்தக்காரர் அல்ல, சொந்தக்காரர் இந்த சமுதாயத்துக்காக இறைவனின் பெயரில் அர்பணித்திருக்கிறார். அவர் வக்பு செய்த இடம் அவர் பிள்ளைகளுக்கா என்றால் இல்லை. அவர் தன் பிள்ளைகளுக்கு போக இந்த சமுதாயத்துக்கு பயன்பட வேண்டும் என்று வக்பு செய்கிறார். அது போன்ற இடங்களில் நிறைய ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. அதை சில பேர் திருடி விற்று வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அது ஹராமானது. அதை லேசாக நினைத்து கொண்டிருக்கிறார்கள். அதை செய்வதன் மூலம் நெருப்பை தின்கிறார்கள். யார் அப்படி செய்கிறார்களோ அவர்களுக்கு சொல்கிறேன். அவர்கள் விழுங்குவது நெருப்பு. பார்ப்பதற்கு பணமாக இருக்கலாம். போலி தஸ்தாவேஜுகள் தயார் செய்து, போலி பட்டாக்கள் தயார் செய்து அதை விற்று சாப்பிட்டு கொண்டிருக்கிறார்கள். இப்படிப்பட்டவர்கள் தமிழ்நாடு முழுவதும் இருந்து கொண்டு தான் இருக்கிறார்கள். அவர்களுக்கு மவுத் இல்லை என்று நினைத்து கொண்டிருக்கிறார்களா? அல்லாஹ் அவர்களை கேள்வி கேட்க மாட்டான் என்று நினைத்து கொண்டிருக்கிறார்களா? இதை சீர்படுத்த வேண்டிய கடமை நமக்கிருக்கிறது. அதையெல்லாம் தாண்டி தமிழ்நாடு முழுவதும் பல மஸ்ஜித்களில் நிர்வாக சீர்கேடுகள், போட்டி, பொறாமை, சண்டை அடிதடி இதெல்லாம் செய்து கொண்டிருக்கிறார்கள்.
இறையில்லங்களை, வக்பு சொத்துக்களை, இறை அச்சத்தோடு நிர்வகிக்கும் முத்தவல்லிகள், தூய்மையான எண்ணத்தோடு செயல்படக்கூடிய நிர்வாகிகள் பலர் இருக்கிறார்கள். இதற்கு மாற்றமானவர்களும் இருக்கிறார்கள்.

மஸ்ஜிதுகளை நிர்வாகம் செய்வதென்பது எவ்வளவு பெரிய பாக்கியம் என்று நம்பில் பலபேர் மறந்தே போய்விட்டார்கள். ஒவ்வொரு பொறுப்புக்களுக்கும் கல்வி தகுதி உள்ளதை போன்று மஸ்ஜித்களை நிர்வகிக்கும் தகுதியாக என்ன என்று குர்ஆன் பேசுகிறது. அல்லாஹ் சொல்லித்தருகிறான்.

إِنَّمَا يَعْمُرُ مَسَاجِدَ اللَّهِ مَنْ آمَنَ بِاللَّهِ وَالْيَوْمِ الْآخِرِ وَأَقَامَ الصَّلَاةَ وَآتَى الزَّكَاةَ وَلَمْ يَخْشَ إِلَّا اللَّهَ

‘‘இன்னமா எஹ்முரு மஸாஜிதல்லாஹி மன் ஆமன பில்லாஹி வல்யவ்மில் ஆகிரி வஅகாமஸ் ஸலாத்த வஆதஸ்ஜகாத்த வலம் யஹ்ஸ இல்லல்லாஹ்’’ மஸ்ஜித்களை நிர்வாகிக்ககூடியவர்களாக யார் இருக்க வேண்டும் தெரியுமா?

‘மன் ஆமன பில்லாஹி வல்யவ்மில் ஆகிரி’ அல்லாஹ்வின் மீது ஈமான் கொண்டிருக்க வேண்டும், மறுமை நாளின் மீது அச்சம் கொண்டவர்களாக இருக்க வேண்டும்.
‘வஅகாமஸ் ஸலாத்த’ தொழுகையை பேணி தொழுபவராக இருக்க வேண்டும்.
‘வஆதஸ்ஜகாத்த’ அல்லாஹ் கொடுத்த நிஹ்மத்துகளை கொண்டு ஜகாத் கொடுப்பவர்களாக இருக்க வேண்டும்.
‘வலம் யஹ்ஸ இல்லல்லாஹ்’ அல்லாஹ்வை தவிர வேறு யாருக்கும் அஞ்சாதவர்களாக இருக்க வேண்டும்

மொத்தம் 5 தகுதிகள். இந்த 5 தகுதிகளை பெற்று நிர்வாகம் செய்யக்கூடியவர்கள் யார் என்று பார்த்தால் 100 ல் 5 பேர் கிடைப்பார்களா என்பது சந்தேகம் தான். இது எதார்த்தம். நான் யாரையும் குறை சொல்ல வில்லை . இங்கு வந்திருப்பவர்கள் எல்லாம் முத்தவல்லிகள். பல மஸ்ஜித்களை நிர்வாகம் பண்ணிக்கொண்டிருப்பவர்கள். உங்கள் நினைவூட்டலுக்காக உங்களிடம் சொல்ல வேண்டியது என் கடமை. ஒரு மஸ்ஜிதை நிர்வாகிக்கக்கூடியவர்களின் தகுதி இந்த 5ம் தான். பள்ளிவாசல் நிர்வாகம் பெரும்பாலும் யாருக்கு போகின்றது என்று சொன்னால் நல்ல பணபலம், அவருக்கு பின்னாடி படை பலம் இருக்கா என்பதெல்லாம் மக்களின் அளவீடாக இருக்கிறது.

அல்லாஹ் சொன்ன இந்த 5ல் எது குறைந்தாலும் அந்த குறையை நிவர்த்தி செய்து கொண்டு நிர்வாகத்தை தொடர்ச்சி ஆக்கி கொள்ளுங்கள். இதை சொல்லுவது என்னுடைய கடமை.

[ வேலூர் மஸ்ஜித்களின் முத்தவல்லிகள் கூட்டமைப்பான வேலூர் மஸாஜித் அசோசியேஷன் சார்பாக, அதன் தலைவர் V.K. அப்துல் அலீம் சாஹெப் தலைமையில், S.முஹம்மத் அத்ஹர் சாஹெப், A.G.ஷம்ஸுத்தீன் நாஸிர் உமரி சாஹெப், A.முஹம்மத் சர்வர் சாஹெப், சையத் அஹ்மத் சாஹெப் ஆகியோர் முன்னிலையில் 26.09.2021 ஞாயிறு இரவு 7 மணிக்கு வேலூர் டிட்டர்லைன் உசேன்புரா மஸ்ஜித் வளாகத்தில் நடைபெற்ற பாராட்டு விழாவில் தமிழ்நாடு வக்ஃப் வாரிய தலைவர் எம். அப்துல் ரஹ்மான் அவர்கள் ஆற்றிய உரையிலிருந்து…]

Leave a Reply

Your email address will not be published.