பிரியமுள்ள பிறைநெஞ்சுக்கு!
எல்லாம் வல்ல இறைவனின் பேரருள் நம் அனைவரின் மீதும் என்றென்றும் நின்றிலங்கட்டுமாக!

நாம்; நமது தேசம்; நம் மக்கள்; நமது கலாச்சாரம்; நம் பாரம்பரியம் என்கிற உணர்வை உள்ளத்தில் உருவகப்படுத்தி உவகைப் பெருக்கோடு வாழ்ந்த ஜனநாயக இந்தியாவில்தான் நாம் தொடர்கிறோமா? ஜாதி, மதம், சமயம், மொழி இவைகளைக் கடந்து நாம் இந்தியர்கள் என்கிற பெருமிதம் நம் இதயங்களில் எப்போதும் மிதந்து கொண்டு இருந்ததே! அது இப்போது இருக்கிறதா? இருக்க வேண்டும் என்பது வேறு; உண்மையில் இருக்கிறதா? என்பது தான் கேள்வி.

உலகில் மிகப்பெரும் ஜனநாயக நாட்டில் வாழ்கிறோம் என்கிற நம்பிக்கை உள்ளங்களில் கரைந்து கொண்டே போகிறது என்பது இப்போது எதார்த்தாமாகிப் போய்விட்டது. நம் நாடு பல்சமய நம்பிக்கை கொண்ட அகண்ட பாரதம் என்கிறோம். அனைத்து சமய மத நம்பிக்கை கொண்ட மக்களும் நம்மக்கள் என்கிறோம். யார் எந்த மொழி பேசினாலும் நம்மவர் என்கிறோம்; நமது தேசப் பற்றில் மதங்கள் குறுக்கிடாத மாசற்ற மனங்கள் கொண்டது நம் பாரதம் என்கிறோம்; இத்தகைய உணர்வுகள் இப்போது புழுதி படர்ந்திருக்கிற பார்வையாக மாறிவிட்டனவே என்கிற கவலை ஒவ்வொரு நாளும் நம்மை அழுத்திக் கொண்டே இருக்கிறது.

ஒரு காலகட்டத்தில் வாஜ்பாய், அத்வானி ஆகியோர் தலைமையில் பாஜக ஆட்சியைக் கண்டோம்; இப்போது நரேந்திர மோடி, அமித்ஷா ஆகியோர் தலைமையில் பாஜக ஆட்சியைக் காண்கிறோம். இவை இரண்டிற்கும் பெருத்த வேறுபாடுகள் இருப்பதை யாரும் மறுக்க முடியாது. இந்த நிலை நீடிக்குமானால் இப்போதைய மற்றும் அடுத்தடுத்த தலைமுறையினரின் இந்தியா எப்படி இருக்கும்? என்கிற கேள்வி எழுந்து நிற்கிறது.

காஷ்மீரின் தனிச்சிறப்பு அந்தஸ்து – அரசியல் சாசன சட்டப்பிரிவு 370 நீக்கம் செய்யப்பட்டது; முத்தலாக் தடைச்சட்டம் என்கிற பெயரில் முஸ்லிம் தனியார் சட்டத்தில் கைவைத்தது; மக்கள் குடியுரிமை பதிவு என்கிற பெயரில் பத்து லட்சத்திற்கும் மேற்பட்ட அஸ்ஸாம் மாநில முஸ்லிம்களை புறந்தள்ளுவது; என்.ஐ.ஏ என்கிற பெயரில் எவரையும் எந்த நேரத்திலும், எந்த இடத்திலும் கைது செய்து விசாரணை என்று உள்ளே தள்ளுவது; இப்படி கொஞ்சம் கொஞ்சமாக இந்தியா தனது ஜனநாயகத் தோற்றத்தை இழந்து வருவது பெரும் கவலையளிக்கக் கூடியதாக இருக்கிறது.

இதுபோன்ற நடவடிக்கைகளைத் தடுத்து நிறுத்தும் அளவுக்கு பிரதான எதிர்க்கட்சியாக காங்கிரஸ் கட்சி செயல்படுகிறதா? என்றால் அங்கேயும் ஏமாற்றம்தான். மற்ற எதிர்க்கட்சிகளும் ஒருங்கிணைந்து செயல்படுகின்றனவா? என்றால் அங்கேயும் ஏமாற்றம் தான். காங்கிரஸ் கட்சியின் தலைமைப் பொறுப்பை இரண்டாவது முறையாக சோனியா காந்தி அவர்கள் ஏற்றுக் கொண்டு இரண்டு மாதங்கள் கடந்துவிட்டன. ஏற்கனவே இருபது ஆண்டுகளுக்கு மேலாக காங்கிரஸ் கட்சியின் தலைமைப் பொறுப்பில் இருந்த சோனியா அம்மையாருக்கு அக்கட்சியில் தனி மரியாதை இருந்தாலும், இப்போது தலைமைப் பொறுப்பை அவர் ஏற்றுக்கொண்டதாலேயே காங்கிரஸ் கட்சியின் உள்ளேயும், வெளியேயும் நிலவுகிற பிரச்சினைகளுக்குத் தீர்வு காண எந்த அடையாளமும் தெரியவில்லை. இதன் பிரதிபலிப்பாக இப்போதைய அரசியல் தலைகீழ் மாற்றங்களுக்கு புதிய வியூகம் அமைத்து மோடி – அமித்ஷாவின் பாஜக அரசை எதிர்கொள்ளும் வேகமும் விவேகமும் வலுவிழந்ததாகவே காணப்படுகிறது.

நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் எதிர்க்கட்சி என்கிற தகுதியைப் பெற முடியாவிட்டாலும் 12 கோடிக்கும் அதிகமான வாக்குகளைப் பெற்றிருப்பதை சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாது. தேசிய அளவில் எல்லா மாநிலங்களிலும் தனக்கென பிரத்தியேக வாக்கு வங்கியைக் கொண்டு ஏதோ சில இடங்களையாவது பெற முடிந்தது. ஆனபோதிலும் தொடர்ந்து வருகிற இடைத் தேர்தல்கள், மாநிலப் பொதுத்தேர்தல்கள் என பார்த்தால் எல்லா தேர்தல்களிலும் பெரும்பாலும் தோல்விகளையே சந்தித்து, சக்திவாய்ந்த எதிர்க்கட்சியாக அந்தக் கட்சியால் மீண்டும் எழமுடியவில்லை என்பது தான் எதார்த்த உண்மை.

நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலுக்குப் பிறகு காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி தனது தலைமைப் பதவியைத் துறந்து தார்மீக ரீதியில் தன்னை விடுவித்துக் கொண்டாலும் ஏற்கனவே பெரும் சரிவை சந்தித்திருக்கிற காங்கிரஸ் கட்சியை மேலும் பலவீனப்பாதைக்கு வழிவகுத்து விட்டதாகவே அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். தலைமைப் பொறுப்பிலிருந்து விலகுவதற்கு முன்பு, முறையாக உள்கட்சித் தேர்தலை நடத்தி, காங்கிரஸ் கட்சியை ஒரு ஸ்திரத் தன்மைக்கு கொண்டு வந்திருக்க வேண்டும். செய்யவில்லை. அதன் விளைவு மூன்று மாதகாலம் தலைவரே இல்லாமல் கட்சியின் பலவீனம் என்பது மேலும் அதிகமாகி இப்போது தேய்ந்துகொண்டே போவது நமக்கெல்லாம் மிகுந்த கவலையைத் தருகிறது.

இதனிடையே காங்கிரஸ் கட்சியின் தலைவர் பொறுப்பை சோனியா காந்தி அவர்கள் அண்மையில் மீண்டும் ஏற்றுக் கொண்டாலும் கடந்த இரண்டு மாதங்களாக சில மாநிலங்கள் வழக்கமான கோஷ்டிபூசலில் சிக்கித் தவித்துக் கொண்டிருப்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். அண்மையில் இடைத்தேர்தல்கள் நடக்கவிருக்கிற ஹரியானா, மஹாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம், டில்லி ஆகிய பெருநகரங்களில் ஒற்றுமையை ஏற்படுத்துவதில் சோனியா காந்தி அதிக முனைப்பு காட்டி வருகிறார் என்பதும், தகுந்த பலன் இதுவரை கிட்டவில்லை என்பதும் கூடுதல் தகவல்.

காங்கிரஸ் கட்சியில் கோஷ்டிப் பூசல்கள் ஒருபுறம் இருந்தாலும் அந்த கட்சி எதிர்கொள்ளும் தெளிவான சிந்தனை இல்லாத கொள்கைக் குழப்பம்தான் மிகவும் மோசமானது. ராகுல் காந்தியின் தலைமையில் காங்கிரஸ் கட்சி தன்னை ஒரு மிதவாத இந்துத்துவா கட்சியாக மாற்றிக் கொள்ளும் முயற்சியில் இறங்கியது. ஒரு கட்டத்தில் ராகுல் காந்தி பூணூல் அணிந்து கொண்டு தன்னை ஒரு பிராமணராகக் காட்டிக் கொள்ள முயன்றதும், கோயில் கோயிலாகச் சென்று பலவிதமான பூஜைகளில் கலந்து கொண்டதும் மிதவாத இந்துத்துவா உத்திகளாகக் கருதப்பட்டன. ஆனால் சாமாண்ய வாக்காளர்களுக்கு முன்னால் ராகுல் காந்தியின் செயல்பாடுகள் எடுபடவில்லை.

கடந்த நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் முத்தலாக் தடை சட்டம், காஷ்மீரின் 370 பிரிவை நீக்கி அம்மாநில சிறப்பு அந்தஸ்து ரத்து, தேசிய புலனாய்வு முகைமை சட்டத்திருத்த மசோதா, தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு விவகாராத்தில் அஸ்ஸாம் மாநில முஸ்லிம்களுக்கு எதிரான நிலைபாடு என பல்வேறு அம்சங்களில் பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸின் நிலைபாடு அழுத்தம் உள்ளதாக இருந்திருந்தால் மற்ற எதிர்க்கட்சிகளையும் சேர்த்துக் கொண்டு ராஜ்யசபா ஓட்டெடுப்பில் கவனம் செலுத்தியிருக்க முடியும். பாஜக அரசின் மேற்கண்ட முஸ்லிம் விரோத போக்குகள் தடுத்து நிறுத்தப்பட்டிருக்கும். ஆனால் காங்கிரஸோ முறையான அக்கரை செலுத்தாமல் ஏனோ தானோ என்றிருந்தது சிறுபான்மை முஸ்லிம் மக்களின் மத்தியில் ஒருவித ஏமாற்றத்தை உருவாக்கிவிட்டது என்றே சொல்லலாம்.

இனிவரும் காலங்களிலாவது எதிர்க்கட்சிகளெல்லாம் ஒருங்கிணைக் கப்பட்டு மோடி அரசின் மதவாத, மக்கள் விரோத நடவடிக்கைகளை எதிர்க்கும் போக்கில் காங்கிரஸ் அக்கரை செலுத்துமானால் அதன் எதிர்காலம் பிரகாசிக்கத் தொடங்கும். இல்லையேல் காங்கிரஸ் மீதியிருக்கும் மக்களின் நம்பகத்தன்மை அருகிப் போய், மதவாத பாஜக அரசின் ஆணவப் போக்கை மேலும் வளரச் செய்துவிடும். இந்த தேசம் காலம் காலமாகப் போற்றிவந்த ஜனநாயக மரபுகள் புறந்தள்ளப்படும்; எதிர்க்கட்சிகள் சர்வாதிகார கரங்களில் மாட்டி பிழிந்தெடுக்கப்படும் என்கிற அச்சத்தை ஒட்டு மொத்தமாக காண நேரிடுமோ என்று சாமானிய மக்கள் பேசிடும் பேச்சுக்கள் காதுகளில் ஒலிக்கின்றன.

“இதுபோன்ற அச்சம் தேவையில்லாதது; சமயசார்பற்ற ஜனநாயக இந்தியா நிலைத்து நிற்கும்” என்று மக்களுக்கு உறுதியளிக்கும் மோடி அரசின் மனமாற்றத்தை நாம் எல்லோருமே எதிர்பார்போம்; நல்லது நடக்கும் என்று நம்பிக்கை வைப்போம்.

அன்புடன்

எம்.அப்துல் ரஹ்மான்
ஆசிரியர்
பிறைமேடை மாதமிருமுறை

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

4 × 1 =