நிதிநிலை அறிக்கை ஒரு நீர்த்துப்போன நிர்மூலம்

0
79
ABDUL RAHMAN EX MP

பிரியமுள்ள பிறைநெஞ்சுக்கு!
எல்லாம் வல்ல இறைவனின் பேரருள் நம் அனைவரின் மீதும் என்றென்றும் நின்றிலங்கட்டுமாக!

இரண்டாவது முறையாகப் பொறுப்பேற்றுள்ள திரு. நரேந்திர மோடியின் தலைமையிலான நடுவண் அரசின் 2019-&20 ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை கடந்த 05.07.2019 அன்று மத்திய நிதி அமைச்சர் திருமதி நிர்மலா சீத்தாராமன் நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்திருக்கிறார். நாட்டின் முதல் பெண் நிதி அமைச்சர் என்கிற சிறப்பைப் பெற்றிருக்கும் நிர்மலா சீத்தாராமன் அவர்கள் பொருளாதார பட்டப்படிப்பை பயின்றவர் என்றாலும் அனுபவத்தால் அவர் இளமை தான். துணிச்சலும் கம்பீரமும் இல்லாத சோம்பல் வரிகளைக் கொண்ட இந்த நிதிநிலை அறிக்கை பலராலும் கவலையோடு விமர்சிக்கப்பட்டு வருகிறது. அதிலும் அரசியல் சாராத, பொருளாதார நுண்ணறிவு கொண்ட பல ஆய்வாளர்கள் அவரவர்களின் பார்வைக்கேற்ப ஏமாற்ற உணர்வை வெளிப்படுத்தியுள்ளனர்.

அமைச்சரின் உரை 2 மணி நேரம் 10 நிமிடங்கள்; 3,105 வரிகள்; 66 பக்கங்கள்; 20,000க்கும் மேற்பட்ட வார்த்தைகள், இவற்றோடு புறநானூற்று பாடல் வரிகள் வேறு. பெரும்பான்மையான ஆய்வுகளின்படி இந்த நிதிநிலை அறிக்கை இலக்குகள் இல்லாத ஒன்று என்றே விமர்சிக்கப்படுகிறது.
உலகில் ஆறாவது மிகப்பெரிய பொருளாதார வலிமை கொண்டது நமது நாடு. இப்போது தாக்கல் செய்யப்பட்டுள்ள மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையின் மதிப்பீடு ரூ. 27,86,349 கோடி. இது ஜி.டி.பியில் 13.2 சதவீதம். ஜி.டி.பி என்பது மொத்த உள்நாட்டு உற்பத்தியின் மதிப்பீடு. இந்த மதிப்பீட்டைக் கொண்டுதான் ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சியைத் தீர்மானிக்க முடியும். இதில் ரூ 7,03,760 கோடி நிதிப் பற்றாக்குறை என்று குறிப்பிடப்படுகிறது. ஒட்டுமொத்த அறிக்கையில் சுகாதாரம் குறித்து ஒரு வார்த்தை கூட இல்லை என்பது வேதனை அளிக்கிறது. கோரக்பூரிலும், முசாபர்பூரிலும் அரசின் கவனக் குறைவால் உயிரிழந்த குழந்தைகளின் சோகக் காட்சிகள் இதயத்தில் இறுகிப்போய் இருக்கும் இந்த நேரத்திலும் கூட இந்த துறையைப் பற்றிய எந்த அறிவிப்பும் இல்லாதது மிகப்பெரிய கேள்விக் குறியை உருவாக்கியிருக்கிறது. இந்த நிதிநிலை அறிக்கையில் சுகாதாரத்துறைக்கான ஒதுக்கீடு வெறும் ரூ 64,999 கோடி. அதாவது மொத்த நிதிநிலை அறிக்கையில் இது 2.3 சதவீதம் தான்.

பிரதமரின் “ஆயுஷ்மான் பாரத்” என்கிற மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் இந்திய மக்கள் தொகையில் 40% பேருக்கு ரூ 5 லட்சம் வரை காப்பீடு வழங்கப்படும் என்கிறபோது இதற்கு சுமார் ரூ 20,000 கோடி தேவைப்படும். ஆனால் நிதிநிலை அறிக்கையில் ரூ 6,420 கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ”ஆயுஷ்மான் பாரத்” என்பது எப்படி சாத்தியமாகும்? என்று தெரியவில்லை. நிர்மலா சீத்தாராமன் தான் விளக்க வேண்டும்.

பெட்ரோல் & டீசல் மீது லிட்டருக்கு ஒரு ரூபாய் கூடுதல் வரி விதிக்கப்பட்டிருக்கிறது. இதனால் மோட்டார் வாகனங்கள் வைத்திருப்போர் பாதிக்கப்படுவர் என்பது மட்டுமல்ல; நாட்டில் இதனை மையப்படுத்தியிருக்கும் பொருட்களின் விலை நிச்சயமாகக் கூடும். இதனால் விலைவாசி இன்னும் உச்சத்தைத் தாண்டும் எனும் அச்சமும் சூழ்ந்திருக்கிறது. அதே நேரத்தில் சீனாவைப் போல நம் நாட்டிலும் மின்சாரத்தால் இயங்கக் கூடிய வாகனங்களின் மீது பெருமளவில் வரியைக் குறைத்து இத்தகைய வாகனங்களை வாங்கக்கூடிய ஆர்வத்தை மக்களிடையே அதிகரிக்க செய்திருப்பது பாராட்டுக்குரியது.

விவசாயிகளுக்கான “கிஸான் சம்மான்” என்றழைக்கக்கூடிய வருவாய் உதவித் திட்டத்திற்கு ரூ 75,000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இது தேர்தலுக்கு முந்தைய இடைக்கால பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட திட்டம். விவசாயிகளின் முன்னேற்றத்திற்கு இந்த திட்டம் எந்த வகையிலும் பயன்தராது என்றே விமர்சிக்கப்படுகிறது. ஏனெனில் ஒரு விவசாயியின் குடும்பத்திற்கு ஆண்டுக்கு ரூ 6000 என்பது மாதத்திற்கு ரூ 500 மாத்திரம் தான். அப்படியானால் 5 பேர் கொண்ட ஒரு குடும்பத்திற்கு ஒருவருக்கு ஒரு மாதத்திற்கு ரூ 100 மட்டுமே கிடைத்திடும். இதையே நாள் அடிப்படையில் பார்த்தால் ஒரு நபருக்கு நாள் ஒன்றுக்கு ரூ 3.33 மட்டுமே கிடைக்கும். இதை வைத்து ஒரு விவசாயி என்ன செய்ய முடியும்? இந்த நிலையில் 2022 ஆம் ஆண்டுக்குள் இந்தியாவில் விவசாயிகளின் ஆண்டு வருவாயை இரட்டிப்பாக்குவோம் எனச் சொல்லும் மோடியின் அரசு என்ன செய்வதாகத் திட்டம்? தெரியவில்லை.

2024 ஆம் ஆண்டிற்குள் இந்தியா 5 லட்சம் கோடி டாலர் (இந்திய மதிப்பில் சுமார் ரூ 350 லட்சம் கோடி) பொருளாதார வளர்ச்சி நாடாக உருவாக வேண்டும் என்கிற எதிர்பார்ப்பினை இந்த நிதிநிலை அறிக்கை வெறும் வார்த்தை அலங்காரமாகக் காட்டுகிறது. ஆனால் அதற்கு ஏற்றவகையில் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கான திட்டங்கள் பட்ஜெட்டில் தெளிவாக்கப்படவில்லை. அதே நேரத்தில் வரி வசூல் மூலம் நாட்டுமக்களைக் கசக்கிப் பிழிந்து வருவாயை அதிகப்படுத்துவது என்பது நம் நாட்டு பொருளாதார பாரம்பரிய கலாச்சாரத்துக்கு உகந்ததல்ல. சென்ற 2017 ஜூலை – 1 லிருந்து நடைமுறைக்குக் கொண்டுவரப்பட்ட ஜிஎஸ்டி என்கிற பூதம் நடுத்தர மற்றும் எழை எளியவர்களின் வாழ்க்கையில் பெரும் அதிர்வைத் தந்திருக்கிறது. காரணம் 2018- இல் 3.38% உயர்வைக் காட்டிய இந்த வரிவிதிப்பு, இப்போது இந்த நிதிநிலை அறிக்கையில் 45% உயர்வை நாங்கள் அறிவிப்போம் என்று சொல்லப்பட்டுள்ளது. இந்த உயர்வு எங்கே சென்று பாதிக்கும்? கார்ப்பரேட் நிறுவனங்களையா? இல்லை, சாதாரண சமான்ய மக்களையும், அம்மக்கள் நடத்தி வருகிற சிறுகுறு வணிகங்களையும் தான் பாதிக்கும்.

நிதி அமைச்சர் மேற்கோள் காட்டிய புறநானூற்றுப் பாடலுக்கு எதிராகவே இந்த பட்ஜெட் இருப்பதையும், நாம் பார்க்கிறோம். “வரித் திணிப்புச் செய்து, இரக்கமின்றித் தன் குடிமக்களைக் கசக்கிப் பிழிந்து வரிவசூல் செய்ய அரசன் முற்பட்டால் அந்த நாடு ”யானை புக்க பலம்” போல அவனுக்குப் பயன் தராமல், மக்களும் பயன்கொள்ள வழியில்லாமல் சீர்கெடும் என்பதுதான் அந்த பாடல் வரிகளின் கருத்து. அப்படியா மக்கள் மீது வரிச்சுமை இல்லாமல் இந்த நிதிநிலை தயாரிக்கப்பட்டுள்ளது?
மோடியின் அனுகுமுறை கார்ப்ரேட்டுகளின் கைப்பைக்குள் அடக்கமாகிப் போய், ஏழை, எளிய, விவசாய அன்றாட கூலித் தொழிலாளர்கள் தொடங்கி நடுத்தர வர்க்கத்தினர் வரை இந்த பட்ஜெட்டால் பெருமளவில் பாதிக்கப்படுவர் என்கிற வெளிச்சம் தான் தெரிகிறது. பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டி வரிவிதிப்பு, பெட்ரோல்- டீசல் விலை உயர்வு போன்றவைகள் தான் சராசரி வாழ்வு நிலையில் இருப்போரைக் கசக்கிப் பிழிகிறது என்கிற உண்மை காட்சிகளை அன்றாடம் கண்டு வருகிறோம். இந்த நிலை தொடருமேயானால் பணக்காரர்களும் பெருமுதலாளிகளும் மாத்திரமே சுகம் அனுபவித்து, மற்றவர்களெல்லாம் அடிமைகளைப் போன்று நடத்தப்படுவர் என்கிற அச்சம் தான் உருவாகியிருக்கிறது.

மொத்தத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமனின் நிதிநிலை அறிக்கை எந்த வகையிலும் திட நம்பிக்கையைத் தரவில்லை; மாறாக நீர்த்துப் போன நிர்மூலமாகவே தெரிகிறது.

இந்த அபாயத்திலிருந்து இந்தியா மீண்டு வருவது எப்போது?

தொடர்ந்து முயற்சிப்போம். தயக்கமும் வேண்டாம்; தளர்ச்சியும் வேண்டாம். நம்பிக்கையுடன் பயணிப்போம்…

– அன்புடன்
எம்.அப்துல் ரஹ்மான்
ஆசிரியர்
பிறைமேடை மாதமிருமுறை

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

eighteen − 12 =