ஜம்மு காஷ்மீரில் அமலிலிருந்த சட்டப்பிரிவு 370-ஐ மத்திய அரசு, கடந்த 2019-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நீக்கியது. அதிலிருந்து அம்மாநிலத்தின் மூன்று முன்னாள் முதல்வர்கள் மெகபூபா முஃப்தி, ஃபரூக் அப்துல்லா மற்றும் ஒமர் அப்துல்லா உள்ளிட்டோரும், அம்மாநில மற்ற அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகளின் தலைவர்களும் பல மாதங்களாகச் சிறைக்காவலிலும், வீட்டுக்காவலிலும் இருந்து வருகின்றனர்.
உலகிலேயே அதிக அளவு ராணுவம் குவிக்கப்பட்டுள்ள ஒரு இடமாகவும் ஜம்மு காஷ்மீர் மாறியிள்ளது. மேலும் அங்கு தகவல் தொலைதொடர்பும் தடை செய்யப்பட்டுள்ளது. ஜம்மு காஷ்மீர் மாநிலம் இரண்டு யூனியன் பிரதேசமாக பிரிக்கப்பட்டு 7 மாதங்கள் ஆகின்றன.
உமர் அப்துல்லா மீது போடப்பட்டுள்ள பொது பாதுகாப்புச் சட்டத்தை எதிர்த்து, அவரது சகோதரி சாரா அப்துல்லா பைலட் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார். ஆனால் இல்திஜா அவரது தாய்க்கு எதிராக போடப்பட்ட வழக்கை எதிர்த்து எந்த நடவடிக்கையையும் இதுநாள்வரை எடுக்கவில்லை. அவர் நீதித்துறையின் மீது சந்தேகப் பார்வையோடு பேசுகிறார்.
ஏசியாவில்லின் அமித் பரத்வாஜ், இல்திஜா முஃப்தியுடன் நடத்திய நேர்காணல் வருமாறு:
அமித் பரத்வாஜ் : மத்திய அரசு சட்டப்பிரிவு 370 மற்றும் 35-ஏ ஆகியவற்றை நீக்கிவிட்டது. ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டுள்ளது. உங்கள் தாய் சிறையில் உள்ளார். இந்த ஏழு மாதங்கள் உங்களுக்கும், உங்கள் குடும்பத்துக்கும் எப்படிக் கழிந்தது?
இல்திஜா முஃப்தி : எங்களுக்கு இது ஒரு கொடுங்கனவைப் போல் உள்ளது. நான் இதை இரட்டை அழிவு என்றே அழைப்பேன். ஏன் என்றால் என் தாய் சட்டத்துக்குப் புறம்பாகக் கடந்த ஆறு மாதங்களுக்கு மேலாகச் சிறையில் உள்ளார். சட்டப்பிரிவு 370, ஒருதலைபட்சமாகவும், சட்டத்துக்குப் புறம்பாகவும் நீக்கப்பட்டுள்ளது. காஷ்மீரிகளை அரசு மிக மோசமாக நடத்தி வருகிறது. கடந்த ஆறு மாதங்களாக அடக்குமுறைகளை இந்த அரசு செய்துவருகிறது. எங்களுக்கு ஒளி மங்கிய எதிர்காலமே தெரிகிறது.
அத்தனை காஷ்மீரிகளுக்கும் கடந்த ஆற மாதங்களும் மிகவும் கடினமான ஒன்றாகவே இருந்துவந்துள்ளது. எனக்குத் தனிப்பட்ட முறையில் என் தாய் சிறையில் இருப்பதால் மிகுந்த வேதனையாக உள்ளது. அவர் ஒரு திடமான பெண் என்பதால் நானும் அவரிடமிருந்து எனக்கான தைரியத்தைப் பெற்றுக்கொள்கிறேன். ஒரு குடும்பமாக இதை நாங்கள் கடந்து வருவோம் என நான் நம்புகிறேன்.
பரத்வாஜ் : நாங்கள் இரண்டு விஷயங்களைச் சமீபத்தில் பார்த்தோம். ஒன்று முன்னாள் முதல்வர் ஒமர் அப்துல்லாவின் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் உலவியது. அது அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இன் னொன்று ஒமர் அப்துல்லாவின் சகோதரி சாரா அப்துல்லா பைலட் அவரது சகோதரருக்கு எதிராகப் போடப்பட்டுள்ள பொது பாதுகாப்பு சட்டத்தை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். ஆனால் உங்கள் தாயின் புகைப்படம் எதுவும் இதுவரை வெளிவரவில்லை. இதற்கு என்ன காரணம்? நீங்கள் அவரை சந்திப்பதற்கு, எவ்வளவு கால இடைவெளியில் அனுமதிக்கப்படுகிறீர்கள்? உள்ளே செல்போன் எடுத்துச்செல்ல அனுமதிக்கிறார்களா?
இல்திஜா : இந்த அரசு எல்லோரையும் சந்தேகக் கண்ணுடனேப் பார்க்கிறது என்பதால், என் தாயைப் பார்ப்பதற்கு அவரது தாய், அவரது சகோதரிகள் மற்றும் மகள்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகிறார்கள். நெருங்கிய குடும்ப உறுப்பினர்களை தவிர மற்றவர்கள் யாருக்கும் அனுமதியில்லை.
நான் அவரை எந்த புகைப்படமும் எடுக்கக்கூடாது என்பதில் தெளிவாக இருக்கிறேன். அவரது தனிப்பட்ட உரிமையான அதில் தலையிட விரும்பவில்லை. அவர் ஒரு பெண், அவர் பல மாதங்களாகத் தனிமையில் உள்ளார். அவரது புகைப்படத்தை வெளியிடுவது என்பது இந்த விஷயத்தின் வீரியத்தன்மையை குறைத்துவிடும் என நான் எண்ணுகிறேன். அதனால் அவரை சந்திக்கும்போது நாங்கள் எந்த புகைப்படத்தையும் எடுப்பதில்லை என்பதில் உறுதியாக உள்ளோம்.
பரத்வாஜ் : சாரா அப்துல்லா பைலட் ஒமர் அப்துல்லாவின் நீடிக்கப்பட்ட சிறைக்காவலை எதிர்த்து வழக்கு தொடர்ந்துள்ளார். நீங்களும் சட்டப்படி ஏதேனும் நடவடிக்கை எடுக்கத் திட்டமிட்டுருக்கிறீர்களா?
இல்திஜா : நான் என்னுடைய வழக்கறிஞரிடம் பேச்சுவார்த்தையைத் தொடங்கியுள்ளேன். ஆனால் காஷ்மீரில் தகவல் தொடர்புகள் துண்டிக்கப்பட்டுள்ளதால் என்னுடைய தாயின் மீது பதியப்பட்டுள்ள வழக்கு ஆவணங்களைப் படிப்பதற்கு கடினமாக உள்ளது. அந்த ஆவணங்கள் முற்றிலும் முட்டாள்தனமானது, எந்த முகாந்திரமும் இல்லாதது. மேலும் முற்றிலும் முரணானது. இந்திய அரசு காஷ்மீரில் கடந்த ஆறு மாதங்களாகச் செய்துள்ளவை, முக்கியமாகத் தகவல் தொடர்பு துண்டிப்பு மற்றும் பொது பாதுகாப்புச் சட்டத்துக்குக் கீழான கைதுகள் முற்றிலும் சட்டத்துக்குப் புறம்பானவை. அரசியலமைப்புக்கு எதிரானவை. நீதிமன்றம் எப்படி அவரை ஏமாற்றியது என்பதை நாம் பார்த்தோம்.
உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால் நீதிமன் றங்கள் மீதான என் நம்பிக்கை பொய்த்துவிட்டது. ஒமர் அப்துல்லா அவர்களின் வழக்கில் நீதிமன்றம் என்ன செய்கிறதென்று பார்ப்போம். நீதிமன்றத்தால் நீதியை நிலைநாட்டமுடிகிறதா என்பதைப் பார்க்க நான் ஆவலாக உள்ளேன்.
பரத்வாஜ் : உங்களுக்கு நீதிமன்றத்தின் மீது நம்பிக்கை பொய்த்துவிட்டதாகச் சொன் னீர்கள். இப்போதுள்ள காலச்சூழலில் உங்களுக்கு இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் மீதும், உச்ச நீதிமன்றத்தின் மீதும் நம்பிக்கை உள்ளதா?
இல்திஜா : எனக்கு இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் மீது மிகுந்த நம்பிக்கை உள்ளது. அது எந்த புனித நூலை விடவும் கீழானது கிடையாது. ஏன் என்னால் இதைச் சொல்ல முடிகிறதென்றால் நான் கருத்துரிமை இருந்த ஒரு நாட்டில்தான் வளர்க்கப்பட்டேன். ஆனால் கடந்த இரண்டு ஆண்டுகாலமாகச் சுதந்திரம் என்ற சொல், அயோக்கியத்தனமாக செயல்படத்தொடங்கியுள்ள மத்திய அரசால் மதிப்பிழக்கத் தொடங்கியுள்ளது.
பிரச்சனை எதில் உள்ளதென்றால், நம்முடைய அரசியலமைப்பை மதிப்பிழக்கச் செய்துவரும் நிறுவனங்களில்தான் உள்ளது. அது மிருக பலத்தோடு உள்ள அரசாக இருக்கட்டும், அல்லது அவற்றின் கிளையாக செயல்படும் நீதிமன்றங்களாக இருக்கட்டும். அவை அத்தனையும் அரசின் ஒரு அங்கமாக செயல்படத்தொடங்கியுள்ளன. அவை அப்படிச் செயல்படக்கூடாது.
பரத்வாஜ் : இதிலிருந்து உங்களுக்கு நீதித்துறையின் மீது நம்பிக்கை பொய்த்துவிட்டது என்ற கருத்தை உறுதிசெய்கிறீர்கள். அப்படித்தானே?
இல்திஜா : ஆம். அப்படித்தான்
பரத்வாஜ் : இது இன்னொரு கேள்விக்கு நம்மை இட்டுச்செல்கிறது. மெகபூபா முஃப்தி, காஷ்மீர் பள்ளத்தாக்குக்கும் புதுடெல்லிக்கும் உள்ள பாலம் என்பது சட்டப்பிரிவு 370 என்று முன்பு தெரிவித்துள்ளார். அதனால் தற்போதுள்ள சூழ்நிலையில் காஷ்மீரின் அரசியல் நிலை என்னவாக இருக்கிறது என்று நீங்கள் எண்ணுகிறீர்கள்? நீங்கள் இன்னும் காஷ்மீரை இந்தியாவின் ஒரு பகுதி என்று எண்ணுகிறீர்களா?
இல்திஜா : நீங்கள் இதை(சட்டப்பிரிவு 370 நீக்கம்) நாட்டின் மற்றப் பகுதிகளோடு காஷ்மீரை இணைக்கும் ஒரு நடவடிக்கையாகப் பார்த்தீர்களென்றால் நீங்கள் தவறாக எண்ணுகிறீர்கள். ஜம்மு காஷ்மீர் மக்களுடன் நாட்டின் மற்ற பகுதியைச் சேர்க்கும் பாலமாக ஒன்று இருந்தது என்றால் அது சட்டப்பிரிவு 370 மட்டுமே.
அந்த பாலத்தை எரித்ததன் மூலமாக நீங்கள் காஷ்மீரிக்களுக்கு துரோகம் இழைத்துள்ளீர்கள். காஷ்மீரிக்கள் இப்படி தனித்துவிடப்பட்டிருப்பதை இதுநாள் வரை நான் பார்த்ததில்லை. என்னையும் சேர்த்தே சொல்கிறேன். எனக்கு இந்த நாட்டின் மீது இனி எந்த நம்பிக்கையும் கிடையாது. ஏன் என்றால் எங்கள் உரிமைகளை பறித்துள்ள ஒரு ஆட்சி இங்கு நடக்கிறது. எங்களுடைய தன்மானத்தைக் காலுக்கு அடியில் போட்டு இந்த அரசு மிதிக்கின்றது. யாரும் இதை எதிர்த்து குரல் கொடுக்கவில்லை.
இந்திய அரசு ஒரு காலனிய அரசைப் போல் நடந்துகொள்கிறது. எங்கள் பெண்களாக இருக்கட்டும், நிலமாக இருக்கட்டும் எங்களின் வளங்களாக இருக்கட்டும் , இந்த அரசு ஜம்மு காஷ்மீரை, எதோ வெற்றிக்குப்பின் சூறையாடி பங்கு பிரித்துக்கொள்ளும் ஒரு அடிமை தேசத்தின் சொத்தைப் போல அணுகுகிறது. காஷ்மீருக்கு துரோகம் இழைத்துள்ள ஒரு சட்டம், எங்களை இந்நாட்டுடன் இணைக்கும் ஒன்றாகக் கருதினார்கள் என்றால் அவர்கள் மிகவும் தவறான கணக்கைப் போட்டுள்ளார்கள்.
பரத்வாஜ் : சட்டப்பிரிவு 370 நீக்கப்பட்டதால் நீங்களும் காஷ்மீர் இந்தியாவின் பகுதியில்லை என்று சொல்கிறீர்களா?
இல்திஜா : நீங்கள் என்னிடம் கேட்கும் இந்த கேள்வி அரசியல் அம்சம் அதிகம் உள்ள கேள்வி. நான் ஊடகங்களிடம் பேசும்போதெல்லாம் ஒரு சினம் கொண்ட காஷ்மீரியாகத்தான் பேசுகிறேன். ஒரு பாதிக்கப்பட்டுள்ள மகளாகப் பேசுகிறேன். ஆனால் கண்டிப்பாக நான் ஒரு அரசியல்வாதியாகப் பேசவில்லை. இது அரசியல்வாதிகள் பதிலளிக்கவேண்டிய ஒரு கேள்வி. ஆனால் எனக்குத் துரோகம் இழைக்கப்பட்ட, தனிமைப்படுத்தப்பட்ட ஒரு ஆழமான உணர்வு உள்ளது என்று மட்டும் சொல்வேன்.
பரத்வாஜ் : நீங்கள் காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டதை எதிர்த்து காஷ்மீரிலோ அல்லது டெல்லியிலோ ஏதேனும் போராட்டத்தை ஒருங்கிணைக்க முயன்றீர்களா? குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராகப் பல கட்டங்களாகப் போராட்டங்கள் நாடு முழுவதும் நடைபெற்றது. நீங்கள் காஷ்மீருக்காக ஏதேனும் போராட்டம் செய்ய முடிவு செய்திருக்கிறீர்களா?
இல்திஜா : முதலில் நான் ஒரு போராட்டத்தை நடத்தவேண்டுமென்றால், அதைக் காஷ்மீரில்தான் நடத்துவேன். நான் ஏன் டெல்லியில் போராடவேண்டும்? என்னுடைய சொந்த மாநிலத்தில் போராடுவதற்கு எனக்கு ஏன் உரிமை இல்லை?
காஷ்மீரில் என்னுடைய சொந்த வீட்டை ஒரு சிறையாக அவர்கள் மாற்றியுள்ளனர். அவர்கள் நினைத்தபோதெல்லாம் என்னை சட்டத்துக்குப் புறம்பாக வீட்டுக்காவலில் வைக்கிறார்கள். என்னுடைய தாத்தாவின் நினைவு தினத்தன்று என்னுடைய சொந்த காவலர் என்னைத் தாக்கினார்.
அமைதியாகப் போராட முடியுமென்றால், போராடும் முதல் ஆளாக நானாகத்தான் இருப்பேன். அமைதியாகப் போராடுவதற்கான உரிமையைக் கூட இந்த அரசு பறித்துள்ளது. பரூக் அப்துல்லாவின் சகோதரி, மகள் உள்ளிட்டவர்கள் அமைதியாக போராடிக்கொண்டிருந்தபோது சில பெண் காவல்துறையினர் அவர்களை எப்படி அப்புறப்படுத்தினார்கள் என்பதை நாம் பார்த்தோம். அவர்கள் அனைவரும் அன்று இரவு முழுக்க சிறையிலிருந்தார்கள்.
காஷ்மீரிகளுக்கு சமமான உரிமைகள் கொடுக்கப்பட்டுள்ளன என இந்த அரசால் துணிவாகச் சொல்ல முடிகிறது. ஆனால் உண்மையில் நாங்கள் மனிதர்களுக்குக் கீழானவர்களாக நடத்தப்படுகிறோம். குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிரான பேரணிகளை நாம் தேசமெங்கும் பார்க்கிறோம். அவர்களால் வீதிக்கு வந்து அவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதைச் சொல்ல முடியும்போது நாங்கள் ஏன் அதையே பண்ணக்கூடாது?
சில அதிகாரிகள் நான் அதிகம் பேசினால், என் தாய் அதிகம் சிரமப்படுவார் என்பதை மறைமுகமாகத் தெரிவித்துள்ளார்கள்.
பரத்வாஜ் : இந்த கலந்துரையாடலின் இறுதியில் நீங்கள் இந்த கேள்விக்குப் பதிலளிக்க வேண்டும் என நான் விரும்பினேன். உங்கள் தாய் மெகபூபா முஃப்தியும் மற்றும் மக்கள் ஜனநாயக கட்சியும் ஆட்சி அமைக்கும்போது, நேஷ்னல் கான்ஃபிரன்ஸ் மற்றும் காங்கிரஸைத் தவிர்த்துவிட்டு பாஜகவுடன் கூட்டணி வைத்தார்கள். இப்பள்ளத்தாக்கில் பாஜக வளர்ச்சியடைய ஒரு வாய்ப்பளித்த குடும்பத்தைச் சேர்ந்தவர் என்பது உங்களை உறுத்துகிறதா?
இல்திஜா : கண்டிப்பாக. எதோ ஒரு காஷ்மிரீக்குள்ளாவது எனக்கான அன்பு இருக்கும் என்று நான் எண்ணினால் என்னை நானே ஏமாற்றிக்கொள்கிறேன் என்று அர்த்தம். எனக்கு அதனால் அவர்கள் மீது எந்த வருத்தமும் இல்லை. அவர்களுக்கு என் மீது ஏதேனும் கோபம் இருந்தால் அது முழுக்க முழுக்க நியாயமானது. உண்மையாகச் சொல்கிறேன். நான் இன்று பேசுவதெல்லாம் எந்த பாராட்டையும் எதிர்பார்த்ததல்ல. நான் ஒரு அரசியல்வாதியல்ல. அரசியலில் நுழையும் எந்த திட்டமும் என்னிடம் இல்லை. சொல்லப்போனால் என் தாய் வெளி வந்தபின், காஷ்மீர் தலைவர்கள் விடுவிக்கப்பட்டபின் நான் பேசுவதை நிறுத்திக்கொண்டு, நான் முன்பு எப்படி இருந்தேனோ அதே போல் ஒரு தனி நபராக மாறிப்போவேன். அதே போல் நான் அவர்களுக்காக பேசினேன் என்பதற்காக காஷ்மீரிகள் என்னைப் பாராட்டுவார்கள் என்று எண்ணியும் நான் ஏமாறப்போவதில்லை. மெகபூபா முஃப்தியின் மகளாக அதிகமான சுமைகளை நான் சுமக்கிறேன் என்பது உண்மைதான். என் தாய் எடுத்த முடிவுகளுக்கு…நான் கேள்விகளை எதிர்கொள்கிறேன்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

twenty − two =