“ஜின்னாஹ்” : மீண்டும் தலைப்புச் செய்திகள் !

“காயிதே ஆஸம் முகம்மதலி ஜின்னாஹ் மதசார்பற்ற சிறந்த தலைவர் ; இந்து-முஸ்லிம் ஒற்றுமையின் தூதர்” இப்படிச் சொன்னதாக சொல்லப்பட்டவர் லால் கிருஷ்ண அத்வானி! இடம்: கராச்சி ;காலம்: தனது பாகிஸ்தான் பயணத்தின் இறுதியில் ஜூன் 4 – 5, 2005 இந்திய ஊடகங்களில் இது தலைப்புச் செய்தியானது. அதற்குக் காரணம்,.
எல்.கே.அத்வானி அப்போது பாரதிய ஜனதா கட்சியின் தலைவர். சாதாரண தலைவர் அல்ல; 14 ஆவது வயதில் ஆர்எஸ்எஸ்ஸில் தன்னை இணைத்துக் கொண்டவர் அவர். பாஜகவை வழிநடத்துவது ஆர்எஸ்எஸ் என்பது அனைவரும் அறிந்த ஒன்று.

இந்து தேசியம் என்ற கட்டமைப்பில் உருவாக்கப்பட்டது ராஷ்ட்ரிய சுயம்சேவக்சங் என்ற ஆர்எஸ்எஸ். 1925இல் இதை உருவாக்கியவர் டாக்டர் ஹெட்கேவார். 1951இல் ஆர்எஸ்எஸ் தலைவராக இருந்த கோல்வால்கர், இந்து மகாசபையின் தலைவராக இருந்த டாக்டர் ஷியாம் பிரசாத் முகர்ஜி ஆகியோர் அரசியல் கட்சி தொடங்குவதாக அறிவித்தனர்.

1951 அக்டோபர் 21அன்று தொடங்கப்பட்ட ‘பாரதிய ஜனசங்’கத்திற்காக ஆர்எஸ்எஸ்ஸில் இருந்து விடுவிக்கப்பட்டவர்தான் எல்.கே.அத்வானி. 1973இல் அவர் பாரதிய ஜனசங்கத்தின் தலைவரானார்.

நெருக்கடி நிலைக்கு பிறகு உருவாக்கப்பட்ட ஜனதா கட்சி 1980இல் பிளவுபட்ட போது ,அதேஆண்டு ஏப்ரல் 6ல் “பாரதிய ஜனதா கட்சி” என்ற பெயரில் புதிய கட்சியை தொடங்குவதாக முன்னாள் பாரதிய ஜன சங்கத்தை சேர்ந்தவர்கள் முடிவெடுத்தனர்.

இக்கட்சிக்கு அடல் பிகாரி வாஜ்பாய் தலைவர்; எல்.கே.அத்வானி பொதுச்செயலாளர். 1977-79ல் ஜனதா ஆட்சியில் தகவல் ஒளிபரப்பு அமைச்சராக இருந்த அத்வானி, 1998-2004ல் உள்துறை அமைச்சராகவும், வாஜ்பாய் அமைச்சரவையில் 2002 – 2004இல் துணைப் பிரதமராகவும் பதவி வகித்தவர்.

இந்தியா – பாகிஸ்தான் பிரிவினைக்கு பிறகு அத்வானியின் ஒரு பயணமே வன்முறைக்கு காரணமாக அமைந்தது. அயோத்தியில் பாபர் மஸ்ஜித் இருந்த இடத்தில் ராமர் கோயில் அமைக்கப்படும் என்று அத்வானி நடத்திய ரத யாத்திரையில் பல இடங்களில் கலவரங்கள் ஏற்பட்டு ஆயிரக்கணக்கானவர்கள் உயிரிழந்தனர். 1992 டிசம்பர் 6 அன்று பாபர் மஸ்ஜித் தகர்க்கப்பட்ட சம்பவத்திற்கும் அத்வானியே தலைமை வகித்தார். அதனால் நாடு முழுவதும் ஏற்பட்ட வன்முறைகளில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

அப்படிப்பட்ட அத்வானிதான் பாகிஸ்தான் பயணம் மேற்கொண்டார். அப்போது அவர் நாடாளுமன்ற பாஜக தலைவராகவும், பாஜகவின் தேசியத் தலைவராகவும் பதவியில் இருந்தார்.

பாபர் மஸ்ஜித் தகர்க்கப்பட்ட கொந்தளிப்பில் பாகிஸ்தானில் கிருஷ்ணன் கோவிலும் தகர்க்கப்பட்டது. ஆனால் அந்த கோவிலை பாகிஸ்தான் அரசு புதுப்பித்து கட்டியெழுப்பி அதனை திறந்து வைப்பதற்கு அத்வானியை அதன் அதிபர் முஷரப் அழைத்தார்.

அவரது அழைப்பின் பேரில் பாகிஸ்தான் சென்ற அத்வானிதான் முகப்பில் சொன்னவாறு முஹம்மதலி ஜின்னாஹ் சாஹிபை புகழ்ந்து தள்ளியதாக சர்ச்சையில் சிக்கினார். இது பாஜகவில் புயலை வீசியது. அதன் விளைவு அவர் பாகிஸ்தான் மண்ணில் இருந்து இந்தியா திரும்புவதற்குள் பாஜக தலைவர் பொறுப்பில் இருந்து விலகுவதாக தொலைத்தொடர்பு மூலம் அறிவித்தார்.

பாவம், அவரது பிரதமர் கனவை இந்த “ஜின்னாஹ் புகழ்” தகர்த்து விட்டது.

“ஜின்னாஹ் : இந்தியா – பிரிவினை – சுதந்திரம்.’’

ஜஸ்வந்த் சிங் எழுதிய இந்த நூல் ஜின்னாஹ் பற்றி மீண்டும் தலைப்புச் செய்தியானது. ஜஸ்வந்த் சிங் பாரதிய ஜனதா கட்சியின் மிக முக்கிய தலைவர். வாஜ்பாய், அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, ஜஸ்வந்த் சிங் என்ற பாஜகவின் நாற்பெரும் தலைவர்களில் ஒருவராக திகழ்ந்தவர். முன்னாள் ராணுவ மேஜர். ஒன்றிய நிதி அமைச்சராகவும் மாநிலங்களவையில் எதிர்க்கட்சித் தலைவராகவும் இருந்தவர். வாஜ்பாயின் நெருங்கிய நண்பரான இவர் அவரது அமைச்சரவையில் பாதுகாப்புத்துறை அமைச்சராக பணி செய்தவர்.

வலதுசாரி சிந்தனைக்கு அப்பாற்பட்டு ஜனநாயகத்தை வலுவுள்ளதாக்க வேண்டும் என்ற கோட்பாடு கொண்ட இவர், 2001 இல் சிறந்த நாடாளுமன்றவாதி ஆக தேர்வு செய்யப்பட்டு கௌரவிக்கப்பட்டவர். நேருவின் கொள்கைதான் இந்திய பிரிவினைக்கு காரணம் என்பதில் உறுதி கொண்டவர்.

2009 ஆகஸ்ட் 1-இல் அவர் எழுதி வெளியிட்ட “ஜின்னாஹ்: இந்தியா – பிரிவினை – சுதந்திரம்” புத்தகம்தான் பாஜகவில் புயலை கிளப்பியது. ஜின்னாஹ் மீண்டும் தலைப்புச்செய்தி ஆனார்.

அந்த நூலில் அப்படி என்னதான் எழுதப்பட்டுள்ளது? 674 பக்கம் கொண்ட அந்த நூல் இந்தியாவில் இருட்டடிப்பு செய்யப்பட்ட முக்கிய விடயங்களை அலசுகிறது.

“முகம்மதலி ஜின்னாஹ் இந்து – முஸ்லிம் ஒற்றுமைக்கு வலுவான சாட்சியாக திகழ்ந்தவர்; கடைசியில் முஸ்லிம் சமுதாயத்தின் ஒரே குரலாக பார்க்கப்பட்டார்.” எனக்கூறும் ஜஸ்வந்த்சிங், “பாகிஸ்தான் படைப்பிற்கு ஜின்னாஹ்வே காரணம் என்பவர்கள், பிரிவினைக்கான காரணங்களை ஆராய மறுப்பதை குறை” காண்கிறார். பாகிஸ்தான் பிரிவினைக்கு ஆங்கிலேயர்களின் சூழ்ச்சி என்ன? காங்கிரஸின் பங்களிப்பு என்ன? என்பதை பற்றியும் பேசுகிறார்.

பாகிஸ்தான் பிரிவினைக்கான காரணத்தை நடுநிலையோடு அவர் விளக்க முற்பட்டதை பாஜகவினர் ஏற்கவில்லை. எதிர்ப்பு வலுத்தது; அவர் பாஜகவில் இருந்தே நீக்கப்பட்டார். 2020 செப்டம்பர் 27 இல் தனது 82 ஆவது வயதில் மரணமடைந்தார்.

‘ஜின்னாஹ்’ இப்போது மீண்டும் தலைப்புச் செய்தியாகி உள்ளார்.

உத்தரப்பிரதேச முன்னாள் முதல்வரும், சமாஜ்வாதி கட்சி தலைவருமான அகிலேஷ் யாதவ் ,”முகம்மதலி ஜின்னாஹ், ஜவகர்லால்நேரு, வல்லபாய் பட்டேல், மகாத்மா காந்தி ஆகியோர் இந்தியா சுதந்திரம் பெற உதவியவர்கள்; இவர்கள் எந்த காரணத்துக்காகவும் போராட்டத்தில் இருந்து பின் வாங்காதவர்கள்; அவர்கள் அனைவரும் ஒரே பல்கலைக் கழகத்தில் படித்து பாரிஸ்டர் பட்டம் வாங்கியவர்கள்” என அண்மையில் குறிப்பிட்டிருந்தார்.

இதற்கு பாஜக கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. உத்தரப்பிரதேச முதல்வரும் பாஜக தலைவருமான யோகி ஆதித்யநாத் ,” பட்டேலுடன் ஜின்னாஹ்வை ஒப்பிட்டுப் பேசுவது வெட்கக்கேடானது; ஜின்னாஹ்வை ஆதரிக்கும் கட்சிகளிடமிருந்து மக்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்” என ஆவேசப்பட்டுள்ளார்.

உ.பி .பாஜக தலைவர் சுவதந்திர தேவ்சிங், “ஜின்னாஹ் மீதான மதிப்பு இன்னும் அப்படியேதான் உள்ளதா? ஜின்னாஹ்வை இந்தியா இன்னும் வில்லனாகத்தான் பார்க்கிறது”என குறிப்பிட்டுள்ளார். அம்மாநில அமைச்சர் ஆனந்த் சுக்லா,” அகிலேஷ் யாதவுக்கு போதை சோதனை நடத்தப்பட வேண்டும்” என உச்ச கட்ட காட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

ஜின்னாஹ் பற்றி இந்துத்துவவாதிகள் நிலைப்பாட்டிற்கு ஒரு உதாரணம், அவரது நிழற்படம் கூட எவரது கண்ணிலும் பட்டு விடக்கூடாது என்பதால் அலிகர் முஸ்லிம் பல்கலைக் கழகத்தின் விருந்தினர் மாளிகையில் இருந்த அவரது புகைப்படத்தை அப்புறப்படுத்தியவர்கள். இத்தனைக்கும் ஜினனாஹ் அப்பல்கலைக்கழகத்திற்கு பெரும் தொகையை நிதி அளித்தவர்.

ஜின்னாஹ் யார் ? பிரிவினையின் கதாநாயகர் அவர்தானா?

முகம்மதலி ஜின்னாஹ்மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டு ,”பாகிஸ்தான் பிரிவினையில் உறுதியாக இருந்தார் ;அதை அடைவதற்கு தீவிரம் காட்டினார்; கடைசியில் அதை சாதித்து முடித்தார் “என்பதுதான் .இதில் எந்த சந்தேகமும் இல்லை; முற்றிலும் உண்மை. ஆனால் ஜின்னாஹ் பற்றியும், பாகிஸ்தான் தனிநாடு கோரிக்கை பற்றியும் இருட்டடிப்பு செய்யப்படும் விடயங்கள் வெளிப்படுத்தப்பட்டால் நடுநிலையை நேசிப்பவர்கள் உண்மையை தெரிந்து கொள்ளலாம் இல்லையா?

முகம்மதலி ஜின்னாஹ் பாரம்பரிய முஸ்லிம் குடும்பத்தில் இருந்து வந்தவர் அல்ல. கிபி 1870களில் குஜராத் கத்தியவார் பகுதியில் காந்திஜியின் பனியா சமூகத்தை சேர்ந்த பிரேம்ஜி பாய் தாக்கர் என்பவரும் அவரது மனைவி மித்திலி பாய் என்பவரும் வாழ்ந்து வந்தனர். அவர்கள் மீன்பிடி தொழில் செய்தனர். இந்து வைஷ்ணவர்கள் மீன்பிடித்தொழில் செய்வதா எனக்கூறி அக்குடும்பத்தை சமூக நீக்கம் செய்தனர்.

அந்தப் பிரேம்ஜி பாய் தாக்கருக்கும் ராஜ்கோட் நகரை சேர்ந்த முஸ்லிம் ஒருவருக்கும் நல்ல பழக்கம் ஏற்பட்டது. அவர் மூலம் இஸ்லாத்தை அறிந்து கொண்டு முஸ்லிம் ஆனார். அறிமுகமான அந்த முஸ்லிம் ,ஷியாவின் இஸ்மாலி கோஜா பிரிவைச் சேர்ந்தவர் என்பதால் அந்தப் பாரம்பரிய பழக்கவழக்கங்களை பிரேம்ஜி பாய் தாக்கர் மித்திலிபாய் தம்பதியினர் பின்பற்றத் தொடங்கினர்.

அவர்களுக்கு வால்ஜி பூஞ்சா,ஜின்னாஹ் பூஞ்சா என்ற இரு புதல்வர்கள். இதில் ஜின்னாஹ் பூஞ்சாவுக்கு 1876 டிசம்பர் 25இல் மகனாக பிறந்தவர் முகம்மதலி ஜின்னாஹ். (ஷியா குடும்பத்தில் பிறந்திருந்தாலும் முகம்மதலி ஜின்னாஹ் சுன்னத் வல் ஜமாஅத் நடைமுறைகளைத்தான் பின்பற்றினார் என அவர் மறைவுக்குப்பின் சொத்துக்கள் தொடர்பான வழக்கில் நீதிமன்றத்தில் நிரூபணமானது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது)

குடியுரிமை திருத்தச் சட்டத்தை கொண்டு வந்த நரேந்திர மோடி அரசின் உள்துறை அமைச்சர் அமித் ஷா,“முஸ்லிம் லீக்கின் ஜின்னாஹ், பாகிஸ்தான் என்ற நாட்டை மதத்தின் பெயரால் பிரித்துக் கொண்டு போய்விட்டார்; ஆகவே முஸ்லிம் அகதிகளுக்கு குடியுரிமை தர முடியாது” என வாதிட்டார்.

ஆனால் உண்மை என்னவெனில் பாகிஸ்தான் பிரிவினைக்காக முஸ்லிம் லீக் தொடங்கப்படவும் இல்லை; ஜின்னாஹ் முஸ்லிம் லீகை தொடங்கவும் இல்லை. அகில இந்திய முஸ்லிம் லீக் தொடங்கப்படுவதற்கு இரண்டு வருடங்களுக்கு முன்பே,அதாவது 1904லேயே முகம்மதலி ஜின்னாஹ் காங்கிரஸில் சேர்ந்து விட்டார். 1915 ஜனவரி 9 அன்று தென்னாப்பிரிக்காவிலிருந்து இந்தியா திரும்பிய பின்னர்தான் காந்தி காங்கிரஸில் நேரடித் தொடர்பு கொண்டார். காங்கிரஸில் காந்திக்கு ஜின்னாஹ் ஒரு மகாமக காலம் மூத்தவர்.

1906இல் காங்கிரஸ் மாநாட்டு தாதாபாய் நவ்ரோஜி தலைமையில் கல்கத்தாவில் நடைபெற்ற போது அவரது தனிச் செயலாளராக இருந்த ஜின்னாஹ்வின் பேச்சு அனைவரையும் கவர்ந்தது .

1909 இம்பீரியல் கவுன்சில் முதல் கூட்டத்திலேயே தென்னாப்பிரிக்காவில் இந்தியர்கள் கொடுமை படுத்தப்படுவதற்கு எதிராக முஹம்மதலி ஜின்னாஹ் எடுத்து வைத்த வாதம் வைஸ்ராய் மின்டோ பிரபுவை அதிர்ச்சியடைய வைத்தது. ஜின்னாஹ் இந்தியாவில் கூர்ந்து கவனிக்கப்பட்டு பெருமை படுத்தப்பட்டார்.

1907 சூரத்தில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாடு தீவிரவாதிகள்_ மிதவாதிகள் பிளவை உச்சத்துக்குக் கொண்டு சென்றது. அடிதடி, கைகலப்பு, சட்டை கிழிப்பு என்ற காங்கிரஸ் கலாச்சாரம் இந்த மாநாட்டில் இருந்து தொடங்கியதுதான்.

பாலகங்காதர திலகர் தீவிரவாதிகளின் தலைவராகவும், கோபால கிருஷ்ண கோகலே மிதவாதிகளின் தலைவராகவும் திகழ்ந்தனர். இருவரும் சித்பவன் பிராமணர்களே. ஆங்கிலேயர் ஆட்சியில் ஆதிக்கம் செலுத்தியவர்கள் மராட்டிய சித்பவன் பிராமணர்களும், குஜராத்தின் பனியாக்களுமே. கோகலேயின் சீடராக இருப்பதில்தான் பெருமை கொண்டார் ஜின்னாஹ்.

1906 டிசம்பர் கடைசியில் கல்கத்தா காங்கிரஸ் மாநாட்டிலும் ,1906 டிசம்பர் 30. டாக்கா முஸ்லிம் கல்வி மாநாட்டிலும் கலந்து கொண்ட முகம்மதலி ஜின்னாஹ், 1906 டிசம்பர் 31 அகில இந்திய முஸ்லிம் லீக் அமைப்பு கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை. அத்துடன் ,”முஸ்லிம்களுக்கு தனி பிரதிநிதித்துவம்” என்ற அக்கூட்ட தீர்மானத்தை பகிரங்கமாக எதிர்க்கவும் செய்தார்.

அப்படிப்பட்ட ஜின்னாஹ் முஸ்லிம்களுக்கு எதிராக நடைபெற்ற சம்பவங்களால் 1920இல் காங்கிரஸில் இருந்து ராஜினாமா செய்தார். முஸ்லிம்களுக்கு தனி பிரதிநிதித்துவம், தனித்தொகுதி என்ற முஸ்லிம்லீக் தீர்மானங்களை எந்த ஜின்னாஹ் எதிர்த்தாரோ அதை வலியுறுத்தி நேருவிற்கு பதில் என்று 14 அம்சத் திட்டங்களாக வெளியிட வேண்டிய நிர்ப்பந்த சூழல் உருவானது. 1935 இல் அகில இந்திய முஸ்லிம் லீக்கின் நிரந்தர தலைவராக அவரே தேர்ந்தெடுக்கப்பட்டார். அதன் பின்பே அது பட்டி தொட்டிகள், ஏழை எளியவர்கள் என எங்கும் பரவியது.

பிரிவினையின் பிதாமகன் யார்?

சுவாமி தயானந்த சரஸ்வதி என்ற குஜராத் வைதீக பிராமணர் 1875ல் ஆரிய சமாஜத்தை துவக்கி வேதத்துக்கு திரும்பு என சனாதன கொள்கையை முன்வைத்தார் .அவர் உருவாக்கிய பசு பாதுகாப்பு இயக்கத்தால் தான் 1890களில் பக்ரீத் பண்டிகை என்ற ஈத் பெருநாளில் முஸ்லிம்களுக்கு எதிரான கலவரங்கள் நடைபெற்றன.

ஆரிய சமாஜத்தில் இருந்து உருவான சுவாமி சிரத்தானந்தா என்ற லாலா முன்சிராம் ‘சுத்தி இயக்கத்தை’யும் ,பண்டித மதன் மோகன் மாளவியா ‘இந்து சங்கதன் இயக்கத்தை’யும் 1920இல் துவக்கி தாய் மதம் திரும்புங்கள் என்ற கர்வாப்சி நிகழ்வுகளை நடத்தினர்.

1922இல் பாய் பரமானந்தரோடு இணைந்து ‘இந்து மகா சபையை’ உருவாக்கிய வினாயக் தாமோதர் சாவர்க்கர் தான் “இந்துத்துவா” கோட்பாட்டை ரத்தனகிரி சிறையிலிருந்து நூலாக எழுதியவர். “இந்துஸ்தானத்தில் இந்துக்கள் மட்டுமே ஒரு தேசமாக இருக்கிறார்கள்; சிறுபான்மையினரான மற்றவர்கள் இந்த மண்ணில் வாழ்வதாலேயே இந்த தேசத்தவர் ஆகிவிட மாட்டர்” என்பதுதான் இந்துத்துவா கோட்பாடு.

பிரிவினையின் பிதாமகன் யார்?

“இந்தியா ஒன்றுபட்ட ஒரே தேசம் அல்ல; இங்கே இந்துக்களுக்கு ஒன்று, முஸ்லிம்களுக்கு ஒன்று என இரு தேசங்கள் உள்ளன”

- வினாயக் தாமோதர் சாவர்க்கர்

இந்து மகா சபை தலைமை உரையில்...

அகில இந்திய முஸ்லிம் லீக் பிரிவினை தீர்மானம் நிறைவேற்றுவதற்கு ஒரு மகாமக காலத்திற்கு முன்பே உதிர்த்த வார்த்தைகள்...

இந்து மகாசபைக்கு தலைமை தாங்கி அவர் ஆற்றிய உரையில், “இந்தியா ஒன்றுபட்ட ஒரே தேசம் அல்ல ; இங்கே இந்துக்களுக்கு ஒன்று ,முஸ்லிம்களுக்கு ஒன்று என இரு தேசங்கள் உள்ளன” என சித்தாந்த விளக்கமும் அளித்தார்.

1925இல் மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் டாக்டர் கேசவ பலிராம் ஹெட்கேவர் ஆர்எஸ்எஸ் என்ற ராஷ்டிரிய சுயம்சேவக் சங் துவக்கினார். சாவர்க்கரின் சித்தாந்தத்தில் கவரப்பட்ட இவர் டாக்டர் மூஞ்சேயின் நம்பிக்கைக்குரிய சீடர். இந்து மகாசபையின் தலைவராக இருந்த மூஞ்சே, பாலகங்காதர திலகரின் நம்பிக்கை நட்சத்திரம். மத சடங்குகளை கூட வீதிக்கு கொண்டுவந்து மத மோதலுக்கு வித்திட்டது திலகர் தான். நாசிக்கில் 160 ஏக்கரில் ராணுவப் பள்ளியை 1937இல் நிறுவியவர். இதற்காக இரண்டாம் வட்டமேசை மாநாட்டிற்கு பின் தனது ஐரோப்பிய சுற்றுப் பயணத்தில் முசோலினியை சந்தித்தவர் டாக்டர் மூஞ்சே.

இந்திய பிரிவினையின் “சூத்திரம்” இப்போது புரிகிறதா?

இந்த இந்துத்துவ தலைவர்கள் விதைத்த விதையைத் தொடர்ந்துதான் வகுப்புக் கலவரங்கள் உச்சகட்டத்தில் இருந்த 1930 டிசம்பர் 30 அன்று அலகாபாத்தில் நடைபெற்ற அகில இந்திய முஸ்லிம் லீக் மாநாட்டில் தலைமை உரையாற்றிய மகாகவி அல்லாமா முஹம்மது இக்பால்,” இந்து முஸ்லீம் பிரச்சனை இன்று தலைவிரித்தாடுகிறது, .இந்நிலையில் இணக்கமான முறையில் அதிகார ஏற்றத்தாழ்வோடு வாழ்வது சாத்தியம் ஆகாது; எனவே இந்து ,முஸ்லிம் என எப்பகுதியில் யார் பெரும்பான்மையாக வாழ்கிறார்களோ அப்பகுதிகளை அவரவர் சுதந்திரமாக ஆள வழி செய்வதே சரியானதாகும் “என்று கூறினார்.

அவரது இந்த கருத்தை ‘ஒரு அருமையான கவிஞரின் வளமான கற்பனை’ என புறம் தள்ளினார் முஹம்மதலி ஜின்னாஹ்.அந்த காலகட்டத்தில் இங்கிலாந்தின் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் படித்துக்கொண்டிருந்த சவுத்ரி ரஹ்மத்அலி என்ற மாணவர், “இந்தியாவின் வடமேற்குப் பகுதியில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் பகுதிகளை ஒன்று சேர்த்து அதை தனி நாடாக்கி பாகிஸ்தான் என பெயர் சூட்ட வேண்டும்” என்ற கருத்தை முன்வைத்து வலு சேர்த்து வந்தார். பாகிஸ்தான் என்ற பெயரை தேர்வு செய்ததும் அவர்தான்.

அல்லாமா இக்பால் முன்வைத்த யோசனையும் , சவுத்ரி ரஹ்மத் அலி வலு சேர்த்து வந்த கருத்தும் இந்திய முஸ்லிம்களால் புறக்கணிக்கப்பட்டு வந்த நிலையில், 1940 மார்ச் 23 லாகூரில் நடைபெற்ற அகில இந்திய முஸ்லிம் லீக் மாநாட்டில் தீர்மானம் வடிவம் பெற்றதற்கு காரணம் அடுத்தடுத்து ஏற்பட்ட முஸ்லிம்களுக்கு எதிரான நிகழ்வுகள்தான்.

முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் வடமேற்கு ,வடகிழக்கு மாகாணங்களை தனி ராஜ்ஜியமாக உருவாக்க வேண்டும் என்ற இந்த தீர்மானத்தை முன்மொழிந்தவர் வங்காள முதலமைச்சர் ஃபஸ்லுல் ஹக். இவர் கிரிஷிக் கட்சியை நடத்தி வந்தவர் . வழிமொழிந்தவர் பஞ்சாப் முதலமைச்சர் சிக்கந்தர் ஹயாத் கான். இவர் யூனியனிஸ்ட் கட்சியை நடத்தி வந்தவர். இவர்கள் இருவரும் முஸ்லிம் லீக்கில் இருக்கவில்லை .1937 பொதுத்தேர்தலில் இவர்களின் மாநிலக் கட்சிகளே வெற்றி பெற்று ஆட்சி அமைத்தன .இரண்டு வருடங்களுக்குப் பின் கட்சியை கலைத்து முஸ்லிம் லீகில் இணைந்து தமது மாகாணங்களில் முஸ்லிம் லீக்கை வளர்த்தனர்.

மார்ச் 23,1940 லாகூரில் நடைபெற்ற அகில இந்திய முஸ்லிம் லீக் தீர்மானத்தை திரும்பப்பெறும் நல்ல சந்தர்ப்ப மும் வாய்த்தது .ஆனால் ஜூலை 10 ,1946 “ ஒரு மும்பை பேட்டி” அதை நிராசை ஆக்கியது.

ஆம்! பிரிட்டன் தேர்தலில் வெற்றிபெற்று கிளமெண்ட் அட்லி பிரதமரானதும் இந்தியர்களிடம் இந்திய அதிகாரத்தை ஒப்படைக்க முயற்சி மேற்கொண்டார். மூன்று அமைச்சர்கள் அடங்கிய தூதுக்குழுவை 1946 மார்ச் 23 அன்று இந்தியாவுக்கு அனுப்பினார்.

இந்திய தலைவர்களை பலமுறை சந்தித்துப் பேசிய அமைச்சரவைத் தூதுக்குழு மே 16 அன்று தனது பரிந்துரைகளை வெளியிட்டது. பரிந்துரைகளை காங்கிரசும், முஸ்லிம் லீகும் ஏற்றுக்கொண்டன.

1946 ஜூன் 6-இல் கூடிய முஸ்லிம் லீக்கின் அகில இந்திய கவுன்சில் கூட்டம், “அமைச்சரவைத் தூதுக்குழு பரிந்துரைகளை ஏற்று, 1940 மார்ச் 23 லாகூர் தீர்மானத்தை கைவிடுவதாக” அறிவித்தது.

நாடு பிளவுபடாது என்ற நம்பிக்கை பிறந்தது. ஆனால் அந்த நம்பிக்கை அவநம்பிக்கையானது .அமைச்சரவைத் தூதுக்குழு 1946 ஜூன் 29 இல் லண்டன் சென்ற பின், ஜூலை 10ஆம் தேதி மும்பை வந்த பண்டித ஜவஹர்லால் நேரு செய்தியாளர்களை சந்தித்தார்.” அரசியல் நிர்ணய சபையில் எங்களுக்கு கிடைக்கும் பெரும்பான்மை பலத்தை கொண்டு எங்கள் விருப்பப்படி செயல்படுவோம்” என்றார்.

இந்தப் பேட்டி இந்திய வரலாற்றையே தலைகீழாக மாற்றி எழுதச் செய்துவிட்டது.

ஜூலை 27 அன்று அதே மும்பையில் அகில இந்திய முஸ்லிம் லீக் கவுன்சில் கூட்டத்தை கூட்டி ‘1940 மார்ச் 23 லாகூர் தீர்மானத்தில் உறுதியாக உள்ளோம்’ என ஜின்னாஹ் அறிவித்துவிட்டார்.

1947 மார்ச்8ல் கூடிய காங்கிரஸ் காரியக் கமிட்டி, “இந்துக்கள் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் பகுதிகளை மத அடிப்படையில் பிரிக்க வேண்டும்” என தீர்மானம் நிறைவேற்றியது. இப்படி தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி காங்கிரஸ் செயற்குழு உறுப்பினர்களுக்கு கடிதம் எழுதியதே சர்தார் வல்லபாய் பட்டேல் தான்.

இந்தியா-பாகிஸ்தான் இரு நாட்டு விடுதலைக்கான “ஜூன் மூன்றாம் தேதி” திட்டம் நாட்டு மக்களுக்கு பிரகடனப்படுத்தப்பட்டது. வைஸ்ராய் மவுண்ட்பேட்டன் பிரபு ஆலோசனையில் வி.பி.மேனன் தயாரித்த இத்திட்டத்தை ஜவகர்லால் நேரு ஏற்றார் .பிரிட்டன் ஒப்புதல் அளித்தது.

1947 ஜூன் 9 அன்று டெல்லியில் நடைபெற்ற அகில இந்திய முஸ்லிம் லீக் கவுன்சில் கூட்டம் இதை ஏற்று தீர்மானம் நிறைவேற்றியது. 1947 ஜூன் 14 ,15 தேதிகளில் டெல்லியில் நடைபெற்ற காங்கிரஸ் கவுன்சில் கூட்டத்திலும் இதை ஏற்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இக்கூட்டத்தில் ஜூன் மூன்றாம் தேதி திட்டத்தை ஆதரித்து காந்திஜி உரையாற்றினார்.

ஆக சாவர்க்கரில் தொடங்கி காந்திஜியுடன் நிறைவடைந்துள்ளது தேசப்பிரிவினை! பிரிவினை குற்றச்சாட்டிலிருந்து ஜின்னாஹ்வை காப்பாற்றுவது என் நோக்கமல்ல.

பிரிவினைக்கு யார் யார், எவை எவை காரணம்? நடுநிலையாளர்கள் முடிவு செய்து கொள்ளட்டும்!

காயல் மகபூப்
மூத்த ஊடகவியலாளர் / அரசியல் விமர்சகர்
செல்: 97907 40787

“வரலாற்று பேரியக்கம் முஸ்லிம் லீக்” நூலில் இடம்பெற்றுள்ள பகுதிகளிலிருந்து……..

முஸ்லிம் லீக்கின் 115 ஆண்டு வரலாறு கையடக்க நூலாக நவம்பர் 10 இல் வெளிவருகிறது.
படியுங்கள்… பரப்புங்கள்…. அனைவரிடமும் கொண்டு போய் சேருங்கள்.

தனிப்பிரதி ரூபாய் 40/-

100 பிரதிகள் ரூபாய் 2500/-
500 பிரதிகள் ரூபாய் 10000/-

தொடர்புக்கு:-

கோம்பை ஜெ.நிஜாமுதீன்,
மில்லத் பதிப்பகம்,
செல்: 90031 88822.

Leave a Reply

Your email address will not be published.