பிரியமுள்ள பிறைநெஞ்சுக்கு!
எல்லாம் வல்ல இறைவனின் பேரருள் நம் அனைவரின் மீதும் என்றென்றும் நின்றிலங்கட்டுமாக!

நாடாளுமன்ற மக்களவையில் அதிக இடங்களைப் பெற்று மிகப்பெரும் சக்தியாக ஆணவத்தோடு ஆட்சி செய்து கொண்டிருக்கும் மதவாத பா.ஜ.கவுக்கு நாடாளுமன்ற தேர்தலிலும் மாநில தேர்தல்களிலும் எதிர்க்கட்சிகள் ஒருங்கிணையாமல் போவதே மிகச்சரியான, சாதகமான வாய்ப்பாகப் போய்விடுவதைக் கண்கூடாகப் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

கர்நாடகத்தில் ஆட்சி செய்து கொண்டிருந்த காங்கிரஸ் & மஜத கூட்டணி அரசைக் கவிழ்த்திட சட்டமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்கி, தாமே ஆட்சி அமைத்துக் கொண்ட பா.ஜ.கவுக்கு தகுந்த பாடம் கற்பித்து ஆட்சியிலிருந்து நீக்கிடக் கிடைத்த 15 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில்கூட ஆட்சியை இழந்த இரண்டு கட்சிகளுமே தனித்தனியாகத்தான் தேர்தலை சந்தித்தன.

ஒன்றிணைந்து ஆட்சி செய்தவர்கள், ஆட்சியை இழந்த நிலையில் பா.ஜ.கவுக்கு இந்த இடைத்தேர்தல் 7 இடங்களுக்கு மேல் வெற்றி பெற்றால்தான் ஆட்சியில் தொடர முடியும் என்று இருந்ததே! வாய்ப்பினைப் பயன்படுத்தி இரண்டு கட்சிகளும் ஒருங்கிணைந்து போட்டியிட்டிருந்தால் இது சாத்தியமாகி இருந்திருக்குமே! செய் தார்களா? தனித் தனியாகப்போட்டியிட்டு பாஜகவுக்கு தேவையான இடங்களையும் தாண்டி பெரும்பாலான இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியில் தொடர்கிறது பாஜக.

மாறாக காங்கிரஸும், மதசார்பற்ற ஜனதா தளமும் கூட்டுசேர்ந்து போட்டியிட்டிருந்தால் முடிவு வேறாக அமைந்திருக்கும். கர்நாடகத்தில் இன்றைக்கு பாஜக ஆட்சியில் இல்லாமல் போயிருக்கும். அத்தோடு பணம் கொடுத்து எம்எல்ஏக்களை விலைக்கு வாங்கி அரசியல் சதி மூலம் ஆட்சியைப் பிடித்த அவர்களுக்கு உரிய பாடமும் கிடைக்கப் பெற்றிருக்கும். வாய்ப்பு கைநழுவிப் போனது அரசியல் ஈகோவினால் தான்.

இதே நிலைதான் இப்போது நடைபெறவிருக்கிற டெல்லி சட்டமன்ற பொதுத்தேர்தலிலும் பிரதிபலிக்கப்போகிறதோ என எண்ணத்தோன்றுகிறது. நடந்துமுடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் டெல்லி மாநிலத்தை ஆட்சி செய்து கொண்டிருக்கிற ஆம் ஆத்மி கட்சியும், காங்கிரஸும் கூட்டணி அமைத்து போட்டியிட்டால் டெல்லியில் உள்ள ஏழு நாடாளுமன்றத் தொகுதிகளிலும் வெற்றி பெறலாம் என்ற முடிவில்தான் தொடக்கத்தில் இரு கட்சிகளும் பேச்சுவார்த்தையைத் தொடங்கின. “நாம் தனித்தனியாக நின்றால் 7 தொகுதிகளுமே பா.ஜ.கவுக்கு சாதகமாகப்போய்விடும் என்று ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் கெஜ்ரிவால் வெளிப்படையாகவே சுட்டிக்காட்டினார். நிலைமை என்ன ஆனது? பேச்சுவார்த்தைகளில் வழக்கமான ஈகோ மேலிட்டு, தனித்தனியாக சவாரி செய்தார்கள். கெஜ்ரிவால் சொன்னது போல அங்குள்ள 7 தொகுதிகளிலும் பா.ஜ.க வென்றது. இவர்கள் இருவருக்கும் ஒரு இடம் கூட கிடைக்கவில்லை.

அண்மையில் குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிராக குரல் கொடுக்க கூட்டப்பட்ட எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் இதே காங்கிரஸும், ஆம் ஆத்மி கட்சியும் ஒன்று சேருகிறார்கள்; ஆனால் தேர்தல்களில் இந்த ஒருங்கிணைப்பை காட்டாமல் தனித் தனியாக நின்று கோட்டை விடுகிறார்கள். பலன் என்ன? இதனால் பலனும், பழமும் பா.ஜ.கவுக்குத் தான். இதனை நன்றாகத் தெரிந்திருந்தும் மீண்டும் மீண்டும் அதே தவறைச் செய்கிறார்களே! வேதனையாக இருக்கிறது.

தலைநகர் டெல்லிக்கான சட்டமன்ற பொதுத் தேர்தல் வருகிற பிப்ரவரி எட்டாம் தேதி நடக்கவிருக்கிறது. பா.ஜ.கவுக்கு கொண்டாட்டம்தான். காங்கிரஸும் ஆம் ஆத்மி கட்சியும் கூட்டணியாக இந்த தேர்தலை சந்திக்குமோ-? என ஒருவித அச்சத்துடன் கவனித்துக் கொண்டிருந்த பா.ஜ.க இப்போது மகிழ்ச்சியில் ஆழ்ந்திருக்கிறது. இவர்கள் இருவரும் தனித்தனியாக களம் காண்பதால் இவர்களை வேட்டையாடி டெல்லி சட்டமன்றத்தை வெற்றி கொள்வது கடினம் அல்ல என்கிற முடிவில் பாஜக இருப்பதை ஊடகங்கள் அனைத்துமே சுட்டிக்காட்டுகின்றன.

2009 மக்களவைத் தேர்தலில் டெல்லியில் உள்ள 7 இடங்களையும் 57 சதவீத வாக்குகளுடன் பா.ஜ.க வென்றது. அதாவது 70 சட்டமன்றத் தொகுதிகளில் ஏறத்தாழ 60 தொகுதிகளில் முன்னிலை வகித்தது. காங்கிரஸ் 23 சதவீத வாக்குகளும், ஆம் ஆத்மி கட்சி 18 சதவீத வாக்குகளுமே பெற்று தோற்றுப் போயின. இப்போது நடக்கவுள்ள தேர்தலில் இதே நிலை நீடித்து விடக்கூடாது என எதிர்பார்ப்போம். எதிர்க் கட்சிகள் ஒருங்கிணையாமல் தனித்தனியே போட்டியிட்டு பா.ஜ.கவுக்கு எதிரான வாக்குகள் பிரிந்து போனாலும், இப்போதைய காலகட்டத்தில் பாஜக ஆட்சியின் மக்கள் விரோத, ஜனநாயக விரோத நிலைமையால் முடிவுகள் வேறாக மாறலாம்; மாற வேண்டும். காரணம் தலைநகர் டெல்லியில் ஆட்சியைப் பிடிப்பது என்பது ஒரு கௌரவப் பிரச்சனையாகவே கருதப்படுகிறது.

மற்ற மாநிலங்களைப் போல அல்லாது தலைநகர் டெல்லியின் தனித்தன்மை வேறுபட்டது. இந்தியாவில் இது ஒரு மிகச் சிறிய மாநிலமாக இருந்தாலும் இதன் முக்கியத்துவம் அலாதியானது. இரண்டு கோடிக்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட இங்கே வேளாண் பிரச்சினைக்கோ, ஜாதி ரீதியிலான அரசியலுக்கோ இடம் கிடையாது. மற்ற மாநிலங்களில் இல்லாத அளவுக்கு காற்று மாசு, சுற்றுப்புறச்சூழல், போக்குவரத்து நெரிசல், மகளிர் பாதுகாப்பு, குடிநீர் வினியோகம், மின்வெட்டு இடையூறு, குப்பைகள் தேக்கம் உள்ளிட்ட நகர்ப்புறப் பிரச்சனைகள் தான் முன்னிலை வகிக்கின்றன. அதேநேரத்தில் அரசியல் மாற்றங்களும் உன்னிப்பாகக் கவனிக்கப்படுகின்றன. அண்மையில் பாஜகவின் அசுர பலத்தால் அரசியல் சாசனச்சட்டத்திற்கு எதிராக நிறைவேற்றப்பட்ட குடியுரிமை பாதுகாப்புச் சட்டத்திருத்தம் நாடு முழுவதும் மிகப்பெரிய கொந்தளிப்பையும் மத்திய அரசுக்கு எதிரான எழுச்சி மிக்க எதிர்ப்பலைகளையும் உருவாக்கி இருக்கிறது. இது தேர்தலில் பலம் கொண்டு எழுமானால் எதிர்க்கட்சிகள் தனித் தனியாக நின்று வாக்குகள் பிரிந்தாலும் பா.ஜ.கவுக்கு மிகவும் சொற்பமான இடங்களே கிடைக்கும் என்றுதான் எண்ணத் தோன்றுகிறது.

சென்ற ஆண்டு 2019 மக்களவை தேர்தலுக்கு முன்னதாக மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய மூன்று மாநிலங்களும், தொடர்ந்து மகாராஷ்டிரா, ஜார்கண்ட் ஆகிய இரண்டு மாநிலங்களும் காங்கிரஸ் அல்லது காங்கிரஸ் இடம் பெற்றுள்ள கூட்டணி வசம் வந்துள்ளன. இது பா.ஜ.கவின் இறுமாப்புக்கும் ஆணவத்திற்கும் ஏற்பட்டுள்ள எதிர்வினைதான் என்றாலும் இன்னும் பல மாநிலங்கள் பாஜகவின் ஆட்சி அதிகாரத்தில் இருந்து விடுபட்டாக வேண்டும்.

இப்போது 2020 புத்தாண்டு பிறந்திருக்கிறது. வரவிருக்கிற டெல்லி சட்டமன்றத் தேர்தலின் முடிவுகள் பா.ஜ.கவுக்கு மறக்கவியலாத பாடம் புகட்டும் முடிவுகளாக இவ்வாண்டின் கணக்கு தொடங்கப்பட வேண்டும். சென்ற ஆண்டு ஐந்து மாநிலங்கள். இந்த ஆண்டு அது இரு மடங்காக ஆகட்டும்; ஜனநாயகம் பிழைக்கட்டும்; ஆணவ அதிகாரம் ஒடுங்கட்டும்.

அன்புடன்
எம்.அப்துல் ரஹ்மான்
ஆசிரியர்
பிறைமேடை மாதமிருமுறை

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

2 × four =