தேசிய குடிமக்கள் பதிவேடு (என்ஆர்சி) குடியுரிமை திருத்தச் சட்டம் (சிஏஏ), தேசிய மக்கள் தொகை பதிவேடு (என்பிஆர்) ஒட்டுமொத்த இந்தியாவையும் போராட்டக்களமாக்கி உள்ளதோடு சர்வதேச விவாதப் பொருளாக்கியும் விட்டது. இந்த சட்டங்களின் மீது மக்கள் விழிப்புணர்வு கொண்டு முன்னெச்சரிக்கை முயற்சிகளில் இறங்கியுள்ளனரா? எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதில் ஒரு முகமான வழிகாட்டுதல் செய்யப்படுமா? என்ற கேள்விகள் இன்று பரவலாக எழுந்துள்ளன. இந்த சட்டங்களை விளங்கிக்கொள்ள சுருக்கமாகத் தருகிறோம்.

இந்திய அரசியலமைப்புச் சட்டமும் குடியுரிமையும்

நம் இந்திய திருநாட்டை வழி நடத்துவது இந்திய அரசியலமைப்புச் சட்டமே! பத்துலட்சம் பேருக்கு ஒருவர் என்ற அடிப்படையில் 385 உறுப்பினர்கள் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டு, தேசப் பிரிவினைக்கு பின் அது 299 ஆக குறைந்து அரசியல் நிர்ணய சபை அமைக்கப்பட்டது.

1946 டிசம்பர் 9 அன்று தொடங்கி இரண்டு வருடங்கள் 11 மாதங்கள் 17 நாட்கள் செயல்பட்டு 114 நாட்கள் எழுதப்பட்டு அரசியலமைப்பு சட்டத்தின் இறுதி வடிவை அங்கீகரித்து 284 உறுப்பினர்கள் 1949 நவம்பர் 26ல் கையெழுத்திட்டனர். அவர்களில் ஒருவர் கண்ணியத்துக்குரிய காயிதே மில்லத். இந்த நாளே அரசியல் சட்ட நாளாகும். இந்திய அரசியலமைப்புச் சட்டம் நடைமுறைக்கு வந்த நாள் 1950 ஜனவரி 26 அதுவே குடியரசு தினமாகும்.

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் உயிர்நாடி அதன் முகப்புரையே. இறையாண்மை, சமதர்மம், சமயச்சார்பின்மை, ஜனநாயகம், குடியரசு ஆகிய ஐந்து அடிப்படை அம்சங்களை இது பறைசாற்றுவதோடு, சமூக பொருளாதார, அரசியல் நீதி, எண்ணம், வெளிப்பாடு, நம்பிக்கை, சமயம் மற்றும் வழிபாட்டுச் சுதந்திரம், தகுதி நிலை மற்றும் வாய்ப்புகளில் சமத்துவம், தனிமனித கண்ணியம், ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டை உறுதிசெய்யும் சகோதரத்துவம் ஆகிய உறுதிகளையும் வழங்குகிறது.

இந்திய அரசியலமைப்புச் சட்டம் அங்கீகரிக்கப்பட்ட அன்றே குடியுரிமை, தேர்தல், தற்காலிக நாடாளுமன்றம் ஆகியவை உடனடியாக அமுலுக்கு வந்து விட்டன.

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் இரண்டாவது பகுதியின் 5 முதல் 11 வரையிலான சரத்துக்கள் இந்தியக் குடியுரிமையை எடுத்தியம்புகின்றன.
1) இந்தியாவை வாழ்விடமாகக் கொண்டிருந்தோர்
2) பாகிஸ்தானிலிருந்து 1948 ஜூலை 19க்கு பின் குடிபெயர்ந்து வந்தோர்
3) 1947 மார்ச் 1 க்குப் பின் பாகிஸ்தானுக்கு குடிபெயர்ந்து சென்று பின்னர் மீண்டும் இந்தியாவுக்கு வந்தோர்
4) இந்தியாவில் பிறந்து வெளிநாடுகளில் வாழ்ந்தோர்
ஆகிய நான்கு வகையான மக்களுக்கு இந்திய குடியுரிமை வழங்கப்பட்டது.
1949 நவம்பர் 26 முதல் கிடைத்த அனுபவங்களைக் கொண்டு 1955 டிசம்பர் 30 முதல் ‘இந்திய குடியுரிமை சட்டம் 1955 ’ நடைமுறைக்கு வந்தது.
1) பிறப்பு வழி குடியுரிமை 2) மரபுவழி குடியுரிமை 3) பதிவு வழி குடியுரிமை 4) அயல்நாட்டவர் குடியுரிமை 5) இணைப்பு மூலம் குடியுரிமை என ஐந்து வழிகளில் இந்திய குடியுரிமை பெற இச்சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டது.

1950 ஜனவரி 26 அல்லது அதற்கு முன் பிறந்தவர் பிறப்பு வழி குடியுரிமை பெறலாம் என்றும், இதே தேதியில் இந்தியாவுக்கு வெளியே பிறந்திருந்தாலோ அல்லது பெற்றோரில் ஒருவர் இந்திய குடிமகனாக இருந்திருந்தாலோ மரபுவழி குடியுரிமை பெறலாம் என அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்திய வழித்தோன்றல், இந்திய கணவனை மனம் செய்த பெண், இந்திய குடிமக்களான தம்பதியருக்கு பிறக்கும் குழந்தைகள், பதிவு வழிக் குடியுரிமை பெறலாம் என்றும், சில நிபந்தனைகளுக்குட்பட்டு அயல்நாட்டவருக்கும் குடியுரிமை வழங்கலாம் என்றும் இந்தியாவில் இணைக்கப்பட்ட பகுதிகளில் குடியிருந்தோருக்கு இணைப்பு மூலம் குடியுரிமை பெறலாம் என்றும் இச்சட்டம் தெளிவுபடுத்தியது.

இந்த குடியுரிமை சட்டம் 1986, 1992, 2003, 2005 ஆகிய ஆண்டுகளில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. 1986 ஆம் ஆண்டு திருத்தத்தில், ‘பிறப்பின் அடிப்படையில் குடியுரிமை என்பதற்கு 1950 ஜனவரி 26க்கு பின், 1987 ஜூலை 1க்கு முன் இந்தியாவில் பிறந்தவர்கள் என கால நிர்ணயம் செய்யப்பட்டது. அத்துடன் 1987 ஜூலை 1ஆம் தேதிக்கு பிறகு பிறந்தவர்களின் பெற்றோரில் ஒருவர் இந்திய குடிமகனாக இருந்தால் அவர்களும் இந்திய குடிமக்கள் என்பது குறிப்பிடப்பட்டது. 1992ல் செய்யப்பட்ட குடியுரிமை சட்டத்திருத்தத்தில் 1950 ஜனவரி 26க்கும் 1955 டிசம்பர் 30 கும் இடைப்பட்ட நாளில் பிறந்தவர்களின் தந்தை இந்திய குடிமகனாக இருந்தால் இவர்களுக்கும் வம்சாவழியில் இந்திய குடியுரிமை கிடைக்கும் என்று இருந்ததில் ‘தாயும்’ சேர்க்கப்பட்டாள்.

2003 இல் திருத்தம் செய்யப்பட்ட குடியுரிமை சட்டம் 2004 டிசம்பர் 3 முதல் நடைமுறைக்கு வந்தது. இந்த தேதிக்கு பின்னர் பிறக்கும் குழந்தையின் பெற்றோர் இருவரும் இந்திய குடிமக்களாக இருக்க வேண்டும். ஒருவர் இந்திய குடிமகனாக இல்லாமல் இருந்தால் அந்தக் குழந்தைக்கு இந்திய குடியுரிமை கிடைக்காது எனக் குறிப்பிட்டது. அத்துடன் இந்திய குடிமக்கள் அனைவரையும் கட்டாயமாக பதிவு செய்து அவர்களுக்கு அடையாள அட்டை வழங்குவதோடு அதனை நடைமுறைப்படுத்த தேசிய குடிமக்கள் பதிவேடு உருவாக்க வேண்டும் என்ற திருத்தம் இதில்தான் செய்யப்பட்டது.
1998 – 2004 பாஜக தலைவர் அடல் பிகாரி வாஜ்பாய் பிரதமராக இருந்த காலகட்டமாகும். இன்றைய தேசிய குடிமக்கள் பதிவேடு (என்ஆர்சி) நாடு முழுவதும் அமல்படுத்தப்பட அடித்தளமிட்டது இந்த திருத்தத்தின் மூலம் தான்.

தேசிய குடிமக்கள் பதிவேடு [ என்ஆர்சி ]

தேசிய குடிமக்கள் பதிவேடு (என்ஆர்சி) என்பது அசாமில் அறிமுகமானது. அசாம் இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் ஒன்று. 1905 ஜூலை 19இல் வெள்ளைய அரசால் மேற்கொள்ளப்பட்ட வங்கப்பிரிவினை இந்திய விடுதலைப் போரில் ஒரு புதிய அத்தியாயத்தை ஏற்படுத்தியதோடு இந்து -முஸ்லிம் மோதலுக்கும் வித்திட்டது. கிழக்கு வங்கத்தில் அசாம் இடம்பெற்றது. வங்கப்பிரிவினை 1911 டிசம்பர் 15-ல் ரத்து செய்யப்பட்டாலும் வங்கப்பிரிவினை தொடங்கி இன்று வரை அசாம் முஸ்லிம்கள் துயரங்களை அனுபவித்து வருகின்றனர். முஸ்லிம் குடியேற்றங்களை தடுத்து நிறுத்தவே 1920களில் ‘லைன் சிஸ்டம் & வரி அமைப்பு’ அமல்படுத்தப்பட்டது. இந்தியா சுதந்திரம் அடைந்தபின் 1950 ஜனவரி 26இல் அசாம் தனி மாநிலம் ஆனது.

1970ல் பாகிஸ்தானில் நடைபெற்ற தேர்தலில் கிழக்குப் பாகிஸ்தானின் முஜிபுர் ரஹ்மானின் அவாமி லீக் கட்சி 167 இடங்களில் வெற்றி பெற்றும், மேற்கு பாகிஸ்தானில் 88 இடங்களில் வென்ற மக்கள் கட்சியின் பூட்டோவுடன் இணைந்து ஆட்சியமைக்குமாறு அதிபர் யாஹ்யா கான் கூற, அதற்கு சம்மதிக்காத முஜிபுர் ரஹ்மான் முக்திவாஹினி படையை அமைத்து தனிநாடு கோரி ராணுவத்துடன் சண்டையிட்டார். கிழக்கு பாகிஸ்தான் தனி நாடாக இந்தியா ஆதரித்தது. தலையிட வசதியாக தனது நீண்ட எல்லையை திறந்தது. கிழக்குப் பாகிஸ்தானில் இருந்து பல லட்சம் பேர் அகதிகளாக வந்தனர். அதையே காரணம் காட்டி இந்தியா ராணுவ நடவடிக்கை எடுத்து கிழக்கு பாகிஸ்தானை சுதந்திர வங்கதேச நாடாக 1971 டிசம்பர் 16 அன்று அறிவிக்கச்செய்தது.

அப்போது வந்த அகதிகளில் மிகப் பெரும்பான்மையோர் வங்கதேசம் திரும்பினர். சிலர் இந்தியாவிலேயே தங்கினர். எங்கள் வனங்கள் மற்றவர்களால் ஆக்கிரமிக்கப்படுவதாக கூறிய போடோ பழங்குடிமக்கள் தனி மாநில கோரிக்கை எழுப்பினர்.

இச்சூழலில் 1983 தொடக்கத்தில் அசாம் வருகைதந்த பாஜக தலைவர் அடல் பிகாரி வாஜ்பாய், வங்கதேசத்தவர் அசாமில் குடியேறி அவர்களின் வாழ்வாதாரத்திற்கு பெரும் சவாலாக இருப்பதாக கூறி வன்முறையை தூண்டும் வகையில் பேசினார். 1983 பிப்ரவரி 18 ஒரேநாளில் தற்போதைய மோரிகாவோன் மாவட்டத்தின் நெல்லி பகுதியில் பல கிராமங்களை அழித்து பல்லாயிரக்கணக்கான முஸ்லிம்களை போடோ பழங்குடி இனத்தவர்கள் படுகொலை செய்தனர். இதற்கு தீர்வுகான 1985 ஆகஸ்ட் 15 அன்று ராஜீவ் காந்தி தலைமையிலான மத்திய அரசுக்கும், மாணவர் அமைப்புகளுக்கும் இடையே ஒப்பந்தம் ஏற்பட்டது.

இந்த ஒப்பந்தப்படி 1961 முன் வந்தவர்களுக்கு அனைத்து உரிமைகளும் வழங்குவது, 1961 முதல் 1971 வரை வந்தவர்களுக்கு வாக்குரிமை தவிர மற்ற உரிமைகள் வழங்குவது. 1971 பிறகு வந்தவர்களை வெளியேற்றுவது என முடிவு செய்யப்பட்டது. இந்த ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தாலும் அது கிடப்பில் போடப்பட்டது. பின்னர் முஸ்லிம்களுக்கு எதிரான பல கலவரங்கள் நடைபெற்று எண்ணற்றோர் உயிரிழந்தனர். 2012 ஆகஸ்டில் நடைபெற்ற கலவரத்தில் நாலு லட்சம் முஸ்லிம்கள் 270 அகதி முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர்.

அசாமில் என்ஆர்சியை புதுப்பிக்க உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியது. இதற்காக அம்மாநிலத்தில் 1600 கோடி ரூபாய் செலவில் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. மொத்தம் உள்ள 3 கோடியே 30 லட்சம் மக்களில் 2.9 கோடி பேர் இடம்பெற்ற வரைவு பட்டியல் வெளியிடப்பட்டது. 40 லட்சம் பேர் நாடற்றவர்களாகும் சூழ்நிலையில் பல முயற்சிகளுக்குப் பின் அந்த எண்ணிக்கை 19 லட்சமாக குறைந்தது.

இந்த 19 லட்சம் பேரையும் நாடற்றவர்களாக்கி அகதி முகாமில் அடைக்க வேண்டும். அகதி முகாம்களும் கோடிக்கணக்கான ரூபாய் செலவில் உருவாகிக் கொண்டிருக்கும் போதுதான் மத்திய அரசுக்கு ஒரு உண்மை தெரியவந்தது.

இந்த 19 லட்சம் பேரில் 13 லட்சம் பேர் இந்துக்கள். ஐந்து லட்சம் முஸ்லிம்கள். ஒரு லட்சம் சீக்கியர்கள், பௌத்தர்கள், சமணர்கள் என்பதே இந்த உண்மை. என்ன செய்வது என்று யோசித்த மத்திய அரசின் மூளையில் உதித்ததுதான் குடியுரிமை திருத்த சட்டம்.

குடியுரிமை திருத்த சட்டம் 2019 (சிஏஏ)

2019 டிசம்பர் 9 அன்று நாடாளுமன்ற மக்களவையிலும், டிசம்பர் 11 அன்று மாநிலங்களவையிலும் மத்திய உள்துறை அமைச்சரால் தாக்கல் செய்யப்பட்டு அவசரமாக நிறைவேற்றப்பட்டு டிசம்பர் 12 இரவோடு இரவாக குடியரசுத் தலைவரின் கையெழுத்து பெற்று சட்டமாக்கப்பட்டது தான் குடியுரிமை திருத்த சட்டம் 2019.

ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ், பாகிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்து 2014 டிசம்பர் 31-க்கு முன் இந்தியா வந்துள்ள இந்து, சீக்கிய, பௌத்த, சமண, பார்சி மற்றும் கிறிஸ்தவ மதங்களை சேர்ந்தவர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்கப்படும் என்பதே இச்சட்டத் திருத்தம் ஆகும். இச்சட்ட திருத்தத்தில் இஸ்லாம் மதம் சேர்க்கப்படவில்லை. இந்தியாவின் ஒன்பது அண்டை நாடுகளில் மேற்குறிப்பிட்ட மூன்று நாடுகள் தவிர மற்ற நாடுகள் சேர்க்கப்படவில்லை.

இதனால் இந்தியாவில் தங்கியுள்ள மியான்மரின் ரோஹிங்கியா முஸ்லிம்களுக்கு குடியுரிமை கிடைக்காது. இந்துக்களாக இருந்தும் இலங்கையின் தமிழ் அகதிகளுக்கு குடியுரிமை கிடைக்காது. பூட்டான் கிறிஸ்தவர்களுக்கும் குடியுரிமை கிடைக்காது.

பாகிஸ்தானின் பலுசிஸ்தான் தனி நாடு கோரிக்கையை இந்திய ஆதரிக்கிறது. இந்த கோரிக்கை எழுப்பும் பலூசிகள் பாகிஸ்தானிலிருந்து வெளியேற்றப்படுகின்றனர். அவர்களுக்கும் அகமதியாக்களுக்கும் குடியு ரிமை கிடைக்காது.

வங்கதேசம் இந்தியாவின் மிக நெருங்கிய நட்பு நாடு. அங்கே இருந்து வந்தவர்களுக்கும் நம் குடியுரிமை கிடைக்காது. மொத்தத்தில் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் சமய சார்பற்ற கொள்கைக்கு முற்றிலும் முரணானது இந்த சட்டத்திருத்தம். சுதந்திர இந்திய வரலாற்றிலேயே மதத்தின் பெயரால் மக்களை பிரிக்கும் சட்டம் இதுதான். எனவேதான் இந்த சட்டத்தை எதிர்த்து நாடே கொந்தளிக்கிறது.

குடியுரிமை திருத்த சட்டத்தை தொடர்ந்து தேசிய குடிமக்கள் பதிவேட்டை அசாம் மட்டுமின்றி நாடு முழுவதும் அமல்படுத்துவோம் என்றார் உள்துறை அமைச்சர். அத்துடன் இதன் மூலம் யாரெல்லாம் இந்தியர்கள் இல்லை என்பதை கண்டறிந்து அவர்களை நாட்டைவிட்டு அப்புறப் படுத்துவோம் என்றார். இதனால் எதிர்ப்புப் போராட்டங்கள் வீரியம் அடையவே என்ஆர்சி பற்றி நாங்கள் சிந்திக்கவே இல்லை, அமைச்சரவைக் கூட்டத்தில் கூட விவாதிக்கவில்லை என பல்டி அடித்தார் பிரதமர் மோடி.

தேசிய மக்கள் தொகை பதிவேடு [ என்பிஆர் ]

பிரதமர் மோடி இப்படி கூறியதற்கு பின்னர் தேசிய மக்கள் தொகை பதிவேடு (என்பிஆர்) குறித்த அறிவிப்பு வெளியானது. கொல்லைப்புற வழியாக (என்ஆர்சி) கொண்டுவரவே என்பிஆர் வருகிறது என எதிர்ப்பு கிளம்பியதும், இது 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை எடுக்கப்படும் வழக்கமான மக்கள் தொகை கணக்கெடுப்பு தான் என அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. ஆனால் என்பிஆரின் நோக்கம் அதன் கேள்வி பட்டியலில் இருந்தே தெரிந்து விட்டது.

ஆங்கிலேயர்கள் நம்மை ஆண்ட போது 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை மக்கள் தொகைக் கணக்கெடுப்பு 1872 முதல் நடைமுறைப்படுத்தப்பட்டது. இதற்காக விடுதலைக்குப்பின் 1948இல் சென்சஸ் ஆஃ இந்தியா ஆக்ட் என்ற சட்டம் இயற்றப்பட்டது. கடைசியாக 2011ம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பு நடைபெற்றது. பிரச்சினைக்குரிய கேள்விகள் அதில் இடம்பெறவில்லை.

ஆனால் 2020 ஏப்ரலில் கணக்கெடுக்க தொடங்கும் என்பிஆரில் சென்றமுறை கேட்கப்பட்ட கேள்விகளும் கூடுதலாக தந்தை தாய் கணவர், மனைவி பெயர், பிறந்த தேதி, பிறந்த இடம், இருப்பிடம் ஆதார் எண், கைபேசி எண் இவைகளும் கேட்கப்படும் இந்த கேள்விகள் முழுக்க என்ஆர்சி தயாரிப்பதற்கே.

மேலும் பிறப்புச் சான்றிதழ், பள்ளி மாற்றுச் சான்றிதழ், உணவு விநியோக அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, கடவுச்சீட்டு, ஓட்டுநர் உரிமம், பான் கார்டு, ஆதார் கார்டு இவைகளும் சரிபார்க்கப்படும்.

மக்கள் தொகை கணக்கெடுக்க வரும் பணியாளர்களுக்கு வழிகாட்டு நெறிமுறைகளை அரசு வழங்கியுள் ளதோடு, என்னென்ன தகவல்கள் பெற வேண்டும், எத்தகைய ஆவணங்களை சரிபார்க்க வேண்டும்; சந்தேகம் இருப்பின் என்ன செய்ய வேண்டும் என்ற அறிவுரைகள் எல்லாம் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளன.

அசாமை சேர்ந்த இஸ்லாமிய பெண் ஜபிதா பேகம் தான் அந்த மாநிலத்தில் நிரந்தரமாக குடி இருப்பதாகவும் அதற்கு ஆதாரமாக 14 ஆவணங்களை காட்டியும் தனக்கு குடியுரிமை வழங்க மறுக்கிறார்கள் என கௌகாத்தி உயர் நீதிமன்றத்தை அணுகினார். ஆனால் உயர் நீதிமன்றமோ இந்த ஆவணங்கள் எதுவும் குடியுரிமைக்கு தகுதியானவை அல்ல. குடியுரிமை பெற பிறப்பு சான்றிதழ் தேவை எனக் கூறி பிப்ரவரி 8, 2020ல் தீர்ப்பளித்துள்ளது.

பிறப்பு இறப்பை பதிவு செய்யும் சட்டம்

இந்தியாவில் பிறப்பு இறப்பு பதிவு செய்யும் சட்டம் ஆர்பிடி ஆக்ட் 1969 நடைமுறைக்கு வந்ததே 1969 மே 31 அன்று தான். தமிழ்நாட்டில் திருத்தி அமைக்கப்பட்ட புதிய செயல்திட்டத்தின் revamped system 1.1.2000 முதல் தான் கட்டாயமாக்கப்பட்டது. இதற்காக காலநிர்ணயம், தாமதக் கட்டணம் அதிலும் பதிய வில்லை என்றால் வருவாய்த்துறை நீதிமன்றம் என எங்கு அணுகி பெறவேண்டும், குழந்தை பெயர் குறிப்பிடாமல் இருந்தால் என்ன நடைமுறை என்பதும் இதில்தான் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

எனவே இந்த தேதிக்கு முன் பிறந்தவர்களின் பிறப்பு சான்றிதழ் கேட்பது எந்த வகையில் நியாயம்? ஒன்று மட்டும் நிச்சயம் என்ஆர்சிக்காக தான் என்பிஆர். என்ஆர்சிக்காகத்தான் சிஏஏ.

என்பிஆருக்காக பதில்களைப் பெற்று ஆவணங்களை சரிபார்த்து பின்னர் அதிலிருந்து என்ஆர்சியை தயாரிப்பார்கள். என்பிஆருக்காக கேட்கப்படும் கேள்விகளுக்கு பதில் சொல்லாமலோ ஆவணங்கள் தராமலோ இருக்கலாம். ஆனால் அதற்கு உரிய காலத்தில் ‘டி’ போட்டு விடுவார்கள். ‘டி’ என்பது சந்தேக பிரஜை. பின்னர் ‘டி’ படிவங்களை தனிமைப்படுத்தி கேள்விகளுக்கு பதிலும் ஆவணங்களும் கேட்பார்கள். கொடுக்க முடியவில்லை எனில் அவர்கள் சந்தேகப்பிரஜை என்பார்கள்.

ஒருவருக்கு சான்றிதழ்கள் சரியாக இருந்தும் அவரது தாய் தந்தையர் சான்றிதழ்களை சமர்ப்பிக்க வில்லை எனில் அவர் சந்தேகப்பிரஜை. அவர் சந்தேகப்பிரஜை என்றால் அதனயே காரணம் காட்டி அவரது பிள்ளைகளும் சந்தேகப்பிரஜை ஆக்கப்படுவர். சந்தேகப்பிரஜை என்றால் நாடற்றவர்கள். நாடற்றவர்களுக்கு எந்த உரிமையும் இல்லை. அவர்கள் முகாம்களில் இல்லாமல் சொந்த வீடுகளில் வாழ்ந்தாலும் அந்த சொத்துக்களை உரிமை கொண்டாட முடியாது. அவை எதிரி சொத்து சட்டப்படி (எனிமி புராப்பர்டி ஆக்ட்) அரசு கையகப்படுத்தும். ஆதார் ரேஷன் கார்டு உள்ளிட்ட அனைத்தும் செல்லாது என அறிவிக்கப்படும்.

என்பிஆர் கணக்கெடுப்பின் போது முஸ்லிம்கள் மட்டுமின்றி ஏழைகள், தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர், ஆதிவாசிகள், நாடோடிகள் என பலதரப்பட்டவர்களும் பாதிக்கப்படுவர். இவர்களிடம் பெரும்பாலும் ஆவணங்கள் இருக்கப்போவதில்லை. இப்படி பாதிக்கப்படுபவர்களில் முஸ்லிமல்லாதவருக்கு குடியுரிமை திருத்த சட்டம் 2019ன் படி எந்த பலனும் இல்லை. இவர்கள் அனைவருக்கும் குடியுரிமை வழங்க வேண்டும் என்றால் குடியுரிமை சட்டத்தில் இன்னொரு திருத்தம் செய்ய வேண்டும்.

மத்திய பாஜக அரசு என்ன வேண்டுமானாலும் செய்யலாம் விளிம்புநிலை மக்களை அச்சத்தில் வைத்திருக்க வேண்டும்; முஸ்லீம்களை உரிமை அற்றவர்களாக்கி அடக்கியாள வேண்டும். இதுதான் அவர்கள் லட்சியம்.
எனவே என்ஆர்சி, சிஏஏ, என்பிஆர் சட்டங்கள் கைவிடப்படும் வரை அதற்கு எதிரான குரல் ஒலித்துக் கொண்டே இருக்க வேண்டும். மத்திய மாநில அரசுகளுக்கு மக்கள் சக்தியின் அழுத்தம் அதிகரிக்க வேண்டும். மக்களுக்கு விழிப்புணர்வு பிரச்சாரம் தொடரவேண்டும்.

கணக்கெடுக்க வருவோரிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதை தேசிய அளவில் சமுதாய தலைவர்கள் உரிய நேரத்தில் ஒருமுகமாக வழிகாட்டுவார்கள். ஆவணங்களை கொடுக்கிறோமோ இல்லையோ நம்மிடம் அவை தயாராக இருக்கவேண்டும். இல்லாதவர்களுக்கு அவைகளைப் பெற்றுக் கொடுக்க தன்னார்வலர்கள் முன்வரவேண்டும். ஊர்அமைப்புக்கள் இதனை முறைப்படுத்த வேண்டும்.

இந்திய குடியுரிமை நமது பிறப்புரிமை! அதனை இழக்கச்செய்யும் சதிகளை முறியடிப்போம்.

காயல் மகபூப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

5 × 2 =