‘‘ மத துவேஷம் – வேண்டாம், வேண்டவே வேண்டாம் ’’

0
187
ABDUL RAHMAN EX MP

பிரியமுள்ள பிறைநெஞ்சுக்கு!
எல்லாம் வல்ல இறைவனின் பேரருள் நம் அனைவரின் மீதும் என்றென்றும் நின்றிலங்கட்டுமாக!

“பன்முகத்தன்மை கொண்ட பாரத நாடு” என்கிற பெருமை தான் நமது இந்திய நாட்டின் உலகலாவிய அடையாளச் சிறப்பு. மதச்சார்பற்ற மாண்புடைமையே நமது அரசியல் சாசன சட்டம் வழங்கியிருக்கக் கூடிய மகிமை. எவரும் எந்த மத நம்பிக்கையையும் பின்பற்றி வாழலாம்; அதனை பரப்பலாம்; அதனை விடுத்து மாறலாம் என்பன போன்ற ஜனநாயக அடிப்படையிலான முழு சுதந்திரம் நிலவுகிற மிகப்பெரிய துணை கண்டம் என போற்றப்படும் பாரம்பரிய வரலாறு நமது நாட்டுக்கு உண்டு.

இந்த வரலாற்றின் தூய்மை இப்போது பல்வேறு சங்கடங்களுக்குள் ஆட்பட்டிருப்பது மிக, மிக துருதிருஷ்டம் என்று தான் சொல்ல வேண்டும், இதன் நீட்சி இளைய தலைமுறையான மாணவர்களுக்கிடையேயும் படர்ந்திருப்பதைக் காணுகிற போது தேசத்தின் எதிர்காலம் பற்றிய கவலை நம்மைப் போன்றவர்களுக்கு மிகுதியாகிறது.

அண்மையில் உத்திரப்பிரதேச மாநிலத்திலுள்ள மிகப்பெரும் பழமையான வாரணாசி இந்து பனாரஸ் பல்கலைக் கழகத்தில் நடந்த நிகழ்வு நம்மை தலைகுணியச் செய்திருக்கிறது.

வளர்ந்து வரும் இளைய சமுதாய மாணவர்களின் உள்ளங்களில் உருவாக்கப்பட்டிருக்கும் மதரீதியிலான துவேச உணர்வு இப்படியே வளருமேயானால் இந்தியாவின் எதிர்காலம் எப்படி ஆகப் போகிறது? எனச் சொல்லப் புரியவில்லை. அப்படி என்னதான் நடந்தது?
இந்த பல்கலைக் கழக சமஸ்கிருதத் துறையின் உதவிப் பேராசிரியராக கடந்த நவம்பர் 7ஆம் தேதி பொறுப்பேற்க வந்தார் முனைவர் பெரோஸ்கான். நேர்முகத் தேர்வில் தேர்ச்சியுற்ற 10 பேரில் இவர் தான் முதல் தர மதிப்பெண் பெற்று உதவிப் பேராசிரியராக நியமன உத்தரவு பெற்றிருந்தார்.

அப்பல்கலைக் கழகத்தின் மாணவர்கள் சமஸ்கிருத துறையின் நுழைவு வாயிலின் முன் தர்ணாவில் ஈடுபட்டு பேராசிரியர் முனைவர் பெரோஸ்கான் இங்கே பணியில் சேரக் கூடாது என கடுமையாக எதிர்ப்பு தெரிவித்திருக்கின்றனர். இதற்கு அவர்கள் சொல்லிய காரணம்தான் மிகவும் அதிர்ச்சியைத் தந்திருக்கிறது. “ஹிந்து சனாதன தர்மத்தைச் சாராத ஒருவர் சமஸ்கிருதம் கற்பிப்பதை தங்களால் ஏற்றுக் கொள்ள முடியாது” என்பது தான் அவர்களின் போராட்டத்திற்குக் காரணம்.

வாரணாசியில் பனாரஸ் இந்து பல்கலைக் கழகம் 1916-யில் உருவாக்கப்பட்டது. மிகப்பெரிய பல்கலைக் கழகம் இது. இதற்கு முன்னர் முகம்மடன் ஆங்கிலோ ஓரியண்டல் கல்லூரி என 1875லிருந்து நடந்து வந்த நிறுவனம் அதே காலகட்டத்தில் 1920-யில் பெயர் மாற்றம் பெற்று அலிகர் முஸ்லிம் பல்கலைக் கழகமானது. ஆக, இவ்விரண்டு பல்கலைக் கழகங்களும் இந்து, முஸ்லிம் என்கிற வார்த்தைகளைத் தன்னகத்தே கொண்டிருந்தாலும் இவைகள் தோற்றுவிக்கப்பட்டதன் பின்னணியும் முக்கிய நோக்கமும் நேர்த்தியான கல்வியறிவு கொண்ட பரந்து விரிந்த பெருந்தன்மையான பார்வை கொண்ட நவ இந்தியாவை உருவாக்க வேண்டும் என்பது தானே தவிர வேறல்ல. இந்த உயர்வான சித்தாந்தம் இப்போது சிதைக்கப்பட்டுப் போனதன் விளைவு தான் பேராசிரியர் பெரோஸ்கானை உள்ளே நுழையவிடாமல் நடத்திடும் மாணவர்களின் போராட்டம்.

இந்தியாவில் வாழ்கிற பலதரப்பட்ட மதத்தினரும், சமூகத்தினரும் ஒருவருக்கொருவர் நல்லிணக்கம்பேணி, உலகின் வளர்ந்த நாடுகளுக்கு நிகராக பல்வேறு துறைகளுக்கான அறிஞர்களை உருவாக்கி, நமது தேசத்தை உலகின் தலைசிறந்த தேசமாக மாற்றிக் காட்ட வேண்டும் என்கிற உயரிய கொள்கையுடன்தான் சர் செய்யது அஹ்மது கான் அவர்களால் அலிகர் முஸ்லிம் பல்கலைக் கழகமும், பண்டித மதன் மோகன் மாளவியா அவர்களால் பனாரஸ் இந்து பல்கலைக் கழகமும் தோற்றுவிக்கப்பட்டன என்கிற உயிர்ப்புச் சத்து நிறைந்த உணர்வினை மாணவச் செல்வங்களுக்கு ஊட்ட வேண்டிய கட்டாயம் மத்திய அரசின் கல்வித்துறைக்கு மிகவும் அவசியமானது; அதே நேரத்தில் பனாரஸ் இந்து பல்கலைக் கழகம் உருவாவதற்கு ஹைதராபாத் நிஜாம், மீர் உஸ்மான் அலிகான் போன்றோர் பெருந்தன்மையோடு வழங்கிய பெருமளவிலான நிதி பயன்பட்டுள்ள வரலாற்றையும் இம்மாணவர்களுக்கு அறியச் செய்திட வேண்டும்.

முனைவர் பெரோஸ்கான் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்தவர். ஜெய்ப்பூர் ராஷ்ட்ரிய சமஸ்கிருத சன்ஸ்தானிலிருந்து சமஸ்கிருதத்தில் முதுகலைப் பட்டமும், முனைவர் பட்டமும் பெற்றவர். இவருடைய தந்தை ரம்ஜான் கானும், இவரின் பாட்டனார் கபூர் கானும் சமஸ்கிருதம், அரபி, உருது ஆகிய மொழிகளில் ஒருசேர புலமை பெற்றவர்கள். இதுபோல இந்துக்கள், கிறிஸ்தவர்கள் பலர் அரபி, உருது ஆகிய மொழிகளிலும் பேராசிரியர்களாகப் பணியாற்றுவதை உலகின் பல்வேறு பல்கலைக் கழகங்களில் பார்க்கலாம்.

சிரியா, ஜோர்டான், லெபனான், எகிப்து, போன்ற நாடுகளில் அரபி மொழி வித்தகர்களாக கிறிஸ்தவர்கள் பலர் இருப்பதையும் இவர்கள் பல்வேறு ஐரோப்பிய நாடுகளில் அரபி மொழி பேராசிரியர்களாகப் பணியாற்றுவதையும் பார்க்கலாம். முகலாய மன்னர் ஷாஜஹானின் மூத்த மகன் தாரா ஷிகாவ், சமஸ்கிருதம் படிப்பதில் மிகுந்த ஆர்வம் கொண்டு, காசிக்கு வந்து அங்கே இருந்த சமஸ்கிருத அறிஞர்களிடம் சமஸ்கிருதம் கற்றுத் தேர்ந்தார் என்பது மாத்திரமல்ல; அரபி மொழியிலும் தேர்ச்சி பெற்றிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஆக, மொழியை மொழியாகத்தான் பார்க்க வேண்டுமே தவிர, துவேஷ உணர்வுக்கு வழிவகுக்கிற மதக் கண்கொண்டு பார்க்கக் கூடாது.

மதத்தின் அடிப்படையில் எந்த மொழியும், மொழியின் அடிப்படையில் எந்த மதமும் அணுகப்படக் கூடாது என்பதுதான் யதார்த்தம்.

வேற்றுமையில் ஒற்றுமை காணும் பெருமிதம் கொண்ட நாடு நமது நாடு. இந்தியாவின் தனிச்சிறப்பே இது தான். மொழியாலோ கலாச்சார நடப்புகளாலோ, வணக்க வழிபாட்டு முறைகளாலோ, வேறுபட்ட மத நம்பிக்கைகளாலோ “நாமெல்லாம் இந்தியர்கள்” என்கிற ஒருமைப்பாடு சிதைவதற்கு நாம் யாரும் அனுமதிக்கக் கூடாது.

மதம் என்பது சில சித்தாந்தங்களைத் தாங்கி நிற்கிற நம்பிக்கை; அதன் அடிப்படையில் வணக்க வழிபாட்டு முறைகளும் வேறுபடும். அதனால் நாம் யாரும் யாருக்கும் பகைவர்கள் அல்ல; உற்ற உறவினர்கள்தான். நாம் அனைவருமே இந்தியர்கள் என்கிற ஒருமைப்பாட்டு உணர்வு கொண்டவர்கள். நம்மை எந்த சக்தியாலும் எவராலும் பிரித்தாள முடியாது என்கிற உறுதிப்பாடு ஒன்றே நமது தேசத்தை முன்னெடுத்துச் செல்லும் வலிமை கொண்டது.

எனவே, மொழியோ, மொழி சார்ந்த மதமோ, மதம் சார்ந்த நம்பிக்கையோ, நம்பிக்கை சார்ந்த கலாச்சாரமோ, கலாச்சாரம் சார்ந்த இனமோ, இனம் சார்ந்த நிறமோ, நிறம் சார்ந்த தோற்றமோ நம்மை பிரித்தாளக் கூடாது என்பதே நமது முன்னோர்களும், சான்றோர் பெருமக்களும் காட்டித் தந்த வாழ்வியல் முறை. இந்த அறம் சார்ந்த வாழ்வியலை எல்லா துறைகளிலும் மிளிரச் செய்ய வேண்டிய முதற்கடமை ஆளுகிற ஆட்சியாளர்களுக்கு இருக்கிறது; அதன் அடிப்படையில் உறுதியோடு நிலைத்திருக்க வேண்டிய கடமை வாழுகிற மக்களுக்கு இருக்கிறது.

இவை இரண்டும் நேர்கோட்டில் சிறப்பாக பயணிக்குமானால் இந்தியாவின் அனைத்து துறைகளும் மேலோங்கும்; உலக அரங்கில் இந்தியா ஒரு வலிமை மிக்க நாடாக சிறந்தோங்கும் என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை. அந்த ஒற்றை இலக்கை நோக்கி அனைவரும் பயணிப்போம்; அனைத்திலும் வெற்றி காண்போம்.

அன்புடன்
எம்.அப்துல் ரஹ்மான்
ஆசிரியர்
பிறைமேடை மாதமிருமுறை

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

two + 5 =