தமிழகத்தில் போட்டி தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களுக்கு டிஎன்பிஎஸ்சி நடத்தும் தேர்வுகள் முக்கிய இலக்காக இருக்கின்றன.
குரூப்-1 மற்றும் குரூப்-2 நிலையிலான தேர்வுகள் எழுதும் மாணவர்கள் விரிவாக விடை அளிக்கும் எழுத்து தேர்வு விடைத்தாள்கள் எந்த அடிப்படையில் திருத்தப்பட்டு மதிப்பெண்கள் வழங்கப் படுகின்றன என்ற கேள்விகளை நீண்ட நாட்களாகவே மக்கள் எழுப்பி வருகின்றனர். எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வுகளில் கலந்து கொள்ளும் தேர்வர்கள் எழுத்துத்தேர்வில் தம்மை விட குறைந்த மதிப்பெண்கள் பெற்றவர்களிடம் நேர்முகத் தேர்வில் வெற்றி வாய்ப்பை இழக்க நேரும். போட்டித்தேர்வு நடைமுறைகளின் இயல்பான ஒன்றாகவே இது இருக்கிறது என்பதால் அவற்றிற்கு பரிசோதிக்க வேண்டிய அவசியம் இதுவரையிலும் எழவில்லை.
விரிவான விடை அளிக்கும் எழுத்துத் தேர்வுகள், நேர்முகத்தேர்வு இல்லாத குரூப்-2 ஏ குரூப்-4 தேர்வு கொள்குறி (Object) வகையில் மட்டுமே வினாத்தாள் அமைந்திருக்கும். எனவே சரியான விடைகளை தேர்ந்தெடுத்தால் போதுமானது. மதிப்பெண்கள் அடிப்படையில் வேலை வாய்ப்பு உறுதி. எனவே குரூப்-1, குரூப்-2 தேர்வுகளில் வெற்றி வாய்ப்பை இழந்தவர்கள் குரூப் 2ஏ மற்றும் குரூப் 4 தேர்வுகளை தங்களது கடைசி வாய்ப்புகளில் ஒன்றாக கருதுகின்றனர். இந்நிலையில் தற்போது கொள்குறி வினாக்களில் கூட தங்களது நம்பிக்கையை இழக்கின்றனர் இளைஞர்கள்.
குரூப்-4 தேர்வுகளில் தற்போது முறைகேடுகளின் பின்னணியில் இருந்த இடைத்தரகர்கள் கடந்த குரூப்-2 ஏ தேர்வில் வென்றவர்கள் என்பதால் அந்த தேர்விலும் முறைகேடுகள் நடந்திருக்குமோ என்ற நியாயமான சந்தேகங்கள் எழுகின்றன.
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் 2019 செப்டம்பரில் நடத்திய குரூப்- 4 தேர்வில் நடந்த முறைகேடுகள் தற்போது வெளிச்சத்திற்கு வந்திருக்கின்றன. ராமேஸ்வரத்தில், கீழக்கரையில் தேர்வு எழுதியவர்கள் இந்த முறைகேட்டில் ஈடுபட்டதாக டிஎன்பிஎஸ்சியின் விசாரணையில் தெரியவந்து 39 தேர்வர்கள் வெற்றி பெற்றது செல்லாது என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. மேலும் முறைகேட்டில் ஈடுபட்டதாக கண்ட றியப்பட்ட 99 தேர்வர்கள் தேர்வாணைய தேர்வுகளை எழுதுவதற்கு வாழ்நாள் தடை விதிக்கப்பட்டிருக்கிறது. இது வரவேற்புக்குரியது.
சில வருடங்களுக்கு முன்னர் டிஎன்பிஎஸ்சி நடத்திய குரூப் 2 தேர்வின் போது வினாத்தாள்கள் கசிந்தது கண்டறியப்பட்டது. தேர்வு நாளன்று விசாரணைகள் தீவிரமடைந்தன. வினாத்தாள்கள் மின்னஞ்சல் வழியாக பகிரப்பட்டது தெரியவந்து அந்த முறைகேட்டில் தொடர்புடைய போட்டித்தேர்வு பயிற்சி மையம் விசாரணை வளையத்தில் கொண்டு வரப்பட்டு தேர்வு ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. மறுதேர்வும் நடத்தப்பட்டது. அதேமாதிரி நடைமுறையை தற்போதும் தேர்வாணையம் பின்பற்றலாம். குரூப்- 2 வினாத்தாள் கசிந்த போது தேர்வாணையம் தன்னுடைய நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி இருந்தால் தற்போதைய முறைகேடுகள் நடந்திருப்பதற்கான வாய்ப்பு உருவாகி இருக்காது.
டிஎன்பிஎஸ்சி நடைமுறைகளில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் குரூப்- 2 வினாத்தாள் கசிந்த பிறகு கொண்டுவரப்பட்டன. தேர்வு மையங்களில் தேர்வு தொடங்குவதற்கு முன்பு வினாத்தாள்கள் பிரிக்கப்படுவதும், தேர்வு முடிந்து விடைத்தாள்கள் திரையிடப்படுவதும் கேமராக்களில் பதிவு செய்யப்பட்டன. தேர்வு அறையில் குறுக்கும் நெடுக்குமாக கேமராக்கள் கூட வலம் வந்தன. தேர்வு மையங்கள் படப்பிடிப்பு தளங்களை போல காட்சியளித்தன. ஆனாலும் கடைசியில் தேர்வு மையத்திற்கு வெளியே முத்திரையிடப்பட்ட விடைத்தாள்கள் பிரிக்கப்பட்டு திருத்தங்கள் செய்யப்பட்டிருக்கின்றன என்பது தான் தற்போதைய ஆச்சரியம்.
சில மாணவர்கள் குரூப் 4 தேர்வில் எழுதிய கொஞ்ச நேரத்திலேயே அழிந்துவிடும் தன்மையை கொண்ட மேஜிக் பேனாக்களை பயன்படுத்தி தேர்வெழுதியுள்ளனர் என்பது தற்போதைய விசாரணை வளையத்திற்குள் முக்கிய பேசு பொருள் ஆகியிருக்கிறது.இதனால் தற்போது நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் விசாரணை வலையத்திற்குள் கொண்டுவரப்பட்டுள்ளனர்.
தற்போதைய கேள்வி என்னவெனில் விசாரணை வளையத்துக்குள் கொண்டு வரப்பட்ட நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்களின் இந்த பிரச்சினை முடிந்து விடக் கூடியது அல்ல. அவர்களுக்கு இடைத்தரகராக செயல்பட்ட நான்கைந்து பேர் கைது செய்வதோடு இந்த பிரச்சனை முடிவு கட்டிவிட கூடியதும் அல்ல.
இரண்டு வட்டாட்சியர்களும் ஒரு சில அலுவலக உதவியாளர்களும் சேர்ந்து இந்த முறைகேட்டை செய்து விட முடியும் என்பதும் நம்புவதற்கு உரியது அல்ல. இந்த பின்னணியில் அதிகாரிகள் அரசியல்வாதிகள் என்று பெரும் பின்னணி இருந்தாகவேண்டும்.
அழுத்தங்களுக்கு வாய்ப்பு இல்லாமல் விசாரணை தொடரும் பட்சத்தில் மத்திய பிரதேச ‘வியாபம்’ ஊழல் போல தமிழகத்திலும் நீண்ட காலமாக தொடர்ந்து வரும் மாபெரும் ஊழல் வெளிச்சத்திற்கு வரலாம்.
இருபது முதல் முப்பது வயது வரையிலான காலகட்டம் என்பது ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் மிக முக்கியமானது. கல்லூரி படிப்பை முடித்துவிட்டு தங்கள் திறமையையும் முயற்சிகளும் கொண்டு ஒரு அரசுப் பணியை பெற்றுத் தந்து விடும் என்ற நம்பிக்கையில் அரசு நூலகங்களில் ஆண்டுகளை செலவிடும் இளைஞர்களிடம் தேர்வாணையம் நம்பிக்கையை தற்போது இழந்து விட்டது. இழந்த நம்பிக்கையை விரைந்து பெற டிஎன்பிஎஸ்சி சுய பரிசோதனை செய்து கொள்ள வேண்டியதும், இது போன்ற ஊழல்களில் பெரிதும் இருக்கக்கூடிய அரசியல் தலையீடுகளில் இருந்து தனித்து விளங்கவேண்டியதும் தற்போதைய காலத்தின் கட்டாயம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

fourteen − 6 =