“முத்தலாக் தடைச் சட்டம் ஒரு முரண்பாடே தான்; நாம் செய்யப் போவது என்ன? ”

0
51
ABDUL RAHMAN EX MP

பிரியமுள்ள பிறைநெஞ்சுக்கு!
எல்லாம் வல்ல இறைவனின் பேரருள் நம் அனைவரின் மீதும் என்றென்றும் நின்றிலங்கட்டுமாக!

“முஸ்லிம் பெண்களுக்கான பாதுகாப்புச் சட்டமசோதா & -2019” என்கிற பெயரில் முத்தலாக் தடைசட்ட மசோதா நாடாளுமன்ற இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டு, சென்ற 31.08.2019 அன்று குடியரசுத் தலைவராலும் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. கடந்த 2018- டிசம்பர் மாதத்தில் இந்த மசோதா நரேந்திர மோடி அரசால் மக்களவையில் நிறைவேற்றப்பட்டு, போதிய உறுப்பினர்கள் பாஜகவுக்கு ஆதரவாக இல்லாததால் மாநிலங்களவையில் தோற்றுப் போனது. இதில் பிடிவாதமாக இருந்த மத்திய அரசு அடுத்தடுத்து இரண்டு முறை ஜனாதிபதியின் அவசரச்சட்டம் மூலம் பிரகடனப்படுத்தியது. இத்தகைய அவசரச் சட்டம் ஆறு மாதத்துக்குள்ளாக நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படாமல் போனால் காலாவதி ஆகிவிடும் என்பதுதான் நடைமுறை. அதற்குள்ளாக இந்த சட்டமசோதா அவசர கோலத்தில் நாடாளுமன்ற இரு அவைகளிலும் சமர்ப்பிக்கப்பட்டு நிறைவேறி இருக்கிறது.

மோடி அரசு இரண்டாவது முறை ஆட்சிப் பொறுப்பிற்கு வந்த பிறகு முதலாவது மசோதாவாகக் கொண்டு வரப்பட்டது இந்த முத்தலாக் தடுப்புச் சட்ட மசோதாவைத் தான். மத்திய அரசின் அதிவேகத்தைப் பாருங்கள். மக்களவை சபாநாயகராக திரு.ஓம்பிர்லா ஜூன் – 19 இல் பொறுப்பு ஏற்கிறார். மறுநாளே ஜூன் – 20 இல் இந்த மசோதா நாடாளுமன்ற மக்களவையில் தாக்கல் செய்யப்படுகிறது. மத்திய அரசுக்கு தேசத்தின் பொருளாதார முன்னேற்றம், தொழில் வளர்ச்சி, வேலை வாய்ப்பு, விவசாய அபிவிருத்தி போன்ற அதிமுக்கியத்துவம் வாய்ந்த துறைகளைப் பற்றியெல்லாம் கவலை இல்லை. மாறாக முத்தலாக் தடைசட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்பதே குறி. ஆக, சிறுபான்மை முஸ்லிம் சமுதாயத்திற்கு எதிரான திட்டங்கள் எதுவானாலும், அவைகளை நடைமுறைக்குக் கொண்டு வருவதே முதல் வேலையாகவும், கடமையாகவும் நினைக்கிறது மோடியின் மத்திய அரசு.

ஒரு தடவை ”தலாக்” எனச் சொல்லிவிட்டாலே இஸ்லாத்தில் விவாகரத்து ஏற்பட்டுவிடுகிறது. அதே நேரத்தில் அவசரம் காட்டாமல், நிதானித்து பின் விளைவுகளையெல்லாம் யோசித்து, ஜமாஅத்தார் முன்னிலையில் சரியான சாட்சியங்களோடு தலாக் சொல்வதுதான் நமது மார்க்க ஒழுக்க நிலை. மூன்று தடவை ”தலாக்” சொல்வது என்பது வெவ்வேறு காலகட்டத்திற்கு உரிய சட்ட விதி. ஆனால் ஒரே நேரத்தில் மூன்று தடவை சொல்லி விவாகரத்துச் செய்வது என்பது மார்க்கத்தில் விரும்பத்தக்கதல்ல என்பதும் நமது மார்க்க ஒழுக்க நிலை. இதனை மீறுபவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். அப்படியானால் தகுந்த விசாரனை மேற்கொள்ளப்பட்டு, விதிமுறைகளை மீறுபவர்கள் யார் என்பதையும் விசாரித்து தகுந்த பரிகாரம் தேட வேண்டியது ஆங்காங்கே இருக்கக் கூடிய ஜமாஅத்தார்களின் பொறுப்பு; இதையும் தாண்டி நீதிமன்றம் இருக்கிறது. வழக்கு மூலம் அதற்குரிய தீர்வுகளையும் எட்ட முடியும். இப்படி இருக்கிற இந்த விஷயத்தில் கிரிமினல் குற்றமாக ஒரு தண்டனைச் சட்டத்தையே உருவாக்குவது என்பது மிகுந்த கண்டனத்திற்குரியது.

முத்தலாக் சம்பந்தமாக உச்சநீதிமன்றத்தில் 574 வழக்குகள் இருப்பதாக மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் சொல்லிவிட்டு, இந்த கிரிமினல் குற்றவியல் சட்டம் கொண்டுவருவதற்கான நியாயத்தைக் கற்பிக்கிறார். நாட்டில் 20 கோடி முஸ்லிம்களில் 10 கோடி பெண்கள் இருக்கின்றனர். இந்த 10 கோடியில் 574பேர் வழக்கு தொடர்ந்திருப்பது பெரிய எண்ணிக்கையாம்.

முஸ்லிம் சமுதாய தனியார் சட்டத்தில் கொஞ்சம் கொஞ்சமாக உள்ளே நுழைந்து, சீர்குலைவை உருவாக்கி நாட்டில் பொதுசிவில் சட்டத்தைக் கொண்டு வருவதற்கான சதித்திட்டத்தின் ஓர் அங்கமாகத்தான் இச்சட்டத்தைப் பார்க்க வேண்டியிருக்கிறது.

எப்படியோ பாஜகவினர் பெரும்பான்மை உறுப்பினர்களின் அசுர பலத்தைப் பயன்படுத்திக் கொண்டு நாடாளுமன்றத்தில் இச்சட்டத்தை நிறைவேற்றிவிட்டார்கள். இனி, நாம் இதனை எப்படி எதிர்கொள்ளப் போகிறோம்? என்பது தான் கேள்வி. இச்சட்டத்தால் முஸ்லிம் பெண்களுக்குப் பாதுகாப்பு ஏற்படுகிறது எனச் சொல்லுகிறது அரசு. மாறாக, பெண்களுக்கு இச்சட்டம் தண்டனை தான்; முஸ்லிம் ஆண்களை சிறைவாசம் கொள்ளச் செய்ய ஏதுவான எளிய வழிகள் கொண்டது இச்சட்டம். மொத்தத்தில் முஸ்லிம் ஆண்களுக்கும், பெண்களுக்கும் பல எதிர்வினைகளை ஆற்றும் இச்சட்டத்தின் பிடியிலிருந்து நாம் நம்மை சாத்வீகமான முறையில் தற்காத்துக் கொள்ள வேண்டியது நமது தலையாய கடமை.

சமுதாயத்தில் எவருக்கேனும் விவாகரத்து என்கிற நிலை ஏற்படுமாயின் அந்தந்த பகுதி காஜிகளின் ஒத்துழைப்போடு, ஜமாஅத்தாரின் ஆலோசனை பெற்று, நியாயமான பார்வை கொண்டு ஷரீஅத் காட்டிடும் வரைமுறைகளைத் தாண்டாது, மார்க்க அறிஞர்களின் வழிகாட்டுதலோடு சாத்வீகமான வகையில் விவாகரத்துக்களைத் கையாள்வது சாலச்சிறந்தது. இதில் முறைதவறிச் செல்லுகிறபோதுதான் விவகாரமாக மாறுகிறது. எனவே முத்தலாக் தடைசட்டம் என்ற ஒன்று இருந்தாலும் அதற்கு அவசியமே இல்லை என்கிற அளவுக்கு நமக்குள்ளேயே கட்டுப்பாடு இருக்க வேண்டியது மிக, மிக அவசியம். இக்கருத்தைக் கருவாகக் கொண்டு தான் மாநில ஜமாஅத்துல் உலமா சபையின் நிர்வாகம் அண்மையில் சமுதாயத்திற்கு ஓர் அறிக்கையை ஆலோசனையாகத் தந்திருக்கிறது.

மிக முக்கியமாக, நமது தமிழ்நாட்டில் எந்த பகுதியிலும் விவாகரத்து நிகழ்வுகள் நடப்பதற்குரிய அறிகுறி தெரியுமானல் ஆங்காங்கே உள்ள முஹல்லா ஜமாஅத் நிர்வாகம் உடனே தலையிட்டு, உண்மையான நிலையை ஆராய்ந்து, இருதரப்பு குடும்பத்தாரிடமும் கலந்துபேசி, நியாயப் பார்வையின்படி ஜமாஅத்தார் ஆலோசனைகள் பெற்று சுமூகமான முடிவுக்குக் கொண்டுவர முயற்சிப்பது மிக, மிக அவசியம், இது ஏதோ புதிதல்ல; காலம்காலமாக முஸ்லிம் சமுதாயத்தில் பாரம்பரிய வழக்கமாகக் கடைபிடித்து வரும் கலாச்சார தனித்தன்மைதான் இது. ஆனாலும் இந்த நடைமுறையில் எங்கேயாகிலும் சிறு இடைவெளி ஏற்பட்டிருந்தாலும் அதை சரிசெய்வது நமது முதல் கடமை. அத்துடன் அந்த நடைமுறையை செவ்வனே செப்பனிட்டுக் கொள்வது காலத்தின் கட்டாயம் என்பதையும் இக்காலச் சூழ்நிலை நமக்கு உணர்த்துகிறது.

சில சமயங்களில் முஸ்லிம் சமுதாய விவாகரத்து வழக்குகள் நீதிமன்றத்திற்குச் செல்லுகிறபோது நீதிபதிகளே இருதரப்பினரையும் நோக்கி “உங்கள் ஜமாஅத் நிர்வாகம் இந்த விஷயத்தில் என்ன சொல்கிறது?” என்று கேட்பதை நாம் பல நேரங்களில் பார்த்திருக்கிறோம்; அறிந்திருக்கிறோம். ஆக, முஹல்லா ஜமாஅத்துகளின் பங்களிப்பு இந்த விவகாரங்களில் எந்த அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை தெளிவாகப் புரிந்து கொள்வோம். எனவே விவாகரத்து வழக்கு என்று ஒரு வழக்கு கூட இனிமேல் நீதிமன்றங்களுக்குச் செல்லக் கூடாது. தீர்வுகளை நாமே உருவாக்கிக் கொள்ள வேண்டும். இன்ஷா அல்லாஹ்.

இந்த ஆட்சியில் சமுதாயம் எதிர்நோக்குகிற மிகப்பெரும் சவால்கள் ஒன்றன்பின் ஒன்றாக அணிவகுக்கத் தொடங்கிவிட்டன. அதுவும் சட்ட மசோதாக்களாக வெளிப்படுகிறபோது சிறுபான்மை முஸ்லிம் சமூகத்தை சட்டத்தைக் கொண்டே அடக்க நினைக்கும் பாஜக அரசின் அடாவடி போக்கு மிகவும் ஆபத்தானது. மிக மிக எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இரண்டாவது முறை நரேந்திர மோடி ஆட்சிக்கு வந்தவுடனேயே முத்தலாக் தடைசட்டம் எனத் தொடங்கி ஜம்மு-காஷ்மீர் மாநில சிறப்பு அந்தஸ்து எனும் 370ஆவது மற்றும் 35-ஏ சட்டப் பிரிவுகள் ரத்து காஷ்மீரின் புதிய மறுசீரமைப்பு என்கிற நிலை வரையிலுமான 36க்கும் அதிகமான சட்ட மசோதாக்கள் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டிருக்கின்றன என்றால் ஆட்சியாளர்களின் எல்லை மீறிய ஆணவப் போக்கை நன்றாகவே புரிந்து கொள்ள முடிகிறது.

மனதைரியத்தோடு எதிர்கொள்வதும், தன்னம்பிக்கையோடு செயல்படுவதும், ஒற்றுமையோடு மக்களை ஒருங்கிணைப்பதும், உளத்தூய்மையோடு இறைவனிடம் பிரார்த்தனை செய்வதும் நமது தொடர் கடமையாக இருக்கட்டும். நம்பிக்கையோடு காத்திருப்போம், எல்லாம் நன்மையாகவே அமையும், இன்ஷா அல்லாஹ்!

அன்புடன்
எம்.அப்துல் ரஹ்மான்
ஆசிரியர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

nineteen − 11 =