ABDUL RAHMAN EX MP

பிரியமுள்ள பிறைநெஞ்சுக்கு!
எல்லாம் வல்ல இறைவனின் பேரருள் நம் அனைவரின் மீதும் என்றென்றும் நின்றிலங்கட்டுமாக!

அரசு நிர்வாகம் என்பது நாட்டின் வளர்ச்சியையும், அதன் எல்லை பாதுகாப்பு, இறையான்மை மீதான நம்பகத் தன்மையையும் இலக்காகக் கொண்டிருந்தால் அந்த நிர்வாகம் சிறந்தது எனலாம். ஆனால் அதற்கு நேர்மாறாக மத்திய பாஜக அரசின் நிர்வாகம் நாட்டின் பொருளாதார தேக்கத்தையும், வளர்ச்சியின் பின்னடைவையும், அரசியல் சாசன சட்டத்தின் மீதான அவநம்பிக்கையையும் பெருமளவில் உருவாக்கி இருக்கிறது. நாடு விடுதலை பெற்ற பின் இப்படி ஒரு சோதனையையும் வேதனையையும் மக்கள் சந்தித்ததே இல்லை என்பதுதான் எதார்த்தம்.

சென்ற ஆண்டு 2019இல் நடந்து முடிந்த நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் அதிக இடங்களைப் பெற்று ஒருவிதமான மிருக பலத்துடன் ஆட்சி அதிகாரத்தில் பாஜக மூழ்கி இருக்கிறது. அதன் செயல் திட்ட வரிசையில் ஒன்றன்பின் ஒன்றாக எல்லாமும் நடந்து வருகின்றன.இரண்டாவது முறையாக ஆட்சிக்கு வந்தவுடன் அவசர அவசரமாக முத்தலாக் தடை சட்டம், அதனைத்தொடர்ந்து காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து 370 ஆவது பிரிவு நீக்கம், உச்ச நீதிமன்றம் மூலம் அயோத்தி தீர்ப்பு பெற்றது எனும் தொடராக அண்மையில் குடியுரிமை திருத்த சட்டம் என்ற கொடூர சர்வாதிகார ஆணை நாடெங்கிலும் பேரதிர்ச்சியை உருவாக்கிவிட்டது. சிறுபான்மை முஸ்லிம் சமுதாயத்தை குறிவைத்து வேட்டையாட துடித்திடும் பாஜகவின் விஷம் தடவிய அம்புதான் இது என்பதே உண்மை.

இந்த குறுகிய பார்வை கொண்ட அரசியல் கட்டமைப்புக்கு எதிரான குடியுரிமை திருத்த சட்டம் நாடெங்கிலும் மிகப்பெரிய புயலை உருவாக்கி இருக்கிறது. இது அசாமில் குடியேறிய மக்களில் முஸ்லிம் சமூகத்தினர் மட்டும் குடியுரிமை பெற முடியாது என்கிறது. இதனால் கொதித்தெழுந்த முஸ்லிம் சமூகத்தினர் இடைவிடாத ஆர்ப்பாட்டம், கண்டனப் பேரணிகள் என மிகுந்த எழுச்சிப் பெருக்குடன் ஆர்ப்பரித்து வருகின்றனர். முஸ்லிம் சமூகம் என்று மாத்திரமே இல்லாமல் எல்லா சமூக மக்களும் ஒன்று திரண்டு இந்த அநீதிக்கு எதிராக முழக்கங்களைத் தொடுத்து வருகின்றனர். இதுவரையிலும் இந்தியா சந்தித்திராத மக்கள் எழுச்சி இது. முஸ்லிம்களை தனியே பிரித்தாளும் நடுவனரசின் நரித்தனம் தான் இது என புரிந்து கொண்ட சர்வதேச நாடுகளின் பார்வை இப்போது நரேந்திர மோடி – அமித்ஷா ஜோடியை கட்டம் கட்டி இருக்கிறது.

இதனால் இனிவரும் காலங்களில் மத ரீதியிலான சட்டங்களையும் சட்டதிருத்தங்களையும் செய்ய முனைப்பு காட்டுகிற போது “உலக நாடுகளின் பார்வை நம்மீது இருக்கிறது, சற்று எச்சரிக்கையாக செயல்பட வேண்டும்” என்கிற அச்ச உணர்வை பாஜகவிற்கு ஏற்படுத்தி யிருப்பதை மறுத்திட இயலாது.

ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்கள் எல்லாம் ஜனநாயகத்தின் ஒரு முக்கியமான அம்சம். அவை பொதுவெளியில் அரசுக்கு எதிராக எழுவதைத் தவிர்க்க முடியாது. அதே நேரத்தில் வன்முறையின் வாடை கூட இல்லாமல் கவனமாக இருக்க வேண்டும் என்பதிலும் இருவேறு கருத்துக்கள் இருக்க முடியாது. ஆனால் ‘ஆர்ப்பாட்டக்காரர்களை அடக்குகிறோம்’ என்ற பெயரில் காவல்துறையைப் பயன்படுத்திக் கொண்டு, அடாவடி ஆட்கள் உள்ளே நுழைந்து அமைதி வழியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் போராட்டக்காரர்கள் மீது வன்முறையைக் கட்டவிழ்த்து விடுவதை ஏற்க முடியாது. இதுதான் டெல்லியில் ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகத்திலும், ஜாமியா மில்லியா பல்கலைக்கழகத்திலும் நடந்தது.

அண்மையில் சென்னை வண்ணாரப்பேட்டையில் நடந்ததும் அப்படியேதான். இந்த அடக்குமுறையின் எதிரொலியாக அன்றிரவே தமிழகம் முழுவதும் மக்கள் ஆங்காங்கே ஒன்று திரண்டு தமிழக அரசையும் தமிழக காவல்துறையையும் மிகக் கடுமையாகக் கண்டித்து குரல் எழுப்பினார்கள். கூட்டம் கட்டுக்கடங்காத நிலை வரை சென்றதால் வேறுவழியில்லாமல் காவல்துறை அதிகாரிகளும் கைகட்டி வாய்மூடி நின்றனர். இதனாலேயே அனைத்து போராட்டங்களும் அமைதியாகவே நடந்தன. அதே நேரத்தில் வீறுகொண்டு நடைபெற்றன.

டெல்லி ஷாஹின் பாக் என்ற இடத்தில் பெண்கள் பெருமளவில் கூடி தொடர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான கண்டனக் குரலை எழுப்பி வருகின்றனர். இதை அப்படியே பிரதிபலிக்கக் கூடிய வகையில் நாடு முழுவதும் குறிப்பாக தமிழகத்தின் பல பகுதிகளிலும் பல்வேறு சமூக மக்கள் ஒன்று திரண்டு ‘குடியுரிமை பாதுகாப்பு அறப்போராட்டம்’ என்றே பெயரிட்டு இரவு பகல் பாராமல் தொடர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருவதைப் பார்க்கிறோம்.

மக்களின் ஆர்ப்பாட்ட எழுச்சியை மேலும் மேலும் அதிகரிப்பதற்கு உரிய காரணம் என்பிஆர் என்கிற தேசிய மக்கள் தொகைப் பதிவேடும், என்ஆர்சி என்கிற தேசிய குடியுரிமைப் பதிவேடும் இந்திய மக்களை மதரீதியாகக் கூறுபோட்டு, குறிப்பாக முஸ்லிம் மற்றும் சிறுபான்மை மக்களையும் தலித் மக்களையும் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கி விட்டு அதைத் தொடர்ந்து குடியுரிமையையும் இல்லாமல் ஆக்குவது என்பதே ஆகும். இதனால்தான் நாட்டு மக்கள் மிகக் கடுமையாக எதிர்க்கின்றனர். இந்த உண்மையைப் புரிந்தும் நமது தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி “குடியுரிமை திருத்தச் சட்டத்தால் இங்கு எவறுக்கும் பாதிப்பில்லை; இந்த நிலையில் ஏன் இப்படி போராடுகிறீர்கள்?” என சிறுபிள்ளைத்தனமான கேள்வியைக் கேட்டுக் கொண்டிருக்கிறார். நாடெங்கிலும் 11 மாநிலங்களின் முதலமைச்சர்கள் ‘இந்த NRCயை எங்கள் மாநிலத்தில் நடைமுறைப்படுத்த மாட்டோம்’ என அறிவித்துள்ளனர். சிஏஏவை எதிர்த்து 7 மாநிலங்கள் சட்டசபைத் தீர்மானம் நிறைவேற்றி இருக்கின்றன.

உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் முஸ்லிம் விரோத பார்வை ஓவர்ஸ்டே என்று சொல்லக்கூடிய காலாவதியான விசாவைப் புதுப்பித்துக் கொள்வதிலும் நுழைந்திருக்கிறது. பாகிஸ்தான், பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளிலிருந்து உரிய விசாவைப் பெற்று இந்தியா வந்துள்ளவர்களில் முஸ்லிம் அல்லாதவர்கள் அதிகபட்சமாக ரூபாய் 300 மட்டும் கொடுத்து விசாவைப் புதுப்பித்துக் கொள்ளலாம்.ஆனால் முஸ்லிமாக இருந்தால் 500 டாலர் அதாவது 36 ஆயிரம் ரூபாய் செலுத்தி விசாவைப் புதுப்பித்துக் கொள்ளலாம் என உள்துறை அறிவித்திருக்கிறது. இங்கே எல்லோருக்கும் 300 ரூபாய் கட்டணம். முஸ்லிம்கள் என்றால் 36 ஆயிரம் ரூபாய் கட்டணம். இதிலிருந்தே ஆட்சியாளர்களின் மத துவேசத்தின் உச்சத்தைப் பார்த்துக்கொள்ளலாம்.

நாட்டு மக்களின் உணர்வுகளைப் புரிந்து நடக்கிற அரசாக மத்திய அரசு இல்லை என்றால் மக்களே முன்வந்து மத்தியில் ஆளக்கூடிய கட்சியை தூக்கி எறிவார்கள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அதற்கு முதல் அச்சாரமாக கடந்த 8.2.2020 அன்று நடைபெற்ற டெல்லி மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள் கட்டியம் கூறுவதைப் பார்க்கலாம். 2019 நாடாளுமன்றத் தேர்தலில் 7 தொகுதிகளையும் வெற்றிகொண்டு 56 சதவீத வாக்குகளைப் பெற்ற பாஜக இப்போது நடைபெற்று முடிந்திருக்கிற டெல்லி சட்டமன்றத் தேர்தலில் அதன் வாக்கு வங்கி 38% எனச் சரிந்ததோடு வெறுமனே 8 சட்டமன்ற தொகுதிகளை மட்டுமே பெற முடிந்திருக்கிறது.

மத்திய பாசிச ஆட்சியின் மீது மக்கள் கொண்டிருக்கும் வெறுப்பு இந்த புதிய வருடத்தின் கணக்கைத் தொடங்கி இருக்கிறது. இனி பாஜகவுக்கு கிடைக்கப் போகிற வெகுமதி தொடர் தோல்விகளாகவே இருக்கும் என எதிர்பார்ப்போம்.

மதவெறிக் கும்பலிடமிருந்தும், பாசிச வெறியர்களிடமிருந்தும் முதலாளித்துவ ஆணவத்திலிருந்தும் இந்த தேசம் மீட்டெடுக்கப்பட வேண்டும்; ஜனநாயகம் காப்பாற்றப்பட வேண்டும்.

தொடர்ந்து போராடுவோம்! அயராது உழைப்போம்! தேசத்தை மீட்டெடுப்போம்! இன்ஷா அல்லாஹ்.

– அன்புடன்
எம்.அப்துல் ரஹ்மான்
ஆசிரியர்
பிறைமேடை மாதமிருமுறை

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

one × 4 =