அசாம் முஸ்லிம் இன அழிப்பை தூண்டுகிறதா பாஜக அரசு?

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கடும் கண்டனம்

பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து கேட்டறிந்து ஆறுதல் கூறிய இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய அமைப்புச்செயலாளர் இ.டி. முஹம்மது பஷீர் எம்பி.

இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான அசாமில் பாஜக அரசு பதவியேற்ற நாள்முதல் முஸ்லிம்கள் கடும் இன்னல்களுக்கு ஆளாகி வருகின்றனர். குறிப்பாக வங்க மொழி பேசும் முஸ்லிம்கள் அந்நிய ஆக்கிரமிப்பாளர்களாக கருதப்பட்டு அவர்களை அப்புறப்படுத்தும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன.
விளைவுகள் எத்தகையதாக இருந்தாலும் அதைப்பற்றி கவலைப் படாமால் தேசிய குடிமக்கள் பதிவேட்டை அமல்படுத்தியே தீருவோம் என ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா குறிப்பிட்டுள்ளார்.


ஆனால் தேசிய குடிமக்கள் பதிவேட்டில் இடம்பெற்றுள்ள நிலையிலும் அசாம் முஸ்லிம்கள் வெளியேற்றப்படுகின்றனர். அண் மையில் தர்ராங் மாவட்டம் தோல்பூர் மண்டலம் கோரு குட்டி பகுதியில் 800 குடும்பங்கள் பலவந்தமாக வெளியேற்றப்பட்டு அதில் துப்பாக்கிச்சூடு, தடியடி நடத்தி உயிரிழப்பும் காயமும் ஏற்பட்டன.
அப்படி வெளி யேற்றப்பட்டவர்கள் உண்ண உணவு, உடுக்க உடை, இருக்க இருப்பிடமின்றி பெரும் துயரங்களுக்கு ஆளாகியுள்ளனர். இப்பகுதிகளை பார்வையிட்டு பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து கேட்டறிந்து ஆறுதல் கூறிய இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய அமைப்புச்செயலாளர் இ.டி. முஹம்மது பஷீர் எம்பி பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார்.


“இந்த அப்பாவி மக்களின் துயரங்களை பார்க்கும் போது மனி தாபிமானம் மரணித்து விட்டதா? என கேட்கத் தோன்றுகிறது. இவர்களின் சோகக்கதைகளை கேட்டால் கல்நெஞ்சும் கரையும். இவர்கள் வெளியேற்றப்பட்ட நிலம் அரசுக்கு சொந்தமானது என வைத்துக் கொண்டாலும் அரசுக்கு சொந்தக்காரர்கள் யார்? 1965லிருந்து வசித்து வரும் மக்களை இப்போது வெளியேற்ற வேண்டிய அவசியம் என்ன?


உணவு, தண்ணீர், மருத்துவ வசதி என எதுவும் அளிக்காமல் ஒதுக்கி வைக்கப்பட்டுள்ள இந்த அப்பாவி மக்கள், மருந்து அல்லது உணவுப்பொருட்கள் வாங்க அருகில் உள்ள நகரங்களுக்கு செல்ல அனுமதிக்கப்படாதது கொடூரமான செயலாகும். அவர்கள் முஸ்லிம்கள் என்பது தான் மிகப்பெரிய குற்றம். அதனால் பாஜக அரசு இவர்களை பழிவாங்குகிறது. இவர்கள் ஆப்ரிக்கா அல்லது தென் அமெரிக்க மக்கள் அல்லர்; இந்தியர்கள். எனவே மனிதாபிமானமுள்ள ஒவ்வொரு வரும் அரசைக்கண்டிப்பதோடு இம்மக்களுக்கு உதவ முன்வரவேண்டும். தேசிய ஊடகங்கள் இதில் கவனம் செலுத்தாதது வேதனைக்குரியது. அவர்கள் நேரில் வந்து பார்க்க வேண்டும். இவ்வாறு இடி முகம்மது பஷீர் எம்பி குறிப்பிட்டார்.

நம்புங்கள்…
அசாமில் மனிதர்களின் ஆட்சிதான் நடக்கிறது? அடுத்த வேளை கஞ்சிக்கு என்ன செய்வது என்ற கவலையில் வாழும் ஏழைகள்!
அந்த ஏழைகள் மீதுதான் அம்மாநிலத்தை ஆளும் பாஜக அரசு ஒரு யுத்தமே தொடுத்திருக்கிறது.
விளைவு…


உயிர் பலிகள்; அதில் அரங்கேற்றப்பட்ட கொடூரம்! அப்பப்பா…
அசாமில் என்ன தான் நடந்தது?


28 வயது மொயீனுல் ஹக். மூன்று குழந்தைகளுக்கு தந்தையான அவர் ஒரு தினக்கூலி. ஏழ்மைநிலையில் பெற்றோர் மற்றும் மனைவியையும் பராமரித்து வந்தவர்.
ஆயுதம் தாங்கிய காவல் துறையினரால் அருகிலிருந்து சுடப்பட்டு தரையில் சாய்ந்த அவர் உயிருக்கு போராடுகிறார்.
அவர் சாகவில்லை என தெரிந்ததும் தடிகளால் மிருக வெறியுடன் காவலர்கள் தாக்குகின்றனர்.


துடித்த உடல் சற்று நேரத்தில் அசைவற்றுப் போகிறது. அவர் இறந்து விட்டார் என்ற மகிழ்ச்சியிலும் வெறியிலும் ஓடி வந்த ஒருவன் உயிரற்ற உடல் மீது துள்ளிக் குதிக்கிறான் மார்பில் ஏறி மிதிக்கிறான். அடிக்கடி வரும் பிரம்மபுத்திரா நதி வெள்ளத்தில் மனிதாபிமானமும் சேர்ந்து அடித்துக் கொண்டு போய்விட்டதோ? என்னவோ!


இந்த காட்சிகளை காவல்துறையும் அங்கு இருந்தவர்களும் படம் பிடிக்கின்றனர். அந்த காட்சிகள் வைரல் ஆகின்றன. விளைவு… உலகம் காரி உமிழ்கிறது.
மியான்மரின் ரோஹிங்கியா, அசாம் உள்ளிட்ட வடகிழக்கு இந்திய மாநிலங்கள் என பரிதாபத்திற்குரியவர்கள் வங்க மொழி பேசும் முஸ்லிம்கள்! அசாமில் 70 ஆண்டு காலமாக வங்க மொழி பேசுவோர் படும் துயரம் வார்த்தைகளால் சொல்லி மாளாது. அதன் கொடூர காட்சிகளில் என்றைக்கும் மறக்க முடியாதது பிப்ரவரி 18, 1983இல் நெல்லிப் பகுதியில் நடைபெற்ற இன அழிப்பு. அன்று ஒரே நாளில் 18 கிராமங்கள் தரைமட்டமாக்கப்பட்டு 3 ஆயிரத்து 600 முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர். இந்த இன அழிப்பின் தொடர்கதை தான் இன்று வரையும் தொடர்கிறது.


பிரிட்டிஷ் ஆட்சியில் மிகப்பெரிய ராஜதானியாக இருந்த வங்கத்தில் அசாம் உள்ளிட்ட முஸ்லிம்கள் நிறைந்த கிழக்குப்பகுதி மிகவும் வளர்ச்சி குன்றியும், இந்துக்கள் நிறைந்த மேற்குப்பகுதி சிறப்பாக வளர்ந்தோங்கியும் இருந்தது.


எனவேதான் 40 ஆண்டு முயற்சியை செயல்படுத்தும் வகையில் வைஸ்ராயாக இருந்த கர்சன் பிரபு 1905 அக்டோபர் 16 இல் வங்கத்தை பிரித்தார். காங்கிரஸில் ஆதிக்கம் செலுத்திய இந்துத்துவவாதிகள் இதனை கடுமையாக எதிர்த்து போராடினர். 1906 அக்டோபர் 1ல் வைஸ்ராய் மின்டோ பிரபுவை முஸ்லிம் பிரதிநிதிகள் சந்தித்து கோரிக்கைகள் வைக்கவும், டிசம்பர் 31 இல் அகில இந்திய முஸ்லிம் லீக் உருவாக்கவும் இதுவும் ஒரு காரணமாக அமைந்தது.


அசாம் மாநிலத்தில் 2011 கணக்கெடுப்பின்படி மக்கள் தொகை 3 கோடியே 11 லட்சத்து 69 ஆயிரத்து 272. அரசு புள்ளிவிவரத்தின்படி முஸ்லிம்களின் எண்ணிக்கை 34.22% உண்மையில் 3.50 கோடி மக்களில் 40 சதவீதம் முஸ்லிம்கள். இது 2021ல் 40.3% சதவீதமாக இருக்கும் என புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. அதேசமயம் முஸ்லிம்களின் பிறப்பு விகிதம் 1.2 சதவீதம் குறைந்துள்ளது என தேசிய குடும்ப நலத்துறை தெரிவிக்கிறது.
மக்கள் தொகை சதவீதப் படி 126 சட்டப்பேரவைத் தொகுதிகள் கொண்ட அசாமில் முஸ்லிம் பிரதிநிதிகள் அல்லவா அதிகம் இடம் பெற்றிருக்க வேண்டும்? ஆனால் அங்கு நடப்பது முஸ்லிம்களை எதிர்க்கும் பாஜக ஆட்சியாயிற்றே. ஆம்! பாஜக 60 இடங்களையும், அதன் கூட்டணி கட்சிகளான அசாம் கன பரிசத் 9 இடங்களையும், ஐக்கிய மக்கள் கட்சி 6 இடங்களையும் கைப்பற்றின. காங்கிரஸ் 29 தொகுதிகளையும், அதனுடன் கூட்டு சேர்ந்து போட்டியிட்ட அகில இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி 16 தொகுதிகளையும், போடாலாந்து மக்கள் முன்னணி 4 தொகுதிகளையும், இந்திய பொதுவுடமை மார்சிஸ்ட் ஒரு தொகுதியையும் மட்டுமே பெற்றன. இதற்கு காரணம் என்ன?


இந்தியா & பாகிஸ்தான் பிரிவினையின் போது யார் யார் எங்கு வாழ விரும்புகிறார்களோ அங்கு வசிக்கலாம் என அறிவிக்கப்பட்டது. மக்கள் பெருமளவில் இடம்பெயர்ந்தனர். போதாக்குறைக்கு 1971ல் பாகிஸ்தானிலிருந்து கிழக்கு பாகிஸ்தான் தனி வங்கதேசமாக பிரிய போராடிய போது, ராணுவ ஆதரவளித்த இந்தியா தனது எல்லைகளை திறந்து எண்ணற்றோறை வரவேற்று அடைக்கலமளித்தது. இந்திய மண்ணை நேசித்தவர்கள் அதனை பூர்வீகமாக கொண்டவர்கள் இங்கு வந்தனர். அப்படி 1947 லும் 1971லும் வந்தவர்கள் மட்டுமின்றி வங்க மொழி பேசினாலே அசாமில் அந்நியர்களாகவே கருதப்படுகின்றனர். வாழ்வுரிமை, ஏன் குடியுரிமையே அவர்களுக்கு கேள்விக் குறியாகிவிட்டது.


அசாமிய அப்பாவி ஏழைகளுக்கு பிறவித்துயர் பிரம்மபுத்திரா மற்றும் அதன் கிளை ஆறுகளில் அவ்வப்போது வரும் வெள்ளம். ஒவ்வொரு வெள்ளத்தின் போதும் வாழ்வாதாரத்தை இழந்து புதிய வசிப்பிடம் தேடி அலைய வேண்டியது இவர்கள் வாழ்வின் ஒரு அம்சமாகவே ஆகிவிட்டது .


இயற்கையின் சீற்றத்திற்கு இப்படி இடம் பெயர்பவர்கள் எல்லாம் அசாமி மொழி பேசுவோரின் அகராதியில் வந்தேரிகள். அவர்கள் வாழ வழிவிடமாட்டோம் என்பது தான் அவர்கள் லட்சியம். இந்த லட்சியத்தை அறுவடை செய்தது அன்று அசாம் கனபரிஷத், இன்று பாரதிய ஜனதா கட்சி. செப்டம்பர் 23,2021 அன்று நடந்ததும் இதன் வெளிப்பாடுதான்.


மே 10 அன்று ஹிமாந்த பிஸ்வா சர்மா அசாமின் முதல்வராக பதவியேற்றார். அந்த தேர்தலில் அவர் பரப்புரை செய்யும் போது தன்னை இந்து தேசியவாதி என்றும், அசாமை வங்க முஸ்லிம்களிடமிருந்து மீட்டெடுப்போம் என்றும் பகிரங்கமாக முழங்கினார். இத்தனைக்கும் அவர் காங்கிரசில் இருந்து பாஜகவில் இணைந்தவர்.
அவர் முதல்வர் ஆனதும், வங்க மொழி பேசுவோர் குடியிருக்கும் நிலங்களை பறித்து உள்ளூர் மக்களுக்கு கொடுக்கப்படும் என அறிவித்தார். தர்ராங் மாவட்டம் தோல்பூர் மண்டலத்திற்கு உட்பட்ட கோருகுட்டி கிராமத்தின் சிவன் கோயிலுக்கு ஜுன் 7 நேரில் சென்ற அவர், இப்பகுதியில் குடியிருக்கும் வங்க மொழி பேசுவோரை காலி செய்துவிட்டு அந்த நிலங்களை மீட்டு இயற்கை விவசாயம் செய்ய கையகப்படுத்த வேண்டும் என உத்தரவிட்டார். இது கோயிலுக்கு சொந்தமான நிலம் என்றும் விஷ வித்தை தூவினார்.


இதன் விளைவாக அங்கு காலம் காலமாக வசித்து வந்த 800 குடும்பங்களை வெளியேற்றி அவர்கள் வசித்து வந்த 4500 பிகாஸ் நிலங்களை கையகப்படுத்தும் நடவடிக்கைகளை அதிகாரிகள் முடுக்கி விட்டனர். இது 25 ஆயிரத்து 455 ஏக்கர் என கணிக்கப்படுகிறது.


இதுவரை அசாமில் உள்ள வங்க மொழி பேசும் முஸ்லிம்கள் சட்டவிரோதமாக குடியேறிகளாக பார்க்கப்பட்டார்கள். இப்போது சட்ட விரோத ஆக்கிரமிப்பாளர்களாக மாற்றப்பட்டுள்ளனர். ஆகவே அவர்களை வெளியேற்றும் நடவடிக்கைகளில் மாநில அரசு, மாவட்ட நிர்வாகம், காவல்துறை, உள்ளூர் அசாமியர்கள் என அனைவரும் ஒன்றிணைந்து செயல்படுகின்றனர்.


செப்டம்பர் 20 திங்கட்கிழமை தர்ராங் மாவட்டத்தின் தோல்பூர் 1, தோல்பூர் 3 இடங்களுக்கு வந்த வருவாய் மற்றும் காவல்துறையினர் அங்கு வசிக்கும் மக்களிடம் வீடுகளை அகற்றி வெளியேறுமாறு கூறினர். ‘நாங்கள் பல்லாண்டு காலமாக இங்கு வசிக்கிறோம், எனவே வேளாண் திட்டத்தை கைவிட்டு எங்களை வாழவிடுங்கள்’ என மன்றாடினர். ஆனால் முதலமைச்சர் நேரில் வந்து போட்ட உத்தரவு என்பதால் மாவட்ட நிர்வாகம் அவர்கள் கோரிக்கையை ஏற்க மறுத்தது.


நாங்கள் வெளியேறினால் எங்கு போய் வாழ்வது? என்று கேட்ட மக்களுக்கு ஒரு இடத்தை அதிகாரிகள் சொல்லியுள்ளனர். அது பிரம்மபுத்திரா மற்றும் சுதா ஆற்றுக்கும் இடைப்பட்ட பகுதி. அங்கு செல்ல படகு ஒன்றே வழி. மேலும் 15 அடியில் தண்ணீர். வருடத்தில் பலமுறை வெள்ளம் மற்றும் நில அரிப்பு ஏற்படும். குடியிருப்பு நீரில் மூழ்கி விடும். எனவே மாற்று இடம் தாருங்கள் வெளியேறுகிறோம்’ என அந்த அப்பாவிகள் கூறியுள்ளனர்.


ஆனால் எதையும் காதில் வாங்காத மாவட்ட நிர்வாகம் அவர்களை அகற்றுவதில் தீவிரமாக இருந்தது. முதல் நாள் பலர் வெளியேற்றப்பட அவர்கள் வாழ்விடம் இன்றி நிர்க்கதியாக தவிக்கின்றனர் என உணர்ந்த மீதமுள்ளவர்கள் தங்களை காலி செய்ய எதிர்ப்பு தெரிவித்தனர்.ஆயிரக்கணக்கில் குவிக்கப்பட்ட ஆயுதப்படை தடியடி நடத்தி கலைக்க, பொதுமக்கள் கல் வீசியுள்ளனர். அப்போது கைது செய்ய வாய்ப்பு இருந்தும் மிக அருகிலிருந்து காவல்துறையினர் துப்பாக்கியால் சுட்டுள்ளனர். இதில் இருவர் உயிரிழக்க பலர் காயமடைந்தனர். அதில் ஒரு பெண்ணின் வயிற்றில் துப்பாக்கி குண்டுகள் இன்னமும் உள்ளன.


அப்படி துப்பாக்கியால் சுடப்பட்டதில் நெஞ்சில் குண்டுகள் பாய்ந்து கீழே சாய்ந்த மொயீனுல் ஹக் என்ற 28 வயது இளைஞர் உயிருக்குப் போராட அவரை மருத்துவமனைக்கு தூக்கிச் செல்ல முயற்சிக்காத காவல்துறையினர் கொஞ்சம்கூட இரக்கம் இன்றி சுற்றி நின்று லத்தியால் தாக்குகின்றனர். அவர் உடல் அசைவற்று போக இறந்த அந்த உடலின் மீது ஒருவன் மாறிமாறி ஏறி குதிக்கிறான்; மார்பில் ஏறி மிதிக்கிறான்.


பிஜாய்சங்கர் பனியா என அறியப்பட்ட அந்த அயோக்கியன் பாஜக மற்றும் காவல்துறைக்கு நெருக்கமானவன்; மாவட்ட நிர்வாகத்தால் படம் பிடிக்க ஏற்பாடு செய்யப்பட்ட போட்டோகிராபர்.


அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த சம்பவத்தில் செப்டம்பர் 24 வெள்ளிக்கிழமை மட்டும் காலி நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டு பின்னர் நிறைவேற்றி முடிக்கப்பட்டுள்ளன.


இருவர் உயிரிழப்பு, பலர் காயம், ஆயிரக்கணக்கானோர் வீடு வாசல் இருப்பிடங்களையிழந்து செய்வ தறியாது திகைக்கின்றனர். 4 பள்ளி வாசல்களும் ஒரு மதரஸாவும் தரைமட்டமாக்கப்பட்டன. பள்ளி வாசல்கள் அகற்றப்பட்டதால் வெள்ளி ஜூம்ஆ தொழுகை வெட்டவெளியில் நடைபெற்றது.


இச்சம்பவங்களை பிபிசி, அல்ஜசீரா போன்ற ஊடகங்கள் காட்சிப்படுத்தின. உலகம் காறி உமிழ்ந்தது. வழக்கத்துக்கு மாறாக இந்தியா கில்ஸ் முஸ்லிம்ஸ்; பைகாட் இந்தியன் புரோடக்ட்ஸ் என்ற ஹேஸ்டேக் அரபு நாடுகளில் ட்ரெண்டிங் ஆயின.
மனித உரிமை ஆர்வலர்கள் சம்பந்தப்பட்டவர்களை பணியிடை நீக்கம் செய்யப்பட வேண்டும் என கூறியுள்ளனர். மதச்சார்பற்ற ஜனநாயக சக்திகளும் இதை கண்டித்தனர். அசாம் அரசின் ஆதரவுடன் இந்த துப்பாக்கிச்சூடு நடந்துள்ளதாக கண்டித்துள்ள காங்கிரஸ் கட்சியின் ராகுல் காந்தி, பாதிக்கப்பட்ட மக்களுக்கு துணை நிற்போம் என கூறியுள்ளார். அசாம் காங்கிரஸ் தலைவர் பூபேன் குமார் போரா, இது மனிதாபிமானமற்ற செயல்; கௌகாத்தி உயர் நீதிமன்ற நீதிபதியைக் கொண்டு விசாரிக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.


இறந்தவர்களுக்கு இரங்கல் கூட தெரிவிக்க மனமில்லாத அரக்க குணம் கொண்ட அசாம் முதல்வர், ‘இடங்களைக் காலி செய்ய மறுத்தவர்கள் பல்லாயிரக்கணக்கில் திரண்டு காவலர்கள் மீது கல்வீசி தாக்கினர், அதனால் தான் துப்பாக்கி சூடு! மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர் என எவரையும் சஸ்பெண்ட் செய்யும் பேச்சுக்கே இடமில்லை;அவர்கள் என் உத்தரவையே செயல் படுத்தினார்கள் என நியாயப் படுத்தியதோடு, இந்தசம்பவத்தை காரணம் காட்டி ஆக்கிரமிப் பாளர்களை அகற்றும் நடவடிக் கைகள் ஒருபோதும் நிற்காது தொடரும் என திமிருடன் கூறினார்.


என்ன செய்வது? பேய் அரசாண்டால் பிணம் தின்னும் சாத்திரங்கள் என்பது நம் நாட்டு சொல்வழக்கு தானே!


பெரும்பாலான இந்திய ஊடகங்கள் இச்சம்பவத்தை கண்டு கொள்ளாதது ஜனநாயகத்தின் நான்காவது தூண் செல்லரிக்க செய்யப்பட்டுள்ளதோ எனக் கேட்கத் தோன்றுகிறது.

  • கோம்பை ஜெ.நிஜாமுதீன்

Leave a Reply

Your email address will not be published.