சமூக நீதிக்கு வித்திட்டது முஸ்லிம் லீக்

தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்கள் அக்டோபர் 23 ,2021 அன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், சமூக நீதியை கண்காணிப்பதற்கு சுப.வீரபாண்டியன் அவர்கள் தலைமையில் ஏழு உறுப்பினர் குழு ஒன்றை அமைத்து இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். இதனை மனதார பாராட்டி வரவேற்போம்! கலைஞர் அவர்கள் தலைமையிலான திமுக அரசு 2007 செப்டம்பர் 15 அன்று பிறப்பித்த அவசர சட்டத்தின் மூலம் முஸ்லிம்களுக்கு வழங்கிய 3.5 விழுக்காடு இட ஒதுக்கீட்டின் பலன் முஸ்லிம் சமூகத்தை சென்றடைகிறதா என்பதையும் இந்தக் குழு தீவிரமாக கண்காணித்து உரிய பரிகாரம் தேடும் என நம்புகிறோம்.


செப்டம்பர் 16, 2021 சமூகநீதி பிரகடனத்தின் நூற்றாண்டு! 1921இல் இதே நாளில்தான் இந்திய விடுதலைக்கு முன் சென்னை மாகாணத்தை ஆட்சி செய்த நீதிக்கட்சி அரசு வகுப்புவாரி பிரதிநிதித்துவ அரசாணை எண் 613ஐ வெளியிட்டது. இன்று தமிழ்நாட்டில் 69 விழுக்காடு இட ஒதுக்கீடு நடைமுறையில் உள்ளது. அதனை 9ஆவது அட்டவணையில் பாதுகாக்கும் அரசியலமைப்புச் சட்டத்தின் 76 ஆவது திருத்தம் நாடாளுமன்ற மக்களவை, மாநிலங்களவையில் 1994 ஆகஸ்ட் 24, 25 தேதிகளில் நிறைவேற்றப்பட்டது. இந்த இட ஒதுக்கீடு சரியாக பின்பற்றப்படுகிறதா என்று கண்காணிப்பதற்காகத் தான் சமூகநீதி பிரகடனத்தின் நூற்றாண்டில் முதல்வர் அறிவித்தபடி இந்தக் குழுவை அமைத்துள்ளார்.


சமூகநீதி என்பதற்கு அடித்தளம் அமைத்தது முஸ்லிம்லீக் தான். இதுபற்றி திராவிடர் கழகத் தலைவர் தந்தை பெரியார் ஈ.வெ.ரா அவர்கள், ‘நீதிக்கட்சி அரசு சமூகநீதி அரசாணையை வெளியிடுவதற்கு பல ஆண்டுகளுக்கு முன்பே அந்த உரிமையை வாதாடி பெற்று வழிகாட்டியது முஸ்லிம் லீகே’ என்றார்.


ஆம்! 1906 அக்டோபர் 1 அன்று சர்.ஆகாகான் தலைமையில் முஸ்லிம் தூதுக்குழு வைஸ்ராய் மின்டோ பிரபுவை சந்தித்து வைத்த கோரிக்கையின் பலனாக இந்திய விவகார செயலாளர் மார்லி பிரபுவுடன் கலந்து ஆலோசித்து உருவாக்கிய மார்லி மின்டோ சீர்திருத்தங்களின் அடிப்படையில் கொண்டு வரப்பட்டதே 1909 இந்திய கவுன்சில் சட்டம்.


இந்தியா சுயாட்சியை அடைவதற்கான முதல் கட்டமே இதுதான் என வர்ணிக்கப்படுகிறது. இச்சட்டம், மத்திய மாநில சட்ட மன்ற உறுப்பினர்கள், ஆளுநர்களின் ஆட்சிக்குழு உறுப்பினர்கள் எண்ணிக்கை உயர்த்தவும், முஸ்லிம்களுக்கு தனித்தொகுதி, தனி இட ஒதுக்கீடு அளிக்கவும், இந்திய விவகார அமைச்சர், வைஸ்ராய் ஆலோசனை சபைகளில் முஸ்லிம் உறுப்பினர்களுக்கு இடம் அளிக்கவும் வகை செய்தது.


இதனைத் தொடர்ந்துதான் 1909 இல் சென்னையில் பார்ப்பனரல்லாதார் சங்கம் துவக்கப்பட்டது. 1912இல் பார்ப்பனரல்லாதார் அரசு ஊழியர்கள் சென்னை ஐக்கிய சங்கத்தை துவக்கினர். இது திராவிட சங்கமானது. 1916 நவம்பர் 20இல் தென்னிந்திய நல உரிமைச் சங்கம் துவக்கப்பட்டது. இந்த இயக்கத்திற்காக தொடங்கப்பட்ட பத்திரிக்கைகளின் பெயரால் ‘இது ஜஸ்டிஸ் பார்ட்டி’ ‘நீதிக் கட்சி’ என அழைக்கப்பட்டது.
நீதிக்கட்சி ஆட்சியில் தான் 1921 செப்டம்பர் 16 அன்று வகுப்புவாரி பிரதிநிதித்துவ அரசாணை வெளியிடப்பட்டது. நீதிக்கட்சியின் பெயர்தான் 27. 08. 1944 அன்று சேலம் மாநாட்டில் ‘திராவிடர் கழகம்’ என மாற்றப்பட்டது. திராவிடர் கழகத்திலிருந்து 1949 செப்டம்பர் 17 இல் திராவிட முன்னேற்றக் கழகம் உதயமானது.


இப்போது அடித்தளம் புரிகிறதா ?
ஆக சமூகநீதிக்கு வித்திட்டது முஸ்லிம் லீக்.


இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உறுப்பினர் சேர்க்கைக்காக 115 ஆண்டு முஸ்லிம்
லீக் வரலாற்றை முப்பத்தி ஆறு பக்கங்களில் காயல் மகபூப் எழுதி நாங்கள் வெளியிடும் ‘வரலாற்றுப் பேரியக்கம் முஸ்லிம் லீக்’ என்ற கையடக்க நூலில் இருந்து…


இந்த நூலை மாவட்டங்கள் அல்லது பிரைமரிகளின் சார்பில் வினியோகிக்க விரும்புவோர் உடனடியாக தொடர்பு கொள்ள வேண்டுகிறோம்.

மில்லத் பதிப்பகம்
90031 88822 ,97907 40787

Leave a Reply

Your email address will not be published.